ஆயர் மாமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதி ஆயர் மாமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதி  (ANSA)

அகில உலக திருஅவையுடன் இணைந்திருக்கும் சீனத் திருஅவை

நற்செய்தி அறிவிப்புப் பணி, மேய்ப்புப் பணி பராமரிப்பு, சமூக சேவை, இறையியல் போன்ற தலைப்புகளில் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது சீனத் திருஅவை

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

சீனாவில் உள்ள திருஅவை உலகின் பிற நாடுகளில் உள்ள கத்தோலிக்க திருஅவையைப் போன்றதே என்றும், சீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே நம்பிக்கையைச் சேர்ந்தவர்கள், ஒரே தூய, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருஅவைக்கு உண்மையுள்ளவர்கள் என்றும் உலக ஆயர் மாமன்றத்தில் பங்கேற்ற சீனாவின் Zhejiang  தலைநகரான Hangzhouன் ஆயர் Joseph Yang Yongqiang அவர்கள் சீனாவின் ஒன்றிப்பை எடுத்துரைத்தார்.

எல்லாருக்கும் எல்லாமாக என்னும்  நற்செய்தி அறிவிப்புப் பணியின் பேரார்வத்தை பின்பற்றி வருவதாகவும், திறம்பட சமூகத்துடன் ஒத்துழைத்து சேவை புரிந்து, நற்செய்தியை அறிவித்து வருவதாகவும் ஆயர் ஜோசப் யாங் கூறினார்.

சீனாவில் உள்ள கத்தோலிக்க  திருஅவை உடன்பிறந்த உணர்வு,  நட்புறவு மற்றும் ஒருவருக்கொருவருடனான  மரியாதை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகங்களுடன் செயல் பரிமாற்றங்களைத் தொடங்கியுள்ளது என்றும் ஆயர் ஜோசப் யாங் தெரிவித்தார்.

திருஅவையில் நற்செய்தி அறிவிப்புப் பணி, மேய்ப்புப் பணி பராமரிப்பு, சமூக சேவை, இறையியல் போன்ற தலைப்புகளில் பல கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் ஆயர் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய கருத்தரங்குகளிலும், அமைதிக்கான ஜெப வழிபாடுகளிலும் பங்குபெற்று வருவதாகவும், சமூக மேம்பாட்டிற்காக உப்பாகவும் ஒளியாகவும் விளங்க முயன்றுவருவதாகவும் ஆயர் ஜோசப் யாங் கூறினார்.

சீனாவில் உள்ள திருஅவையைப் பார்வையிட விரும்பும் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் கத்தோலிக்க சமூகங்களையும், மதக்குழுக்களையும் வரவேற்பதாக ஆயர் கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கியக்கத் திருஅவை என்பது, மனித குலத்தின் இறுதி இலக்கான கடவுளைத் தேடும் பயணத்தில் வெவ்வேறு கதைகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் குரல்களை மதித்து, செவிமடுப்பது என்று ஆயர்  Zhan Silu கூறினார்.

தூய  ஆவியானவரின் குரல் எப்போதும் மென்மையாகவும், புரிந்துகொள்வது கடினமாகவும் இருந்தாலும், இந்த புதிய யுகத்தில் திருஅவைக்கு   பகுத்தறியும் ஒரு புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஆயர்  Zhan Silu.

திருஅவைக்கு   இறைவன் சுட்டிக்காட்டும் புதிய பகுத்தறியும்  பாதையான  வரலாற்று மற்றும் தற்போதைய அனுபவங்களிலிருந்து தாழ்மையுடன் கற்றுக்கொள்வது நற்செய்தி அறிவிப்புப் பணியின்  ஒரு முக்கியமான வழியாகும் என்றும் கூறினார் ஆயர்  Zhan Silu.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2024, 17:05