ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா  

திருப்பீடம் : இனவெறி குறித்த மௌனம் ஏற்புடையதல்ல

இனவெறி என்பது எளிதில் அடையாளம் காணப்பட்டு கண்டனம் செய்யப்படும் நிலையில் இருந்தாலும், இனவெறி தொடர்புடைய முற்சார்பெண்ணங்கள் மிக நுட்பமான வழியில் மக்களைப் பாதிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இனம், நிறம் மற்றும் மொழி அடிப்படையிலான இனப்பாகுபாடுகளால் உலகம் முழுவதும் ஆறு பேருக்கு ஒருவர் பாதிக்கப்படுவதாக அண்மை புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி ஐ.நா. கூட்டத்தில் தன் கவலையை வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி.

இனவெறி, இன அடிப்படையில் பாகுபாடு, அயலார் வெறுப்பு, சகிப்புத்தன்மையின்மை ஆகியவைகளை ஒழிக்கவேண்டும் என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரை வழங்கிய ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சரிசம மாண்புடனும், உரிமைகளுடனும் பிறந்தவர்கள் என்பது அடிப்படை உண்மையெனினும், இந்த உண்மை பலவேளைகளில் மீறப்பட்டே வருகின்றது என்பதை வரலாறு காட்டியுள்ளது என உரைத்தார்.

மனித வாழ்வின் புனிதத்தன்மையை பாதுகாக்கிறோம் என கூறிக்கொண்டே நாம் மக்களை ஏதாவது ஒரு வகையில் புறந்தள்ளிவைப்பது மற்றும் இனவெறி குறித்து  மௌனம் காப்பது இயலாதது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை இக்கூட்டத்தில் மேற்கோள்காட்டிய பேராயர், கடவுளால் வழங்கப்பட்ட மாண்பைக் கொண்டிருக்கும் மனிதனுக்கு எதிரான எவ்வகையான இனவெறி பாகுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இனவெறி என்பது எளிதில் அடையாளம் காணப்பட்டு கண்டனம் செய்யப்படும் நிலையில் இருந்தாலும், இனவெறி தொடர்புடைய முற்சார்பெண்ணங்கள் மிக நுட்பமான வழியில் மக்களைப் பாதிக்கின்றன என கூறியதுடன், அது தன் பாதிப்பைக் கொண்டிருக்கும் மூன்று துறைகளையும் சுட்டிக்காட்டினார்.

முதல்துறையாக, புலம்பெயர்தலைச் சுட்டிக்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், புலம்பெயர்தல் என்பது உள்நாட்டு மக்களுக்கு அச்சம் தருவதாக பிம்பம் உருவாக்கப்பட்டு அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் முன்வைத்தார்.

இரண்டாவதாக, இவ்வுலகில் தொடர்ந்து அதிகரித்துவரும் மதசகிப்பற்றத்தன்மை, பாகுபாட்டுடன் நடத்தப்படல், சித்ரவதைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி, மக்களை மத அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்துவதும், அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்கத் தவறுவதும் மனித மாண்புக்கு எதிராகச் செல்வதாகும் எனவும் குறிப்பிட்டார். 

கணனி வலைத்தளங்களிலும் இனவெறி, மற்றும் அயலார் வெறுப்புகள் அதிகரித்துவருவதை மூன்றாவது கூறாக எடுத்துரைத்த பேராயர் காச்சா அவர்கள், இதற்கான சிறந்த தடுப்பு நடவடிக்கையாக கல்வியே இருக்க முடியும், அதுவும் இந்த கல்வி குடும்பத்திலிருந்து துவங்கவேண்டும் எனவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 16:13