வாரம் ஓர் அலசல்: இயற்கையைக் காப்போம், நோயின்றி வாழ்வோம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மலைகள், காடுகள், மரங்கள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர், நெருப்பு, காற்று, கோளங்கள் என, இப்பிரபஞ்சத்தைக் கவினுறப் படைத்து, அவற்றைப் பயன்படுத்தி வாழ மனிதருக்கு உரிமை அளித்தார், இறைவன். ஆனால், இந்தப் பூமி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என, மனிதர் நினைப்பதால், உலகின் பல திசைகளிலும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. சூழலியல் சீர்கேடைந்துள்ளது. பல்லுயிர்கள் அழிந்து வருகின்றன. பல்லுயிர்களின் அழிவு, கோவிட்-19 பெருந்தொற்று, எபோலா போன்ற தொற்றுநோய்களுக்கு ஒரு காரணம் என, ஐ.நா. அதிகாரி ஒருவர், கடந்த வாரத்தில் சொல்லியிருக்கிறார். இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்துவரும் பூர்வீக இன மக்களின் அடிப்படை உரிமைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த மக்களின் அடிப்படை உரிமைகளையும், இயற்கையையும், பாதுகாக்கப் பணியாற்றும் சமுதாய ஆர்வலர்கள் பலர், ஆதிக்க சக்திகளால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதற்கு, 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியிலிருந்து, மும்பை டலோஜா சிறையில் வதங்கிவரும், 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களும், மற்ற கைதிகளும் ஒரு சான்று. இருந்தபோதிலும், சமுதாய ஆர்வலர்கள், தங்களின் சமுதாயநலப் பணிகளை கைவிட்டுவிடவில்லை.
பியூஸ் மானுஷ்
இராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பியூஸ் மானுஷ் என்பவர், 1997ம் ஆண்டில், சேலம் நகருக்கு வெளியே அமைந்துள்ள மூக்கனேரி பகுதியில் மரங்கள் இல்லாத குறையைப் போக்க, அங்கிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று பணம் கொடுக்க நினைத்தார். அது பயன்தாரது என்பதை ஊகித்துக்கொண்டு, அவரே மரம் நடத் தொடங்கினார். இதன் பயனாக, ஏறத்தாழ ஐம்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மூக்கனேரியைச் சுற்றி, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களை நட்டுள்ளதோடு, மக்களின் பங்கேற்போடு, அந்த ஏரியைத் தூர்வாரி, அதிலிருந்து தோண்டிய மண்ணை சிறுசிறு திட்டுகளாக மாற்றி, அவற்றை பறவைகள் சரணாலயமாகவும் அமைத்திருக்கிறார். 150 ஏக்கரில் கூட்டுறவுப் பண்ணை ஒன்றையும் அவர் உருவாக்கி இருக்கிறார். சேலத்தைச் சுற்றியிருக்கும் ஏற்காடு, கொள்ளிமலை, சேர்வராயன்மலை போன்ற மலைகளில், கனிம வளங்களை வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட போராட்டத்தையும், பியூஸ் மானுஷ் அவர்கள், நடத்திக்கொண்டிருக்கிறார் என்று, வலைத்தமிழ், விகடன் போன்ற ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சூழலியல் சீர்குலைவு, காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல், வெள்ளம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கைப் பேரிடர்களால் மக்களும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், மே 24, இத்திங்களன்று, புயலாக மாறி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 26ம் தேதி கரையைக் கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Nyiragongo எரிமலை
மேலும், சயீர் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட, இப்போதைய காங்கோ சனநாயக குடியரசின், கோமா மலைப்பகுதியில் அமைந்துள்ள Nyiragongo எரிமலை வெடித்துவருவதால், கோமா பகுதியின் ஆயிரக்கணக்கான மக்கள், அண்டை நாடான ருவாண்டாவுக்குச் சென்றுள்ளனர். உலகின் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான Nyiragongo மலையிலிருந்து வெளியாகும் தீக் குழம்புகள், அந்நகரின் சாலைகளில் பரவி, வீடுகள் தீப்பிடித்து எரிகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆப்ரிக்க நாட்டின், Goma பகுதி மக்களுக்காகச் செபிக்குமாறு, மே 23, இஞ்ஞாயிறன்று வழங்கிய வானக அரசியே வாழ்த்தொலி உரைக்குப்பின் அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்த எரிமலை, 1977ம் ஆண்டில், மூவாயிரம் மீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியதில், 600க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டார்டிகாவில் பனிப்பாறை
புவி வெப்பமடைந்து வருவதால், அண்டார்டிகா பனிப் பகுதியின் ‘ரோனி’ என்ற பரப்பிலிருந்து, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிந்து கடலில் மிதந்து வருவதாக, மே 21, கடந்த வெள்ளியன்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏறத்தாழ 4,320 சதுர கிலோமீட்டா் பரப்பளவில், 170 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டுள்ள இந்தப் பனிப்பாறை ‘A-76’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது, இந்தியாவின் புது டெல்லியைவிட 3 மடங்கு பெரியது என்று கூறப்படுகின்றது. அண்டார்டிகாவின் பிரன்ட் பனிப் பரப்பிலிருந்து, இவ்வாண்டு பிப்ரவரியில் பிரிந்த, பெரிய பனிப்பாறை, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைவிட 1.5 மடங்கு பெரியதாகும். இவ்வாறு, பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம், பலமடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என, அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
Laudato Sí ஆண்டு
நாம் அனைவரும், படைப்பின் பாதுகாவலர்கள் என்ற உணர்வில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருஅவை 2020ம் ஆண்டு மே 24ம் தேதி Laudato Sí ஆண்டைத் துவக்கியது. அந்த ஆண்டு, 2021ம் ஆண்டு மே 24, இத்திங்களோடு நிறைவடைகிறது. மே 23, இஞ்ஞாயிறன்று வழங்கிய வானக அரசியே வாழ்த்தொலி உரைக்குப்பின், Laudato Sí ஆண்டு நிறைவடைவது குறித்து குறிப்பிட்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுமாறும், இப்பூமி, மற்றும், வறியோரின் அழுகுரலுக்குச் செவிமடுக்குமாறும் அழைப்பு விடுத்தார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள, Laudato Sí செயல்திட்டம், மறைமாவட்டம், பங்குத்தளம், துறவு சபைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்கூடங்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் என அனைத்து நிலைகளிலும் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 2015ம் ஆண்டு மே 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்ட இறைவா உமக்கே புகழ் எனப் பொருள்படும், "Laudato Si திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட Laudato Sí ஆண்டு தவிர, மே 16 கடந்த ஞாயிறன்று Laudato Sí வாரமும் துவக்கப்பட்டது.
மரம் நடும் முறை
Laudato Sí ஆண்டு முழுவதும், இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கு, உலகளாவியத் திருஅவையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டில், பங்களாதேஷ் தலத்திருஅவை, அந்நாட்டில், ஏழு இலட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. இந்த Laudato Sí ஆண்டு குறித்துப் பேசிய அந்நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர், இயற்கை மற்றும், பூமியை, நாம் பாதுகாக்கவில்லையெனில், பேரிடரை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். மரங்கள் நடவேண்டும் என்ற ஆர்வத்தை, மக்கள், இன்று மட்டுமல்ல, பல்லாண்டு காலமாகவே கொண்டிருக்கின்றனர். 5ம் நூற்றாண்டில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் வாழ்ந்த துறவிகள், தங்களது உணவு, மற்றும், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ஊசியிலை மரக் காடுகளை உருவாக்கினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்த பண்ணையார்கள், கப்பல் கட்டுவதற்காக மரங்களை வளர்த்தனர். மேலும், தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்ற பழங்குடி இன மக்கள், அங்கு ஐரோப்பியர் செல்வதற்கு முன்னரே, பெரும்பகுதி மரங்களை வளர்த்துள்ளனர். இவ்வாறு, பல்வேறு தேவைகளின் அடிப்படையில் மரங்களை வளர்க்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களிடையே இருந்துவருகிறது. ஆனால் 21ம் நூற்றாண்டில், மரம் வளர்ப்பது, வெறும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே என்பது இல்லாமல், பூமியைக் காப்பாற்றுவதற்குக் கிடைத்த ஒரு முக்கியமான ஆயுதமாகக் கருதப்படுகிறது. ஆயினும், மரங்களை வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியாது என்று, அறிவியல் இதழ் ஒன்று ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள கருத்தை, விகடன் இதழ் பதிவுசெய்துள்ளது. 2020ம் ஆண்டில், இந்திய அரசு கிராமப்புறங்களில் மட்டும் ஏறத்தாழ 26 இலட்சம் மரங்களை நட்டுள்ளது. ஆனால், அவை நிலவியல் அமைப்புக்குத் தகுந்த மரங்களாக இருக்கின்றனவா, மரக் கன்றுகளை நட்டபிறகு, அவை வளரும் வரை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா போன்றவற்றில் எந்தக் கவனமும் செலுத்தப்படுவதில்லை. காலநிலை மாற்றத்தின் வீரியத்தை மட்டுப்படுத்துவது, மரம் நடும் பணிகளின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தாலும், அது, நீரியல் சுழற்சியை முறைப்படுத்துதல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், நிலம் பாலையாகுதலைத் தடுத்தல், காட்டுயிர் வாழ்விடங்களை மீட்டுருவாக்குதல் போன்ற, பல்வேறு செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. அதோடு, உள்ளூர் சமுதாயங்களின் வாழ்வாதாரம், நலவாழ்வு ஆகியவற்றையும் மேம்படுத்துவதை மரம் நடும் முன்னெடுப்புகள் மூலம் நாம் அடைய முடியும். ஆனால், பிரச்சனை மரம் நடுவதில் இல்லை. மரம் நடும் முயற்சிகளை மேற்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, வேம்பு, அரசு, புளி, நெல்லி, அருநெல்லி, இடலை, இரச்சை, எட்டி, ஏழிலைப்பாலை என்று, பல்வேறு வகையான மரங்கள் நிரம்பியிருந்த காடு ஒன்று அழிக்கப்பட்டு, அதற்கு ஈடாக மற்றொரு இடத்தில் ஒரு காட்டை மீட்டுருவாக்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் அனைத்தையுமே பாக்கு மரங்களாக நட்டால், சூழலியலுக்கு எவ்விதப் பயனும் விளையப்போவதில்லை. மேலும், மரம் நடுவதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றனவோ, அதேஅளவுக்கு, தவறான முறையில் மரங்களை நடும்போதும், மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும். மாறாக, எப்படிப்பட்ட மரங்களை, எந்த நிலத்தில் நடுகிறோம் என்பதே, நல்தாக்கத்தைக் கொண்டுவரும். உள்ளூர் பருவநிலை, நிலவியல் அமைப்பு, அந்த நிலத்தின் தன்மைக்குரிய தாவரங்கள் ஆகிய அளவுகோல்களைக் கருத்தில்கொண்டு, மரங்களை நடவேண்டும்.
ஆம், மரம் நடுவது பாராட்டுக்குரிய, சிறந்த முயற்சிதான். ஆனால், அதை எப்படிச் செய்கிறோம் என்பதுதான், இந்தப் பூமியின் நலனுக்கும், மக்களின் வாழ்வுக்கும் நன்மையைக் கொணரும். எனவே நிலம், சூழலியல் போன்றவற்றிற்கேற்ப மரங்களை நட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். நோய் நீங்கி நலமோடு வாழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்