கொரிய இளையோருடன் போர்த்துக்கல்லில் திருத்தந்தை கொரிய இளையோருடன் போர்த்துக்கல்லில் திருத்தந்தை  (ANSA)

2025 மற்றும் 2027ன் உலக இளையோர் தின தலைப்புகள் அறிவிப்பு

பல்வேறு மத பாரம்பரியங்களைக் கொண்டிருந்தாலும் மக்களிடையே இணக்க வாழ்வைக் கொண்டிருக்கும் தென் கொரியா, உலக இளையோருக்கு நல்லதொரு செய்தியை வழங்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜூபிலி ஆண்டான 2025ல் கொண்டாடப்படவிருக்கும் 40வது உலக இளையோர் தினத்துக்கும், 2027ல் தென்கொரிய தலைநகரில் சிறப்பிக்கப்படவிருக்கும் 41வது இளையோர் தினத்துக்கும் மையக்கருத்துக்களை அறிவித்துள்ளது திருப்பீடம்.

“நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்க முதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்” (யோவா 15:27) என்ற இயேசுவின் வார்த்தைகள் வரும் ஆண்டில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்திற்கு என எடுக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் தென்கொரியாவின் சியோல் நகரில் உலக இளையோரின் பங்கேற்புடன் சிறப்பிக்கப்படவுள்ள உலக இளையோர் கொண்டாட்டங்களுக்கு, “துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவா 16:33) என்ற இயேசுவின் வார்த்தைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 2027ன் உலக இளையோர் தினக் கொண்டாட்ட தயாரிப்புகள்  குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய, 2027ன் இந்த இளையோர் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர், ஆயர் Paul Kyung Sang Lee அவர்கள், பல்வேறு மத பாரம்பரியங்களைக் கொண்டிருந்தாலும் மக்களிடையே இணக்க வாழ்வைக் கொண்டிருக்கும் தென் கொரியாவில் உலக இளையோர் நாளை சிறப்பிக்க வரும் இளையோருக்கு நல்லதொரு செய்தியை வழங்க முடியும் என்றார்.  

கடந்த எழுபது ஆண்டுகளாக பிரிந்திருக்கும் கொரிய நாடுகளின் மக்கள் அமைதியிலும் ஒன்றிப்பிலும் வாழவேண்டும் என்பதற்காக தலத் திருஅவை தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார் ஆயர் Kyung Sang Lee.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2024, 14:53