திருப்பீடப் பிரதிநிதி கபிரியேலே காச்சா திருப்பீடப் பிரதிநிதி கபிரியேலே காச்சா 

போதைப்பொருள் பயன்பாடும் கடத்தலும் அதிகரித்துள்ளதாக கவலை

சட்டம் மூலம் தடுப்பு, பாதிக்கப்பட்டோர்க்கான மீட்புப்பணி, கல்வி வழி தடுப்பு நடவடிக்கைகள் என போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்வைக்கும் திருப்பீடம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த அரசியல் ரீதியான ஒப்பந்தம் 2009ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் போதைப்பொருள் பயன்பாடும், பன்னாட்டு அளவிலான போதைப்பொருள் கடத்தலும் அதிகரித்தே வருவதாக கவலையை வெளியிட்டார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா.

ஐ.நா. நிறுவனத்தின் 79வது பொதுஅவைக் கூட்டத்தின் மூன்றாவது அவையில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், தனியார்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீது போதைப்பொருள் பயன்பாடுகளால் ஏற்படும் அழிவுகளைப் பார்க்கும்போது, சட்டம் மூலம் தடுப்பு, போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டோர்க்கான மீட்புப்பணி, கல்வி வழி தடுப்பு நடவடிக்கைகள் என மூன்று பாதைகள் வழி அரசுகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என திருப்பீடம் விரும்புவதாகத் தெரிவித்தார்.     

பலன் தரும், நீதியான, மனிதாபிமானமிக்க மற்றும் நம்பத்தகும் குற்றவியல் நீதி அமைப்பு உருவாக்கப்பட்டு போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுக்கப்படவேண்டும் என திருப்பீடம் விரும்பும் அதேவேளை, மனித மாண்புக்கு எதிராகச் செல்லும், சட்ட விரோதத் தண்டனைகள், சித்ரவதைகள் மற்றும் மரணத்தண்டனைகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார் பேராயர்.

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை தருவதில் மட்டுமே குற்றவியல் நீதி அமைப்புமுறை கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்கி அவர்களை சமுதாயத்திற்குள் ஒன்றிணைக்க அரசுகள் முயலவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேராயர் காச்சா.

போதைப்பொருட்களின் தீய விளைவுகள் குறித்து இளவயதிலேயே குழந்தைகளுக்கு குடும்பத்திலும், கல்வி நிலையங்களிலும் போதிய அறிவுரைகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர், போதைப்பொருள் தயாரிப்பையும் வியாபாரத்தையும் கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதேவேளை, வன்முறையையும், துன்பத்தையும், சாவையும் விதைக்கும் போதைப்பொருட்களை எதிர்ப்பதில் சமூகமும் தன் மனவுறுதியைக் காட்டவேண்டும் என மேலும் அழைப்புவிடுத்தார் திருப்பீட பிரதிநிதி பேராயர் காச்சா.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது உயிரிழந்த அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு சிறப்பு புகழ்மாலைச் சூட்ட திருப்பீடம் ஆவல் கொள்வதாகவும், இன்றைய உலகில் இடம்பெற்றுவரும் மனித உறுப்புகளுக்கான ஆள்கடத்தல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2024, 16:23