அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டின் 68-வது அமர்வு அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டின் 68-வது அமர்வு  (AFP or licensors)

அணுஆயுத பரவல் தடைக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் திருப்பீடம்!

அணு ஆயுதம் இல்லாத உலகத்தை ஏற்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) முக்கியப் பங்கை திருப்பீடம் ஒப்புக்கொள்கிறது : பேராயர் பால் ரிச்சர்டு காலகர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

அணு ஆயுத பரவல் தடை மற்றும் உக்ரைனில் போரினால் அச்சுறுத்தப்பட்ட மின் நிலையங்களின் பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை திருப்பீடம் மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

செப்டம்பர் 16 முதல் 20 வரை வியன்னாவில் இடம்பெற்று வரும் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டின் 68-வது அமர்வின் முதல் நாளில் நிகழ்த்திய உரையின்போது இவ்வாறு தெரிவித்தார் பேராயர் காலகர்.

அணு ஆயுதம் இல்லாத உலகத்தை ஏற்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) முக்கியப் பங்களிப்பைத் திருப்பீடம் ஒப்புக்கொள்கிறது என்று குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், இது சாத்தியமானது மற்றும் அவசியமானது என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அணு ஆயுத பரவல் தடைக்கான அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பல பங்களிப்புகளுக்கும், அதன் அணுசக்தி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான, இடரற்ற மற்றும் அமைதியான பயன்பாட்டிற்கும் திருப்பீடம் தனது உறுதியான ஆதரவை வழங்குகிறது என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார் பேராயர்.

மேலும் இந்தத் தொழில்நுட்பங்கள் எப்போதும் மனிதகுலத்தின் பொது நலன் மற்றும் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார் பேராயர்.

ஈரானுடன் அணுசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான அனைத்துலக அணுசக்தி அமைப்பின்  தொடர்ச்சியான முயற்சிகளை திருப்பீடம் வரவேற்றது என்றாலும், அது தனது அணுசக்தி செயல்படுத்துதலை நிறுத்தியதற்குத் தனது வருத்தத்தை தெரிவிப்பதாகவும் உரைத்தார் பேராயர் காலகர்.

அணு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கும் அமைதியான அணு அறிவியலின் நன்மைகளைப் பரப்புவதற்கும் மற்றும் வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்பம் கிடைக்க உதவுவதற்கும் திருப்பீடத்தால் கையொப்பமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2024, 14:16