தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவில் புனித கதவு திறப்பு

உரோம் மறைமாவட்ட அதிபர் தந்தையான கர்தினால் Baldassare Reina, அவர்கள் ஆலயங்களுக்கெல்லாம் தலைமை ஆலயமாக, தாய் ஆலயமாகத் திகழும் உரோம் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவினை திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவினைத் திறந்து வைத்து யூபிலி ஆண்டு 2025 ஐ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இன்று டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்பத் திருவிழாவை முன்னிட்டு உரோமில் உள்ள தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவில் புனிதக் கதவினை கர்தினால் Baldassare Reina அவர்கள் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.   

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமையன்று மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் முதன் முதலாக புனிதக்கதவு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 26 வியாழனன்று முதல் மறைசாட்சியாளரான தூய ஸ்தேவான் திருவிழாவன்று உரோமில் உள்ள ரெபிபியா சிறைச்சாலையில் புனிதக் கதவு ஒன்றினை இரண்டாவதாக திறந்து வைத்து சிறைக்கைதிகளுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார் திருத்தந்தை. இன்று திருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட அதிபர் தந்தையான கர்தினால் Baldassare Reina, அவர்கள் ஆலயங்களுக்கெல்லாம் தலைமை ஆலயமாக, தாய் ஆலயமாகத் திகழும் உரோம் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவினை திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். ஏராளமான மக்கள் இத்திருப்பலியில் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

வருகைப் பல்லவியுடன் ஆரம்பமான திருப்பலியினை புனிதக் கதவின் அருகில் இருந்தபடி சிலுவை அடையாளம் வரைந்து துவக்கினார் கர்தினால் பல்தசார் ரெய்னா. அதன்பின் புனிதக் கதவின் அருகில் நின்று செபித்து அதனை அவர் திறந்து வைக்க ஆலயத்தின் மணிகள் ஒலிக்கப்பட்டன. கர்தினாலைத் தொடர்ந்து ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினரின் பிரதிநிதிகள் பலர் புனிதக்கதவு வழியாக பெருங்கோவிலுக்குள் நுழைந்தனர். யூபிலி ஆண்டுப் பாடலானது பாடப்பட பீடம் மற்றும் பாலன் இயேசு திரு உருவச்சிலைக்கு தூபம் காட்டி வழிபட்டார் கர்தினால் ரெய்னா. வானவர் கீதம் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருக்குடும்பப் பெருவிழா திருப்பலியானது நடைபெற, சாமுவேல் முதல் புத்தகத்திலிருந்து முதல் வாசகமும், திருத்தூதர் யோவானின் முதல் திருமடலில் இருந்து இரண்டாம் வாசகமும் இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டன. அதன்பின் லூக்கா நற்செய்தியில் இருந்து நற்செய்தி வாசகம் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கர்தினால் Baldassare Reina அவர்கள் தனது மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

அன்பானவர்களே தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் திறந்து வைக்கப்பட்ட புனிதக் கதவு வழியாக நமது மீட்பின் நுழைவாயிலான இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நாம் புதுப்பிக்கின்றோம். நமது உடன் சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையின் உறுதியான அடையாளமாக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டையும், இரக்கம் நன்மை, நீதி என்னும் உணர்வுகளின் வழியாக நமது இதயக் கதவுகளையும் நாம் திறப்பதற்கு இப்புனிதக் கதவு நமக்கு வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு குடும்பத்தின் மாதிரிகையும் தமத்திரித்துவத்தின் அடையாளமுமாய் இருக்கக்கூடிய திருக்குடும்பப் பெருவிழாவன்று திறந்து வைக்கப்பட்ட இப்புனிதக் கதவானது நாம் அனைவரும் ஒற்றுமை, நல்லிணக்க உணர்வு, தொண்டுப்பணிகள் போன்றவற்றில் வளர நமக்கு அழைப்புவிடுக்கின்றது.  

அகலமாக திறந்து வைக்கப்பட்ட புனிதக் கதவானது கடவுளின் இல்லத்தை மட்டுமல்லாது நமது இதயத்தின் ஆழத்தையும் அடையாளப்படுத்துகின்றது. கடவுளது பிள்ளைகளாக திருக்குடும்பத்தை சார்ந்தவர்களாக நாம் இருக்க இன்றைய ஞாயிறு வழிபாட்டு இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. திருத்தூதர் யோவான் தனது திருமடலில் நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை என்று எடுத்துரைக்கின்றார். கடவுளின் குழந்தைகளாக இருப்பது ஒரு அடிப்படை எதார்த்தமாகும், இது வாழும் தந்தையுடனான உறவிற்கும், அவரில் நம்மை மாற்றிக் கொள்கின்ற உறவிற்கும் அறிமுகப்படுத்துகிறது. நம்பிக்கை என்பது உறவின் ஆழமான அனுபவமாக கட்டமைக்கப்பட்டுள்ளது, அது இறைமைந்தனின் இயக்கவியலில் நம்மை இணைக்கின்றது. ஒரு தொடர்ச்சியான மறுகண்டுபிடிப்பை வலியுறுத்துகின்றது. தந்தைவழி அன்பின் அடிப்படை ஆழத்திற்கு இடைவிடாமல் நாம் திரும்பவும், நமது உடனிருப்பு மற்றும் செயல்பாட்டின் உண்மையான அர்த்தத்தையும் எடுத்துரைக்கின்றது. ஊதாரி மைந்தன் உவமையில் வரும் இரக்கமுள்ள தந்தையின் செயல்பாட்டை இப்புனிதக் கதவு நமக்கு வெளிப்படுத்துகின்றது.  

தந்தையின் சொத்தில் தனக்குரியப் பங்கைக் கோரும் இளைய மகன், தன் தந்தையிடம் இருந்து தன்னை விடுவித்து, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி நமக்கு நினைவிருக்கும். ஒரு தவறான புரிதலினால் ஏற்படும் துயரத்தை இந்நிகழ்வு வெளிக்காட்டுகின்றது, தனது தந்தையிடமிருந்து விலகி சுதந்திரமாக வாழ எண்ணும் மகன் அனைத்தையும் இழந்து துன்புறுகின்றான். கடவுள் நமது சுதந்திரத்தின் எதிரி என்னும் எண்ணத்தை நாம் கைவிட வேண்டும்.

மூத்தமகன் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் முன்மாதிரியாகத் தோன்றினாலும் ஆழ்ந்த தவறான புரிதல் கொண்டவராக இருக்கிறார். பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை என்று தனது தம்பி திரும்பி வந்ததற்கு தந்தை அளித்த விருந்து குறித்து சொல்கின்றார் மூத்தமகன். இந்த எதிர்ப்பில் அவனது உண்மை நிலை தெளிவாகவும், ஓர் அன்பற்ற கீழ்ப்படிதல் துல்லியமாகவும் வெளிப்படுகிறது, இரு மகன்களும், தங்கள் தந்தையின் வீட்டில் தங்களுடைய இடத்தை அன்பான மகன்களாக அல்ல, மாறாக வேலைக்காரர்கள் போன்று தங்களை வெளிப்படுத்துகின்றார்கள். மூத்தவர், தான் அடிமை போன்று பணியாற்றியதாக அறிவிக்கிறார். இளையவர், உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்று கேட்கும் நோக்கத்துடன் வீட்டிற்குத் திரும்பத் தீர்மானிக்கிறார்கள்.

தன்னை எதிர்கொண்டு வந்த இளைய மகனின் பேச்சை இடைமறித்து, வேலையாட்களிடம் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’  என்று ஆச்சர்யமூட்டுகின்றார் தந்தை. மூத்தமகனிடம், ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்று அமைதிப்படுத்துகின்றார். இந்த வார்த்தைகள் மகன்கள் மீது கொண்டுள்ள உறவுகளின் உண்மையை ஆழமாக நமக்கு நினைவூட்டுகின்றன. ஒரு மகனாக இருப்பது தான் சம்பாதித்த அல்லது தகுதிப்படுத்திய நிபந்தனை அல்ல, மாறாக இறைத்தந்தையின் நிபந்தனையற்ற அன்பின் அடிப்படையில் அது ஒரு கொடையாகக் கருதப்படுகின்றது.

தந்தையின் அளவற்ற அன்பு சகோதரர்களிடத்தில் தவறான புரிதலை ஏற்படுத்துகின்றது. பிளவுகளை உருவாக்குகிறது, விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்ற மூத்த மகனின் வார்த்தைகளிலும் விருந்தில் பங்கேற்காமல் வெளியில் நிற்கின்ற அவனது செயலிலும் அது வெளிப்படுகின்றது. இந்த உவமை புனிதக் கதவின் உருவத்தை சிந்திக்க நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித ஆண்டில் இறைத்தந்தையை நோக்கிச் செல்ல நினைக்கும் நம்மை எதிர்நோக்கி இறைத்தந்தையேக் காத்திருக்கின்றார். நமக்காக அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார். தூரத்தில் தனது மகனைக் கண்டவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு அவரை எதிர்நோக்கிச் சென்ற தந்தை போல நம்மையும் எதிர்கொண்டு வருகின்றார். அன்பில் சோர்வடையாத இந்த தந்தையின் ஓட்டத்தை நாம் கற்பனை செய்வோம், அவர்  தம் கரங்களை விரித்து நம்மை நெருங்கிவருவதைப் பார்ப்போம். அந்த திறந்த கரங்கள்தான் புனித கதவு. எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், நமது வாழ்வையும் நேரத்தையும் வீணடித்திருந்தாலும், இறைவனிடம் திரும்பி வர முடிவு செய்தோமானால் இறைவன் நமக்காக தனது கரங்களை விரித்துக் காத்திருக்கின்றார். இத்தகைய அரவணைக்கின்ற வரவேற்கின்ற கரங்களாக புனிதக் கதவுகள் இருக்கின்றன. நமக்காகக் காத்திருக்கும் வீடு இறைவனின் இதயம். அவர் வாழ்கின்ற ஆலயம். கண்காணாத இடத்தில் இருந்தாலும் நம்மை அவர் காண்கின்ற இடம் அவரது இதயம். நாம் தொலைவில் இருக்கும்போதே நம்மை நோக்கி நகரும் இதயம். ஏனென்றால் அவர் நம்மை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை.

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற விரும்பும் நாம், மீண்டும் கண்டறியப்பட்ட மீட்பின் மறுசீரமைக்கப்பட்ட குடும்பத்தின் திருப்பயணிகளாக இறைவனின் அன்பு ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதையும் உணர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம். இறைவனின் திறந்த கரங்களிலிருந்து நாம் அனைவரும் ஒரே ஆலயமாக திருஅவையாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அருளடையாளங்கள், திருக்குடும்பம் வழியாக நன்மையை நோக்கிய நமது விடுதலையை நோக்கி நாம் செல்கின்றோம் என உணரவேண்டும்.

புனிதக் கதவு வழியாகச் செல்வது என்பது, இறைவனின் இந்த அழைப்பை ஏற்று, கடவுளின் குழந்தைகளாக வாழ்வது, "நாம் தொலைவில் இருக்கும்போது" நமக்காகக் காத்திருக்கும் தந்தையின் சாட்சிகளாக வாழ்வதாகும். கடவுளின் அருளிற்கு திறந்த இதயத்துடன் பதிலளிப்பதற்கான ஓர் அழைப்பு. இது அவரது அரவணைப்பு நம்மை இணக்கமான வாழ்விற்கு அழைத்துச்செல்கின்றது. நமது மாண்பை மீட்டெடுக்கின்றது. உண்மையான உடன்பிறந்த உணர்வுகளை உருவாக்க உதவுகிறது.

இறைத்தந்தையின் கரங்களான இந்த புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, ​​உவமையில் வரும் இளைய மகனைப் போல, தொலைவில் இருப்பதாகவும், தகுதியற்றவராகவும் உணருபவர்கள் மற்றும் மூத்த மகனைப் போல தனது குறிப்பிட்ட எண்ணங்கள் இதயத்தில் சுமந்து செல்பவர்கள் என இருவேறு நிலைகளில் நாம் இருக்கின்றோம். ஆழ்ந்த கசப்பான சுமைகள் நம்மிடத்தில் இருந்தால், கடவுளின் இனிமையையும், அன்பான குழந்தைகள் நாம் என்ற உணர்வினையும் நம்மால் உணர முடியாது. நோயுற்றவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள், வலி, தனிமை, வறுமை அல்லது தோல்வி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்கமின்மை, அர்த்தமின்மை காரணமாக தங்கள் கரங்களை நீட்ட மறந்தவர்கள், இறைத்தந்தையின் இரக்கமுள்ள கரங்களைத் தேடுவதை நிறுத்தியவர்கள் என அனைவரையும் நினைவுகூர்ந்து செபிப்போம். போர்கள், கருத்து வேறுபாடுகள், சமத்துவமின்மை போன்றவற்றால் சிதைந்து கிடக்கும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் நமது கரங்களை நீட்டுவோம்; நமது பரந்த கரங்களால் கடவுளது அன்பினைப் பிரதிபலிப்போம். நாம் தனியாக மீட்கப்படுவதில்லை மாறாகக் குடும்பமாக மீட்கப்படுவோம் என்பதை உணர்ந்து உடன்பிறந்த உணர்வுடன் வாழ முயல்வோம். அன்னை மரியா மற்றும் யோசேப்பின் ஒளி நிறைந்த சான்று வாழ்க்கை நமது வாழ்வில் பலனளிக்கக்கூடியதாக மாறட்டும். இதனால் மூடியக் கதவுகள் திறந்த கதவுகளாகவும், தொலைதூரத்தில் இருக்கக்கூடிய இதயங்கள் தந்தையின் இல்லத்திற்குக் திரும்பும் இதயங்களாக மாற செபிப்போம்.  ஆமென்.

மறையுரையைத்தொடர்ந்து திருஅவை, குடும்பங்கள், பெற்றொர்கள் மற்றும் பிள்ளைகள், மக்கள், என அனைவரின் நலனுக்காக மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. திருநற்கருணை வழிபாட்டைத் தொடர்ந்து இறுதிப்பாடலுடன் திருப்பலியானது நிறைவுற்றது. டிசம்பர் 24 அன்று தொடங்கிய யூபிலி ஆண்டு 2025 ஆனது 2026 ஜனவரி 6ஆம் நாள் திருக்காட்சி திருவிழா கொண்டாட்டத்தின்போது அதிகாரப் பூர்வமாக நிறைவுக்கு வர இருக்கின்றது. யூபிலி ஆண்டின்போது உலகிலுள்ள மறைமாவட்ட பேராலயங்களிலும், பன்னாட்டு மற்றும் தேசிய திருத்தலங்கள், ஏனைய முக்கியத்துவம் நிறைந்த வழிபாட்டுதலங்கள், புனிதக் கதவுகள் திறக்கப்பட உள்ள நிலையில் வருகின்ற ஜனவரி முதல் நாள் உரோமில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவும் ஜனவரி 6 திருக்காட்சிப் பெருவிழாவனன்று உரோமில் உள்ள புனித பவுல் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவும் திறக்கப்பட உள்ளது.

இந்த யூபிலி 2025ஆம் ஆண்டில் இறைவனின் நிறை ஆசீர் பெற்று வளமோடும் நலமோடும் வாழ மனதார வாழ்த்துகின்றோம். அனைவருக்கும் திருக்குடும்பப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2024, 10:36