ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றும் கர்தினால் பரோலின் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றும் கர்தினால் பரோலின் 

திருப்பீடம் : கரைந்துரையாடல் வழி அமைதியைக் கட்டியெழுப்ப....

வருங்காலத்தை கட்டியமைக்க தேவைப்படும் முன்நிபந்தனைகளாக, கலந்துரையாடல், ஏழ்மை அகற்றல், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தல் போன்றவை தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமைதியின் மறுபெயர் வளர்ச்சி என்பதை மனதில் கொண்டவர்களாக, கடன்கள் அகற்றப்படவும், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவும் உலக நாடுகள் உழைக்கவேண்டும் என ஐ.நா. கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐ.நா. நிறுவனத்தின் 79வது பொதுஅவைக் கூட்டத்தில்,  வருங்கால வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், வருங்காலத்தை கட்டியமைக்க தேவைப்படும் முன்நிபந்தனைகளாக, கலந்துரையாடல், ஏழ்மை அகற்றல், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தல் போன்றவைகள் கைக்கொள்ளப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

‘பன்முக வணிகமுறையின் நெருக்கடிச் சூழலில் நம்பிக்கையின் கருத்தரங்கு' என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்ட திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், கலந்துரையாடல் வழியாகவே அமைதியைக் கட்டியெழுப்ப முடியும், ஏழ்மை அகற்றல், ஒன்றிணைந்த மனித குல வளர்ச்சி, நாடுகளின் சரிநிகர்தன்மையும் இறையாண்மை மாண்பும், கடன்கள் அகற்றப்படல், அணுஆயுதங்களை ஒழித்தல் போன்றவைகளைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்டார்.  

செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் ஆபத்துக்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்தும் இக்கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச்செயலர், கருக்கலைத்தல் மறுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

நாடுகளுக்கிடையேயான நம்பிக்கைகள் குறைவுபட்டு வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், இதனாலேயே நாடுகளிடையே மோதல்கள் அதிகரித்துவருவதையும் எடுத்துரைத்தார்.

பல்வேறு அரசுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஐ.நா. உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பீடம் சார்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் சென்றிருக்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டில் இம்மாதம் 30ஆம் தேதிவரை தங்கியிருப்பார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2024, 15:22