பெய்ஜிங் பேராலயம் பெய்ஜிங் பேராலயம்  (AFP or licensors)

சீன-திருப்பீட ஒப்பந்தம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

2018ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின் வழியாக சீனா மற்றும் திருஅவையின் இசைவுக்குப் பின்னரே சீன ஆயர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் 6 ஆயர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சீனாவில் கத்தோலிக்க ஆயர்களின் நியமனம் குறித்து திருப்பீடத்திற்கும் சீன அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நிறைவுறுவதையொட்டி அதனை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இரு தரப்பினரும் இசைவு அளித்துள்ளனர்.

இருதரப்பினரும் கலந்தாலோசித்து ஆய்வுகளை மேற்கொண்டபின், மேலும் நான்கு ஆண்டுகள் நீட்டிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அக்டோபர் 22, செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சீனாவிலுள்ள கத்தோலிக்க திருஅவையின் நன்மைக்காகவும், சீனாவின் அனைத்து மக்களுக்காகவும் சீனாவுடனான கலந்துரையாடல்களில் உறுதியாக இருக்கும் திருப்பீடம், தற்போது அதே எண்ணத்துடன் அந்த ஒப்பந்தத்தை மேலும் நான்கு ஆண்டுகள் நீட்டிக்க இசைவு அளித்துள்ளது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கையெழுத்திடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு என நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி நான்கு ஆண்டுகளுக்கு என மீண்டும் நீட்டிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு இச்செவ்வாய் முதல்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் வழியாக சீனா மற்றும் திருஅவையின் இசைவுக்குப் பின்னரே சீன ஆயர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இருதரப்பினரின் சம்மதத்துடன் 6 ஆயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீன அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே நல்லுறவு வளர்ந்துவருவதன் ஒரு சான்றாக, தற்போது உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தில் சீன ஆயர்கள் பங்கேற்பதையும் குறிப்பிடலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2024, 16:46