முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி. முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி. 

நம்பிக்கைக் கொண்டவர்களை இணைக்கும் உடன்பிறந்த உறவிற்கானப் பாதை

ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணமானது மிக நீண்ட பயணம் - முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரின் போது வீரர்கள், இராணுவத்தார் மறைந்து கொள்வதற்கும், பிணையக்கைதிகளை மறைத்து வைப்பதற்கும் பல சுரங்கப்பாதைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட மக்களை நட்பில் இணைக்கும் வகையில் உடன்பிறந்த உறவிற்கான சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

செப்டம்பர் 2 திங்கள் கிழமை முதல் 13 வெள்ளிக்கிழமை வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள உள்ள ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப்பயணத்தில் இடம்பெற உள்ள உடன்பிறந்த உறவிற்கான சுரங்கப்பாதை குறித்து வத்திக்கான் செய்திகளுக்கான ஆசிரியர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் வத்திக்கான் தகவல்தொடர்புத்துறை தலைவர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.

ஜகார்த்தாவில் உள்ள, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இஸ்திக்லால் மசூதி மற்றும் கத்தோலிக்கர்களின் புகழ்பெற்ற ஆலயமான விண்ணேற்பு அன்னையின் திருத்தலம் ஆகியவை எதிரெதிராக இருந்தாலும் மூன்று சாலைகளால் பிரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள தொர்னியெல்லி அவர்கள், இவை இரண்டையும் இணைக்கும் வண்ணமாக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பழைய சுரங்கப்பாதையானது பல்வேறு கலைப்படைப்புக்களால் புதுப்பிக்கப்பட்டு உடன்பிறந்த உறவிற்கான சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட்டு முஸ்லீம்கள் செபிக்கும் இடமாகவும், கிறிஸ்தவர்கள் திருநற்கருணைக் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் தொர்னியெல்லி.

போர்கள், மோதல்கள், வன்முறை, வெறுப்பு, போன்ற நெருப்புக்கள் மேலோங்குவதைத் தடுக்க நட்புறவுக்கான பாதைகளை நாம் கண்டறிய வேண்டும் என்றும், உடன்பிறந்தோராகிய நாம் அனைவரும் அமைதி மற்றும் உரையாடல் மீது நமது உறுதியான கவனத்தை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உறவின் பாலங்களைக் கட்டிய திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் என்று எடுத்துரைத்துள்ள தொர்னியெல்லி அவர்கள், உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேசியாவிலிருந்து பாப்புவா நியூ கினியாவிற்கும், பின்னர் கிழக்கு திமோர் மற்றும் இறுதியாக சிங்கப்பூருக்கும் திருத்தந்தை செல்ல இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் ஒரு சிறு மந்தையாக இருக்கும் இந்தோனேசியா கிறிஸ்தவர்கள், மக்கள் முழுவதையும் அடையாளப்படுத்தும் கிழக்கு திமோர் மக்கள் என அனைவரையும் சந்தித்து நட்புறவை வளர்க்கவும், நாம் அனைவரும் தடைகள், சுவர்கள், வன்முறை, போன்றவற்றால் பிரிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக திருத்தந்தையின் இத்திருத்தூதுப்பயணம் அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார். வெவ்வேறு நம்பிக்கைகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் இணைந்து ஒருவரை ஒருவர் மதித்து இணைந்து செயலாற்றலாம் என்று குறிப்பிட்டுள்ள தொர்னியெல்லி அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, பெருந்தொற்றுநோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், ஆசியா மற்றும் ஓசியானியா திருத்தூதுப் பயணம் இன்று நிறைவேறி இருக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2024, 12:35