ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 

பிரேசில் திருஅவையில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது

அமேசான் பகுதியில் சேவையாற்றும் அருள்கன்னியர்களும் திருத்தொண்டர்களும் ஒருங்கியக்கம் என்பதன் அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள உதவுகிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலக ஆயர் மாமன்றத்தில் 347 பங்கேற்பாளர்களுடன் அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் இடம்பெற்ற குழுக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது பதிலளித்த பிரேசில் நாட்டு கர்தினால் லியனார்தோ உல்ரிச் ஸ்டெய்னர் அவர்கள், ஒருங்கியக்கத்தின் நடைமுறை அர்த்தம் அந்நாட்டு அமேசான் பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

அமேசான் பகுதியில் அருள்கன்னியர்களும் திருத்தொண்டர்களும் திருஅவை சமூகங்களை வழிநடத்துவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகவும், ஒருங்கியக்கம் என்பதன் அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள இது உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார் கர்தினால் ஸ்டெய்னர்.

திருஅவையின் முக்கியக் கூறுகளாக இருக்கும் மதங்களிடையேயான இணக்கமும் கலாச்சாரங்களுக்கிடையேயான இணக்கமும் சுற்றுச்சூழலில் தன் ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திய கர்தினால், ஒருங்கியக்கத்திற்கு சுற்றுச்சூழல் என்பது ஒருங்கிணைந்த ஒரு கூறு என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதையும் நினைவூட்டினார்.

பிரேசில் திருஅவையில் பெண்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்த கர்தினால், 90,000 சதுர கிலோமீட்டரைக் கொண்ட மானாவுஸ் உயர்மறைமாவட்டத்தில் அருள்பணியாளர்கள் பற்றாக்குறையை நிறைவுச் செய்வதில் கடந்த 100 ஆண்டுகளாக பெண்களின் மறைப்பணி உள்ளது எனபதையும் எடுத்துரைத்தார்.

மிக தூர இடங்களில் உள்ள சமூகங்களுக்குப் பணிபுரியும் பெண்கள், திருத்தொண்டர்கள் போல் செயல்படுவதாகவும், பெண்களை திருத்தொண்டர்களாக நியமிக்கும் வழிமுறைக்கு மீண்டும் உயிரளிப்பது பலன் தரும் எனவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2024, 16:26