கிறிஸ்துவின் மீட்பின் பாதையை குறிக்கும் புனிதக் கதவு

எதிர்நோக்குடன் இருப்பதில் நிறைவு அடைவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையைப் பரப்புவதற்கும், நம்பிக்கையை விதைப்பவர்களாக இருப்பதற்கும் அழுத்தமான மற்றும் சவாலான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றது யூபிலி ஆண்டு - கர்தினால் ஹார்வி.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனித கதவு திறப்பு என்பது கிறிஸ்துவின் மனுவுரு, பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகத் திறக்கப்பட்ட மீட்பின் பாதையை குறிக்கிறது என்றும், கடவுளுடனும், திருஅவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அயலாருடனும் இணக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார் கர்தினால் James Michael Harvey.

ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை உரோமின் புறநகர்ப் பகுதியில் உள்ள புனித பவுல் பெருங்கோவில் புனிதக் கதவினை உரோம் உள்ளுர் நேரம் காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார், உரோம் புனித பவுல் பெருங்கோவில் தலைமைக்குருவான கர்தினால் James Michael Harvey.

மீட்பர் பிறந்ததால் மகிழ்ச்சியையும், கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு என்பதால் அந்த எதிர்நோக்கையும் கொண்டவர்களாக நாம் இக்கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இருக்கின்றோம் என்றும், கடவுளின் திட்டத்தை கிறிஸ்தவ உலகம் நன்கு சிந்தித்து வாழ அழைப்புவிடுக்கும் காலம், இந்த யூபிலி ஆண்டுக் காலம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் James Michael Harvey.

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். என்ற திருப்பாடல் வரிகளுடன் தனது மறையுரையினை ஆரம்பித்த கர்தினால் ஹார்வி அவர்கள், புனிதக் கதவின் திறப்பு மகிழ்வில் நாமும் இத்தகைய உணர்வுடன் இணைந்திருக்கின்றோம் என்றும் கூறினார்.

திருப்பலியின்போது கர்தினால் ஹார்வி.
திருப்பலியின்போது கர்தினால் ஹார்வி.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம் என்ற  திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

மனிதராக பிறந்த இயேசு நம்மிடையே இருப்பது மட்டுமல்ல, நம்மில் ஒருவராக இருக்க வேண்டும்; ஒரு நண்பனாகப் போற்றப்படுவதற்கோ அல்லது வரவேற்கப்படுவதற்கோ மட்டுமல்ல, அவருடைய சொந்த வாழ்க்கையை நமக்குத் தெரிவிக்கவும், கடவுளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தவும் இவ்வுலகிற்கு வந்தார் என்றும், இயேசுவில் நாம் கடவுளின் பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்படுகிறோம், இதனால் அவர் நமக்கு ஓர் மாண்பினை வழங்குகிறார் என்றும் கூறினார் கர்தினால் ஹார்வி.

இரக்கம் நிறைந்த இறைத்தந்தை, நம்மை மீட்க தம்முடைய மகனை நமக்காக அனுப்பினார். உலகத்தின் பாவங்களைப் போக்க சிலுவையில் மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வதன் வழியாக இறைமகன் தன்னைத் தாழ்த்தினார் என்று எடுத்துரைத்த கர்தினால் ஹார்வி அவர்கள், இந்த மீட்பின்போது, ​​அவர் நம்மை "ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின்" கண்ணோட்டத்தில், முடிவில்லாத வாழ்க்கையின் வாக்குறுதிக்கு கொண்டு வருகிறார் என்றும் கூறினார்.

புனித பவுல் பெருங்கோவில்
புனித பவுல் பெருங்கோவில்

மகிழ்ச்சி, எதிர்நோக்கு என்னும் தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட கர்தினால் ஹார்வி அவர்கள், எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணிற்கும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை யூபிலி ஆண்டு அளிக்கின்றது என்றும் பெருங்கோவிலின் புனிதக் கதவினை நம்பிக்கையுடன் கடப்பதன் வாயிலாக, இரக்கம் மற்றும் மன்னிப்பின் காலத்திற்குள் நாம் நுழைகிறோம் என்றும் எடுத்துரைத்தார்.

எதிர்நோக்கு என்பது வெற்று வார்த்தை அல்ல, அல்லது விஷயங்கள் சிறப்பாக அமையும் என்ற தெளிவற்ற விருப்பமோ அல்ல, மாறாக எதிர்நோக்கு என்பது உறுதியானது, கடவுளுடைய வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது இறையியல் நற்பண்பு என்று அழைக்கப்படுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டிய கர்தினால் ஹார்வி அவர்கள், எதிர்நோக்கு செயலுள்ள மற்றும் சுறுசுறுப்பான நல்லொழுக்கம் என்றும் தெரிவித்தார்.

எதிர்நோக்குடன் இருப்பதில் நிறைவு அடைவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையைப் பரப்புவதற்கும், நம்பிக்கையை விதைப்பவர்களாக இருப்பதற்கும் அழுத்தமான மற்றும் சவாலான ஒரு வேண்டுகோளாக யூபிலி ஆண்டு அமைகின்றது என்றும், மனிதகுலம் அனைத்திற்கும் வரலாற்றின் தருணத்தில் கொடுக்கக்கூடிய மிக அழகான கொடை என்றும் கூறினார் கர்தினால் ஹார்வி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2025, 15:49