செய்தியாளர் சந்திப்பின்போது முனைவர் பவுலோ ரூபினியுடன்  ஆயர் மாமன்ற பங்கேற்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது முனைவர் பவுலோ ரூபினியுடன் ஆயர் மாமன்ற பங்கேற்பாளர்கள் 

தூய ஆவியானவரின் குரலுக்குச் செவிமடுப்பதே முக்கியமான பணி

உலக ஆயர் மாமன்றத்தில் இறையியலார்கள் மற்றும் வல்லுநர்களின் பணிக்குழுக்களின் முக்கியமான பணி எப்போதும் தூய ஆவியானவரின் குரலுக்குச் செவிமடுப்பதே.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்ற உலக ஆயர் மாமன்றத்தில் இறையியலார்கள் மற்றும் வல்லுனர்களின் பணிக்குழுக்களின் முக்கியமான பணி  எப்போதும் தூய ஆவியானவரின் குரலுக்குச் செவிமடுப்பதே என வலியுறுத்தப்பட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. 

திருஅவையின் ஒன்றிப்பு, ஆயர் மாமன்றத்தின் திறன் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், திருஅவை டிஜிட்டல் உலகில் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாகவும், திருஅவையின் ஒன்றிப்பை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் ஒன்றிப்பையும் ஆயர் மாமன்ற பிரதிநிதிகள் அனைவரும் ஊக்குவிப்பதாகவும் எடுத்துரைத்தார் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini..

திருஅவையை மேலும் துடிப்பானதாக மாற்றக்கூடிய சிறிய அடிமட்ட சமூகங்களின் பங்களிப்பையும்,  திருஅவையை கலாச்சார மற்றும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக  எடுத்துரைத்தார் ஆயர் மாமன்ற தகவல் தொடர்புத் துறையின் செயலர் முனைவர்  Sheila Pires.

திருஅவையின் பயணத்தில், தூய ஆவியானவருக்கு செவிசாய்ப்பது முக்கியமானது என்றும், முரண்பாடுகளான கருத்துக்களைத்தேடி முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார் ஆயர் மாமன்ற இறையியலாளர்களின் ஒருங்கிணைப்பாளரும், கிரகோரியன் திருப்பீடப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான, அருள்பணி. Dario Vitalii.

திருஅவை சட்டவல்லுநர்களின் பணி என்பது,  இறையியலாளர்களுடனான ஒரு கூட்டு முயற்சி என்றும், கடந்த காலங்களில் இறையியல், திருஅவைச் சட்டம் ஆகிய இரண்டும்,  இணையான பாதையில் பயணித்தன என்றும், இவ்வாறு நடைபோட ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கூறினார் அருள்பணி.José San José Prisco.

ஒருங்கியக்கத் திருஅவையில், இறையியல் அதன் பங்கைக் கற்றுக்கொள்கிறது, கடவுளுடைய மக்களின் இறையியலை ஒழுங்குபடுத்த ஆயர் மாமன்றம் உதவுகிறது என்று Klára Antonia Csiszàr அவர்களும், நற்செய்தியை உண்மையாக்க, திருஅவையின் வாழும் பாரம்பரியத்தின் செயல்முறையில் நுழைய, ஒவ்வொரு நபரின் உணர்வுகளைக் கேட்கும் அதே வேளையில், கடவுளின் செய்தியை அனைவருக்கும் அறிவிக்க  உதவும் திருஅவை பணி இறையியலுக்கு உள்ளது என்று அருள்பணி. Ormond Rush அவர்களும் எடுத்துரைத்தார்.

2 ஆம் வத்திக்கான் சங்கத்தை மேற்கோள்காட்டி, வெளிப்பாடு என்பது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான உரையாடல் என்றும், திருஅவை  அதன் வாழ்க்கை பாரம்பரியத்தைத் தொடர இறையியலாளர்கள் உதவ முடியும் என்றும்  வலியுறுத்தினார் அருள்பணி. Rush.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 15:51