அக்டோபர் ஆயர் மாமன்ற ஆயத்த தியானம் அக்டோபர் ஆயர் மாமன்ற ஆயத்த தியானம்  (ANSA)

நட்புணர்வு, கலாச்சாரங்களிடையே உறவை முன்னேற்றும் திருஅவை

இவ்வுலகின் ஒரு பக்கம் முறிவுபட்டிருக்கும், மற்றும் பிளவுபட்டிருக்கும் இருண்ட காலத்தையும், மறுபக்கம் இயேசுவின் ஒளியையும் நாம் காண்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போர் மற்றும் உரிமை மீறல்களின் இருண்ட காலத்தில் திருஅவை, நட்புணர்வு மற்றும் கலாச்சாரங்களிடையே உறவை பின்னி முன்னேற்ற முனைகிறது என, உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தின் அங்கத்தினர்களுக்கு வழங்கிய தயாரிப்பு தியானத்தில் உரையாற்றினார் தொமினிக்கன் அருள்பணி Timothy Radcliffe.

அக்டோபர் மாதம் முழுவதும் வத்திக்கானில் இடம்பெறும், ஒருங்கிணந்து நடைபோடுதல் குறித்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறுவோருக்கு இரு நாள் தியானத்தை வழிநடத்திவரும் அருள்பணி Radcliffe அவர்கள், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்று உரை வழங்குகையில், திருஅவையின் அங்கத்தினர்கள் காயப்பட்டாலும், ஒருவர் மற்றவரை நம்புவதன் வழியாகவே திருஅவையை நம்பகத்தன்மையுடையதாக மாற்றமுடியும் என கூறினார்.

இவ்வுலகின் ஒரு பக்கம் முறிவுபட்டிருக்கும், மற்றும் பிளவுபட்டிருக்கும் இருண்ட காலத்தையும், மறுபக்கம் இயேசுவின் ஒளியையும் நாம் காண்கிறோம் என்ற அருள்பணியாளர், கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணையும்போது, உலகமயமாக்கல் போலவோ, நுகர்வுக் கலாச்சாரம் போலவோ அனைத்தையும் விழுங்கிவிடுவது போலல்லாமல், ஒருவருக்கொருவர் உரிய இடத்தை வழங்கி, கலாச்சார வேறுபாடுகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

ஆயர் மாமன்ற செயல்பாடுகள் பேரம் பேசுவதோ, கட்டாயமாக ஓர் உடன்பாட்டிற்கு அனைவரையும் கொண்டுவருவதோ அல்ல, மாறாக, அன்பின் அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள உதவுவதாகும் எனவும் தெரிவித்த தொமினிக்கன் அருள்பணி Radcliffe அவர்கள், எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒருவரையொருவர் நம்புவதன் அவசியம், அவநம்பிக்கை, ஏற்க மறுத்தல், அருள்பணித்துவ மேட்டிமை வாதம் போன்றவைகளை களைய வேண்டிய அவசியம்,   வெளிவேடத்தனம் என்ற பாவத்தை ஒதுக்குவது ஆகியவை குறித்தும் இந்த தியானத்தின் இறுதி நாளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2024, 15:11