பெல்ஜியம் நாட்டு மக்களுக்கானத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் பெல்ஜியம் நாட்டு மக்களுக்கானத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

சிறார் முறைகேடுகளுக்குக் காரணமாக யார் இருந்தாலும் அது குற்றமே

திருஅவையில் முறைகேடுகளுக்கு இடமில்லை, அதனை மூடி மறைப்பதற்கு இடமில்லை என்று திருத்தந்தை அவர்கள் சாடியதையும் எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப் பயணங்களின் போது தான் சிந்திக்கும் சவால்கள், நிகழ்காலத்தில் நிலவும் துன்பங்கள் போன்றவற்றிற்கு தன்னைக் கையளித்து விடுகின்றார் என்றும், குழந்தைகள் மீதான முறைகேடுகளை அருள்நிலையில் இருக்கக்கூடியவர்கள் செய்தாலும் அது குற்றமே என்று உரக்க எடுத்துரைத்தார் திருத்தந்தை என்றும் கூறினார் முனைவர்  அந்திரேயா தொர்னியெல்லி.

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணமானது பல முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டு தனது அனுபவங்களை கருத்துக்களாகக் காணொளி ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளார் வத்திக்கான் தகவல்தொடர்புத்துறைத் தலைவர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

பெல்ஜியம் அரசர், பிரதமர் முன்னிலையில் மாணவர்கள் நடித்துக்காட்டிய குழந்தைகள் மீதான முறைகேடுகள் பற்றிய காணொளியினைக் கண்ட திருத்தந்தை அவர்கள் இத்தகைய முறைகேடுகளை அருள்நிலையில் இருக்கக்கூடியவர்கள் செய்தாலும் அது குற்றமே என்று உரக்க எடுத்துரைத்தார் என்றும் கூறினார் முனைவர் தொர்னியெல்லி.

தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரைகளில் இடம்பெறாத கருத்துக்களான ஏரோது அரசனால் கொல்லப்பட்ட தூய மாசற்ற குழந்தைகள் பற்றி எடுத்துரைத்து அது இன்றும் நிகழ்கின்றது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியதையும் எடுத்துரைத்துள்ள முனைவர் தொர்னியெல்லி அவர்கள், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வத்திக்கானில் நடைபெற்ற வன்முறைக்கு எதிரான மாநாட்டிலும், மாசற்ற குழந்தைகளுக்கு எதிரான ஏரோதின் இந்த கொடிய செயலுக்குப் பின் அலகை உள்ளது என்று திருத்தந்தை  எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசர் பால்டோவின் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட இருவரை புரூக்செல்ஸ் திருப்பீடத்தூதரகத்தில் சந்தித்ததை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருஅவையில் முறைகேடுகளுக்கு இடமில்லை, அதனை மூடி மறைப்பதற்கு இடமில்லை என்று சாடியதையும் எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.

சிறார் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் ஆயர், அருள்பணியாளர், பொதுநிலையினர் என யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதனைத் துணிவுடன் எடுத்துரைக்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார். மேலும் தங்களது குழந்தைகள் அறிவிலும் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கவேண்டுமென்று அனுப்பும் குடும்பத்தில் உள்ளவர்கள், அக்குழந்தைகள் உடல் மன ஆன்ம அளவில் பாதிக்கப்பட்டு திரும்புவதைப் பார்க்கின்றார்கள் இது களையப்படவேண்டியது என்று கூறியதையும் நினைவுகூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.

மேலும் திருத்தந்தை 16 பெனடிக்ட் கூறிய வார்த்தைகளான “திருஅவையின் எதிரி அதன் வெளியில் அல்ல, மாறாக, அதனுள் இருக்கும் பாவமே என்பதையும் சுட்டிக்காட்டிய தொர்னியெல்லி அவர்கள், முறைகேடுகள் அவமானம் தரக்கூடியவை என்றும் கூறினார்.

தாழ்ச்சியாக இருத்தல் மற்றும் மன்னிப்பு கேட்பது என்பது ஆழமான கிறிஸ்தவ மனப்பான்மை என்றும், திருஅவை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகளால் ஆனது, அதற்குள் ஏற்பட்ட அனைவரையும் பாதிக்கும் காயம் என்பதையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2024, 14:35