அமராவதி நீர்த்தேக்கம்  அமராவதி நீர்த்தேக்கம்  

இனியது இயற்கை: அமராவதி ஆறு, அமராவதி நீர்த்தேக்கம்

பழனி, சாமிநாதபுரத்திற்கு அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி 12–ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால தடுப்பணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

கரூர், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களையும் வளப்படுத்தும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகே தமிழகம் மற்றும், கேரளாவின் எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இது உற்பத்தியாகி, ஏறத்தாழ 282 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, திருமுக்கூடலில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இந்த ஆறு, சங்ககாலத்தில் ஆண் பொருநை என்று அழைக்கப்பட்டது. சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி வந்துள்ளது. சண்முகா ஆறு, குடகனாறு, உப்பாறு ஆகியவை, அமராவதி ஆற்றின் துணை ஆறுகளாகும்.

அமராவதி நீர்த்தேக்கம்

அமராவதி ஆற்றில் உபாி நீரைப் பாதுகாத்து சேமிக்கும் நோக்கில், 1957-58ம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், 9.31 சதுர கி.மீ. பரப்பளவும், 33.53 மீட்டா் ஆழமும் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் கட்டப்பட்டது. நான்கு டி.எம்.சி., கொள்ளளவுகொண்ட இது, ஆண்டுக்கு, 10 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த செங்குத்தான நீர்த்தேக்கம், ஆரம்பத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும், தற்பொழுது அதில் நான்கு மெகாவாட் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. இந்த நீா்த்தேக்கத்தில், தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் (Mugger Crocodile) பண்ணை உள்ளது. இங்கு, பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. இங்கே பூங்கா ஒன்றும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழனி சாமிநாதபுரத்திற்கு அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி 12–ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால தடுப்பணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொங்குசோழ மன்னர் வீர நாராயணன் ஆட்சி காலத்தில், கி.பி. 1,157ம் ஆண்டில் இந்த தடுப்பணை கட்டப்பட்டிருக்கிறது. அணையின் கட்டுமானம் ஆற்றின் அருகில் உள்ள கடத்தூர் எனும் ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி விவசாயத்துக்காக இதனைக் கட்டியுள்ளனர். இதன் பெரும்பகுதி அழிந்துவிட்ட நிலையில், எஞ்சிய பகுதிகளும், அணையின் கிழக்குப் பகுதியில் வெட்டப்பட்ட ஒரு மதகு வாய்க்காலும் இன்றளவும் அழியாமல் உள்ளன. இந்த வாய்க்கால் ஒரு அதிசயம் என்றே கூறலாம். பொதுவாக ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டும் போதோ அல்லது மதகு வாய்க்கால் வெட்டும் போதோ, பாறாங்கற்களை அடியில் வைத்து அதன் மேல் செங்கற்களை வைத்துக் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கு செங்கற்களை அடியில் வைத்து, அதன் மேல் பாறாங்கற்களை வைத்து மதகு வாய்க்கால் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (நன்றி: இணையதளங்கள்)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2022, 15:14