சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி. சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி.   (Willian Bonfim)

உலகை வடிவமைப்பது நம் கையில்தான் உள்ளது – பவுலோ ருஃபினீ

ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக தகவல் தொடர்பு இருக்கின்றது -முனைவர் பவுலோ ருஃபினி

மெரினா ராஜ் - வத்திக்கான்

உண்மை, நன்மை, அழகு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதன் வழியாக உலகை வடிவமைப்பது நம் கையில் தான் உள்ளது என்றும், மனிதர்களின்றி சமூக ஊடகங்கள் இல்லை, தரவுகள் இன்றி செயற்கை நுண்ணறிவு இல்லை என்றும் எடுத்துரைத்தார் முனைவர் பவுலோ ருஃபீனீ.

நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் பெங்களூரில் உள்ள தூய ஜான் மருத்துவக் கல்லூரியில், ஒளிரும் டிஜிட்டல் பணியாளர்களை வளர்த்தெடுத்தல்  “Illuminaire. Nurturing Digital Stewardship" என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி.

தகவல்தொடர்புகளில் ஏற்படும் செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சி நம்மை மேலும் மனிதனாக மாற்ற உதவுகின்றதா? அல்லது நமது மனிதநேயத்தை மதிப்பிழக்கச் செய்கின்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று எடுத்துரைத்த முனைவர் ருஃபீனீ அவர்கள், இக்கருவிகள் தனிநபர்களுக்கிடையேயான உறவுகளை வலுவாகவும், உண்மையாகவும், சமூகங்களுக்கிடையிலான உறவை மேலும் எந்தெந்த வழிகளில் இணைக்கின்றன என்பதைக் காண வேண்டும் என்றும் கூறினார்.

மாறாக தனிமையில் இருப்பவர்களை மேலும் தனிமைப்படுத்தாமல், நல்லதொரு அரவணைப்பை உண்மையான தகவல்தொடர்பு மட்டுமே வழங்கக்கூடும் என்றும், ஒவ்வொரு நபரிடமிருந்தும் சிறந்ததை வெளிக்கொணர்வதில் தகவல்தொடர்பு வழிமுறைகளின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம் என்றும் எடுத்துரைத்த ருஃபீனீ அவர்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக தகவல் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறினார்.

சிலவேளைகளில் தவறான புரிதல்கள், வெறுப்புகள், பகைமை ஆகியவற்றைத் தொடர்ந்து தூண்டவும் பயன்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய முனைவர் ருஃபீனீ அவர்கள், இந்திய தலத்திருஅவையின் சமூகத்தொடர்பாளர்கள் தங்கள் பணியில் சந்திக்கும் சவால்களைக் கண்டு சோர்வடைய வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

உறவு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு தொடர்பைக் கட்டியெழுப்புவதிலும், பிரிவினையின் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய முனைவர் பவுலோ அவர்கள், பாபேலின் புதிய கோபுரத்தைக் கட்டுவதற்கு பலர் ஆசைப்படும் இக்காலத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்த அற்புதத்தை நிகழ்த்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அது செயல்படுவதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்றும், அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 12:25