ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கம் கொண்ட திட்டம் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட Doha ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுவருவது குறித்து திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா. நிறுவனத்திற்கு தன் நன்றியை வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் எத்தோரே பலஸ்திரேரோ.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுக்கு திருப்பீடப் பிரதிநிதியாகச் செயல்படும் பேராயர் பலஸ்திரேரோ அவர்கள், வணிகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐ.நா. கருத்தரங்கில் இதனை தெரிவித்ததோடு, வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரச் சட்டங்கள், மனித குலத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு உதவுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஏழைகளின் முன்னேற்றப் பாதையில் அனைத்து பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களின் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பேராயர், எந்த ஒரு திட்டமும் மனிதகுல ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் ஐ.நா. கூட்டத்தில் அழைப்புவிடுத்தார்.
ஏழ்மை மற்றும் சரிநிகரற்ற நிலைகளை அகற்றுவதற்கு பன்னாட்டு வணிகக் கொள்கைகள் உதவ வேண்டும் எனவும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொழிலாளர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும் எனவும், சரிநிகரற்ற நிலைகளை உருவாக்குவதாக அது இருக்கக்கூடாது எனவும், சிறு தொழில்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் எனவும் தன் உரையில் திருப்பீடத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார் பேராயர் பலஸ்திரேரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்