உரை வழங்கும் கர்தினால் தாக்லே (கோப்புப் படம்) உரை வழங்கும் கர்தினால் தாக்லே (கோப்புப் படம்) 

யூபிலியின் மையமாக நம் இதயங்கள் விளங்கட்டும்!

இயேசுவின் திருஇதயம் ஒரு மறைத்தூது இதயம், இது ஒரு மனித இதயத்தின் வழியாக எல்லா மக்களுக்கும், எல்லா மனித சூழ்நிலைகளுக்கும், படைப்புகளுக்கும் வழிந்தோடும் இறையிரக்க அன்பைக் கொண்டுவருகிறது : கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

என்னைப் பொறுத்தவரை, 'இறைவா உமக்கே புகழ்' மற்றும் ‘அனைவரும் உடன் பிறந்தோரே’ ஆகிய சமூகத் திருத்தூது மடல்களின் கிறிஸ்தியல் அடித்தளத்தை இன்னும் தெளிவாக்குவது திருத்தந்தையின் வழியாக உள்ளது என்று கூறினார் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.

கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி வியாழக்கிழமையன்று வெளியான திருத்தந்தையின் 'அவர் நம்மை அன்பு கூர்ந்தார்'  (He Loved Us)  என்ற புதிய திருத்தூது மடல் குறித்து வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எழுத்துக்கள் மற்றும் நீண்ட உரைகள் இயேசு கிறிஸ்துவின் நபர் மற்றும் பணியின் மீதான நமது நம்பிக்கையை தொடர்ந்து அடிப்படையாகக் கொண்டவை என்று தான் சொல்ல விரும்புவதாகவும்,  'அவர் நம்மை அன்பு கூர்ந்தார்'  என்ற திருமடலின் சுவடுகள் அல்லது விதைகளைக் கண்டறிய இந்த இரண்டு சமூக திருமடல்களையும் மீண்டும் ஒருமுறை படிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் தாக்லே. 

இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின் மீதான பக்தி பிலிப்பீன்சில் பரவலாக உள்ளது. மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், பள்ளிகள் மற்றும் குடும்பங்களில் பக்தியை ஊக்குவிக்கும் இயேசுவின் திருஇதயம், இயேசு சபை மற்றும் செப அப்போஸ்தலத்துவம் ஆகிய பெயர்களைக் கொண்ட துறவற சபைகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் தாக்லே.

நமது குடும்பங்களையும் நாடுகளையும் இயேசுவினுடைய இரக்கத்தினாலும் அன்பினாலும் ஆளவும், ஆளுகை செய்யவும் இயேசுவின் இதயத்தை நோக்கி மன்றாடுகிறோம் என்று கூறியுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், அநீதி, பேராசை, ஊழல் மற்றும் அலட்சியம் ஆட்சி செய்யும் போது இதயங்கள் காயப்பட்டதை அனுபவித்த மக்களிடமிருந்து இந்த இறைவேண்டல் எழுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின்மீது தங்களின் அளவற்ற அன்பை வெளிக்காட்டிய புனிதர்களை எடுத்துக்காட்டும் திருத்தந்தையின் வழிமுறையை தான் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்துள்ள கர்தினால் தாக்லே அவர்கள்,  இப்புனிதர்களின் வழியில் நாமும் இயேசுவின் திருஇதயத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாம் கருத்துக்களால் அல்ல மாறாக இயேசுவின் அன்பான இதயத்தில் உண்மையான வாழ்க்கையைக் கண்டறிந்த இதயங்களைக் கேட்பதன் வழியாக நாம் புத்துயிர் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்பாகிய மூவொரு கடவுளிடம் நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் பணிவுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே திருத்தூது ஒருங்கிணைந்த பயணத்தில் (missionary synodality) திருஅவையின் புதுப்பிப்பை அடைய முடியும் என்று எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் தாக்லே அவர்கள்,  மேய்ப்புப்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு இடையே, தலத் திருஅவைகளுக்கு இடையே இதயங்களை இணைக்கும் உறவு இந்தத் மறைத்தூது ஒருங்கிணைந்த பயணத்திற்குத் தேவைப்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளார். 

இறையிரக்கத்தால் சுத்திகரிக்கப்பட்ட மனித உறவுகள் இல்லாமல், இறையன்பின் சுடரான தூய ஆவியால் எரியும் இதயம் இல்லாமல் மறைத்தூது ஒருங்கிணைந்த பயணம் என்பது, வெறுமனே அதிகாரத்துவ மற்றும் சட்டபூர்வமான திட்டங்களாக குறைக்கப்படலாம் என்றும் விளக்கியுள்ளார் கர்தினால் தாக்லே.

 'அவர் நம்மை அன்பு கூர்ந்தார்'  என்ற திருத்தந்தையின் இந்தப்  புதிய திருத்தூது மடலுக்கும் வரவிருக்கும் யூபிலிக்கும் இடையே உள்ள தொடர்பு, நம்பிக்கையில் புனித திருப்பயணத்தை மையமாகக் கொண்டு, இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின் மீதான பக்தியின் திருத்தூதுப் பரிமாணத்தில் இருப்பதை தான் காண்பதாகவும் உரைத்துள்ளார் கர்தினால் தாக்லே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2024, 14:03