கடவுளின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் அழகிய செயல்களைச் செய்வோம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
முன்னோக்கிச் செல்லும் திருஅவை என்பது தொலைந்து போனவர்களைத் தேடுகின்ற, இறைவார்த்தையை அறிவிக்கின்ற, பிறரைக் குணப்படுத்துகின்ற சீடர்களால் ஆனது என்றும், நம்பிக்கைத் தேவைப்படும் இவ்வுலகில் கடவுளின் மகிழ்ச்சியைக் காட்டும் அழகிய செயல்களை நாம் தொடர்ந்து செய்வோம் என்றும் கூறினார் பேரருள்திரு. Lucio Ruiz.
கேட்கச் செவி உடையோர் திருஅவைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்-(திருவெளிப்பாடு 2:29) என்ற கருப்பொருளில் இணையவழி மறைப்பணி ஆற்றுவோர்களுக்கான கூட்டமானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள கிளமெண்டைன் சிற்றாலயத்தில் நடைபெற்றது.
உலக மறைபரப்பு தினமான அக்டோபர் 20 ஞாயிறன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini, பேரருள்திரு அருள்பணி. Lucio Ruiz, ஆயர் மாமன்றத்தின் துணைச் செயலர் பேரருள்திரு Luis Marín de San Martín ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைப்பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்க இணையவழி தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் (Catholic Digital Influencers) ஆகியோருக்கான யூபிலி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று அறிவித்தார் பேரருள்திரு Lucio Ruiz.
டிஜிட்டல் முறையில் ஆயர் மாமன்றம் மேற்கொண்ட பணிகளையும் அதன் செவிமடுக்கும் செயல்முறைகளையும் பாராட்டிய பேரருள்திரு Ruiz அவர்கள், திருஅவை உங்களுக்கும் செவிமடுக்கிறது, டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளும் பணி தொடர்ந்து ஒன்றிப்பால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நமதாண்டவர் இயேசு டிஜிட்டல் அடையாளம் அல்ல அவர் வாழும் மனிதர் என்று வலியுறுத்திய ஆயர் Luis Marín அவர்கள், அனைவரையும் விருந்துக்கு அழைத்து வாருங்கள் என்னும் உலக மறைபரப்பு தினத்தின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு அனைவரும் அவரவர் பாதுகாப்பு எல்லைகளை கைவிட்டு, கிறிஸ்தவ மகிழ்ச்சிக்கு சான்று பகர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல் தளங்களில் பணியாற்றும் மறைப்பணியாளர்கள் அனைவரையும் புனித பவுலின் பாதையிலிருந்து உத்வேகம் பெற அழைப்பு விடுத்த முனைவர் Paolo Ruffini அவர்கள், நவீன சமுதாயத்தின் காயங்களுக்கு பொறுப்பேற்கவும், காயங்களைக் குணப்படுத்த தங்கள் பங்களிப்பை வழங்கவும் மறைப்பணியாளர்களுக்கு வலியுறுத்தினார்.
நவீன காலத்தின் உப்பாகவும், புளிப்பு மாவாகவும் தாழ்மையுடன் மறைப்பணியாளர்கள் இருக்கவேண்டும் என்று கூறிய முனைவர் Paolo Ruffini அவர்கள், பிற இனத்தாரின் திருத்தூதரான புனித பவுல் மிகுந்த தாழ்மையுடன் இறைவனுக்கு பணிபுரிந்தார் என்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்தபோது எல்லாருக்கும் எல்லாமாய் விளங்கியதுடன் ஒரு செயல்பாட்டாளரக, அறிவுக்கூர்மையுடன் திட்டமிடுபவராக விளங்கினார் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்