COP26: 2030க்குள் காடுகளை அழிவிலிருந்து மீட்கத் தீர்மானம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
2030ம் ஆண்டுக்குள், இப்பூமிக்கோளத்தின் பசுமை நுரையீரல்களாகிய காடுகளைப் பாதுகாத்துப் பராமரிப்பது, பல்லுயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பது, பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள், COP26 உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளாகிய, நவம்பர் 02 இச்செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டன.
உலகிலுள்ள காடுகளில் ஏறத்தாழ 86 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள், காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்துப் பேணுவதற்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதோடு, அப்பணிக்கு, 192 கோடி யூரோக்களை வழங்கவும் முன்வந்துள்ளன.
அத்துடன், 2030ம் ஆண்டுக்குள், குறைந்தது நூறாயிரம் கோடி மரங்களைப் புதிதாக நடவும், இவை, கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுவதற்கு மிகவும் முக்கியமானவை எனவும் கூறப்பட்டுள்ளது. இன்னும், உணவு மற்றும், ஏனைய விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கும் 28 நாடுகள் உறுதியளித்துள்ளன.
COP26 உச்சி மாநாட்டில், காடுகளைப் பாதுகாப்பது குறித்து வெளியாகியுள்ள இத்தீர்மானம்பற்றி கருத்து தெரிவித்த, மழைக்காடுகள் பாதுகாப்பு குறித்த, ஓர் அரசு-சாரா கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் Federica Bietta அவர்கள், இத்தீர்மானம் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியது, என்றும், அது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த சில சந்தேகங்களும் எழுகின்றன என்றும் கூறினார்.
காடுகளைக் காப்பாற்ற, 1,200 கோடி டாலருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற விளக்கம் அளிக்கப்படவில்லை என்றுரைத்த Bietta அவர்கள், உலக அளவில் காடுகளின் அழிவைக் குறைப்பதற்கு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு, 100 பில்லியன் டாலருக்குமேல் தேவைப்படும் என்று, தனது அமைப்பு கணித்துள்ளதாகத் தெரிவித்தார்.
காடுகளைப் பாதுகாப்பது, உலகின் வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியசுக்குமேல் அதிகரிக்காமல் இருப்பதற்கு அடிப்படையானது எனவும், பாரிஸ் ஒப்பந்தத்தின் மிக முக்கிய நோக்கம் இதுவே எனவும், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கூறினார்.
பிரேசில், இரஷ்யா, சீனா, கொலம்பியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, கோஸ்ட ரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள், காடுகளைப் பாதுகாப்பது குறித்த முக்கியமான தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளவேளை, இந்நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நூறு கோடி யூரோக்களை வழங்க முன்வந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், 2030ம் ஆண்டுக்குள் 9 பில்லியன் டாலரை ஒதுக்குவதற்கு, காங்கிரஸ் அவையிடம் கேட்கவிருப்பதாக அறிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்