கூட்டொருங்கிய செயல்முறை நடைமுறைப்படுத்துதலை உள்ளடக்கியது
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
உலக ஆயர் மாமன்றத்தின் 16 வது பொதுப் பேரவையின், இரண்டாவது அமர்வின் இறுதி ஆவணமானது, நிறுவப்பட்ட நடைமுறைகளை முறியடிக்கும் ஒரு புதிய பார்வையின் உறுதியான முன்மொழிவுடன், ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் மறைப்பணி என திருஅவையின் அனுபவத்தை மீண்டும் துவங்குகிறது என்று தெரிவித்துள்ளார் விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ்.
திருஅவையின் வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில், உலக ஆயர் மாமன்றத்தின் 16ஆவது பொதுப்பேரவையின் இறுதி ஆவணம் 155 பத்திகளில் ஒவ்வொன்றும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது முடிவின்படி, அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் கர்தினால் விக்டர்.
கூட்டொருங்கிய செயல்முறை தற்போது முடிவடைந்த உலக ஆயர் மாமன்ற பேரவையுடன் முடிவடைவதல்ல, நடைமுறைப்படுத்துதலை உள்ளடக்கியது என்றும் அன்றாட வாழ்வுப் பயணத்தில் ஆலோசனை மற்றும் தேர்ந்து தெளிதல் என்னும் ஒருங்கியக்க செயல்முறையுடன் அனைவரையும் ஈடுபடுத்துவது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் விக்டர் .
குறிப்பாக, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஆயர்களின் உறுதிப்பாட்டிற்கு இந்த ஆவணம் சவால் விடுகிறது என்றும் , அதே நேரத்தில் திரு அவைக்குள் பெண்களுக்கு உயர்ந்த பொறுப்புகளையும் அதிகாரத்தையும் வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ்.
உலக ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம் உயிர்த்தெழுந்த இயேசு திருத்தூதர்களுக்குத் தோன்றிய நற்செய்திப் பகுதிகளில் வேரூன்றிய ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். அவையாவன
முதலாவது பகுதி ஒருங்கியக்கத்தின் இதயத்தை அடையாளம் காட்டுகிறது.
படகில், ஒன்றாக என்னும் இரண்டாவது பகுதி, உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் கிறிஸ்தவ சமூகத்திற்கும், அழைத்தல், தனிவரங்கள் மற்றும் மறைப்பணியை வடிவமைக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வலையை வீசு என்னும் மூன்றாவது பகுதி திருச்சபை விவேகம், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மதிப்பீட்டின் கலாச்சாரம் இவற்றின் நெருக்கத்தை அடையாளம் காட்டுகிறது.
ஒரு மிகுதியான பிடிப்பு என்னும் நான்காவது பகுதி, பரிசுகளின் பரிமாற்றம் மற்றும் திருஅவையில் நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை எவ்வாறு புதிய வடிவங்களில் வளர்ப்பது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
எனவே நான் உங்களை அனுப்புகிறேன் என்னும் ஐந்தாவது பகுதி, கடவுளின் மக்கள் மற்றும் அனைத்து மறைப்பணியாளர்களின் உருவாக்கத்தை கவனிக்க, முதல் அடியை எடுத்து வைக்க அனுமதி வழங்குகிறது.
ஆவணத்தின் அறிமுகத்தில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை பற்றி தியானித்து, நம் சொந்த பாவங்களுக்காகவும் நம் சகோதர சகோதரிகளின் பாவங்களுக்காகவும் மனம் வருந்தவும் அழைப்பு விடுக்கிறது.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகங்கள், அழும் தாய்மார்கள், பல இளைஞர்களின் சிதைந்த கனவுகள், பயங்கரமான பயணங்களை எதிர்கொள்ளும் அகதிகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் என துன்புறும் அனைவருக்காகவும் நம் கண்களைத் திறக்கவும் அழைக்கிறது. ஒருங்கியக்கம் என்பது ஆன்மிக புதுப்பித்தல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தத்தின் ஒரு பாதையாகும், இவை திருஅவையை அதிக பங்கேற்புள்ள மறைப்பணியாளராக இருக்க உதவுவதுடன் அனைவருடனும் இணைந்து நடந்து சென்று கிறிஸ்துவின் ஒளியை பரப்ப உதவுகிறது.
ஆவணத்தின் இரண்டாம் பகுதி இறைவனுடனும், இயற்கையுடனும், மனிதர்களுடனும் உறவுகளை வளர்ப்பதற்கான அதிக திறன் கொண்ட ஒரு திருஅவைக்கு அழைப்பு விடுக்கிறது.
ஆவணத்தின் மையப்பகுதி பொதுநிலையினரின் பங்கேற்பில் கவனம் செலுத்துகிறது மேலும், அர்ப்பணிக்கப்பட்ட மறைப்பணி என்பது நல்லிணக்கத்தின் சேவையில் உள்ளது என்றும் ஆவியின் வரங்களை பகுத்தறிந்து அனைவரையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
மறைப்பணிக்கான திருஅவையின் பகுத்தறிதல் என்பது ஒரு நிறுவன நுட்பம் அல்ல, மாறாக ஒரு உயிருள்ள விசுவாசத்தில் அடித்தளமிட்ட ஒரு ஆன்மிக நடைமுறை மற்றும் ஒருவரின் சொந்த அல்லது குழு கண்ணோட்டத்திலிருந்து அல்லது மாறுபட்ட தனிப்பட்ட கருத்துக்களின் சுருக்கமாக ஒருபோதும் இல்லை என்று ஆவணத்தின் மூன்றாம் பகுதி கூறுகிறது.
ஆவணத்தின் நான்காம் பகுதி மக்கள்தொகை இயக்கம், டிஜிட்டல் கலாச்சாரத்தின் பரவல் ஆகியவற்றின் நிகழ்வுகளுக்கும் உரிய கவனத்தை அளிக்கிறது.
இறுதியாக, அமைதி மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு, நமது பொதுவான இல்லத்திற்கான அக்கறை மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான மற்றும் மதங்களுக்கிடையேயான உரையாடல் போன்ற திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் கருப்பொருள்கள் கடவுளின் மக்களிடையே மிகவும் பரவலாகப் பகிரப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
அன்னை மரியா ஒருங்கியக்கத் திருஅவையாக இருக்க நமக்கு கற்றுத் தருவார் என்னும் ஒப்படைப்பு செபத்துடன் இந்த ஆவணமானது நிறைவு பெறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்