பத்திரிகையாளர் கூட்டத்தில் கர்தினால் கிரேசியாஸ் பத்திரிகையாளர் கூட்டத்தில் கர்தினால் கிரேசியாஸ் 

கொள்கைகளை திணிப்பதைத் தவிர்க்கும் ஒருங்கியக்க அணுகுமுறை

மும்பை கர்தினால் : திருஅவையில் ஆயர் மாமன்றம் மேற்கொண்டுவரும் பணிகள் வழி மேலும் திருஅவை மீதான உடன்பிறந்த உணர்வும் அன்பும் அதிகரிக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தற்போது வத்திக்கானில் இடம்பெறும் ஆயர் மாமன்றம் விவாதித்துவரும் ‘ஒருங்கியக்கம்' குறித்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு   கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிந்துகொள்தல் தேவைப்படுவதாக அக்டோபர் 7ஆம் தேதி உரோம் நகர் பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றினார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதும் அவர்களை மதிப்பதும் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளாக மாறியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், ஆசிய திருஅவையின் ஒருங்கிணந்த பயணத்தை எடுத்துரைத்து மறைப்பணி நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்து பணிபுரிதல் மற்றும் ஒன்றிணைந்து நடைபோடுதல் என்பவையே முக்கிய கருத்துக்கள் என்ற கர்தினால், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இறையரசைக் கட்டியெழுப்புவது அவசியம், ஆனால் அது மதமாற்றத்தை வலியுறுத்துவதன் வழி அல்ல, மாறாக வேறுபாடுகளை மதித்து அதற்குரிய உயரிய இடத்தைக் கொடுப்பதன் வழி என மேலும் கூறினார்.

கொள்கைகளையும் கண்ணோட்டங்களையும் ஒருவர் மற்றவர் மீது திணிப்பதைத் தவிர்க்கும் ஒருங்கியக்க அணுகுமுறையின் அவசியத்தையும் பத்திரிகையாளர் கூட்டத்தில் வலியுறுத்தினார் கர்தினால் கிரேசியாஸ்.   

அனைத்து மதங்களும் மதிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ஆசிய திருஅவை, உடன்வாழ் மதங்களை பிற மதங்கள் என்று அழைக்காமல், நமக்கு அடுத்திருக்கும் மதங்கள் என்பதை வலியுறுத்த வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

திருஅவையில் ஆயர் மாமன்றம் மேற்கொண்டுவரும் பணிகள் வழி மேலும் திருஅவை மீதான உடன்பிறந்த உணர்வும் அன்பும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் மும்பை கர்தினால்.

திருஅவையில் பெண்களின் மைய இடம் குறித்தும் கருத்துக்களை வெளியிட்ட கர்தினால் கிரேசியாஸ் அவர்கள், C-9 என்ற கர்தினால்கள் அவை திருத்தந்தையுடன் மேற்கொண்ட  கடந்த மூன்று கூட்டங்களிலும், திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து இறையியல் மற்றும் மறைப்பணி கண்ணோட்டத்தில் விவாதித்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2024, 16:15