இலங்கையில் பொருளாதார நெருக்கடி இலங்கையில் பொருளாதார நெருக்கடி 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் களையப்பட புதிய திட்டம்

இலங்கையில் 1,200 கோடி டாலர் மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு, குறிப்பாக, வேளாண் மற்றும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு, அடுத்த 15 மாதங்களுக்கு உதவ உலக வங்கி தீர்மானித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் நிலவும் உணவுப் பற்றாக்குறைவால், அந்நாட்டின் பெருமளவான மக்கள், ஒரு நாளைக்கு மூன்றுவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் இந்நேரத்தில், அந்நாட்டில் பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று, ஆசியச் செய்தி கூறியுள்ளது.

கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென்று, ஆசிய வளர்ச்சி வங்கியும், பன்னாட்டு நிதியகமும் இணைந்து பல்வேறு நிதி உதவித் திட்டங்களை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன என்றும், ஆசியச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நாடு, சுதந்திரம் பெற்றதற்குப்பின்னர் எதிர்கொண்டுவரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, கடந்த ஆண்டில் இலங்கை அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்கள் கொண்டுவந்த இயற்கை வேளாண் திட்டத்தால் மேலும் மோசமடைந்துள்ளது எனவும், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்தால் மக்கள் மூன்று வேளை உணவுக்குத் துன்புறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிதித் துறை, இலங்கை அரசு ஆகிய இரண்டும் பன்னாட்டு கடனுதவி நிறுவனங்களோடு இணைந்து, இலங்கையின் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியைக் களைவதற்கு அண்மை நாள்களில் செயல்திட்டங்களைத் துவக்கியுள்ளன.

உலக வங்கி, அடுத்த 15 மாதங்களுக்கு, 1,200 கோடி டாலர் மதிப்புடைய, வேளாண் மற்றும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவத் தீர்மானித்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

பாலினப் பாகுபாடு மற்றும், தொழில் சந்தை சவால்கள் என்ற தலைப்பில், 600 நிறுவனங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஐ.நா. நிறுவனம், இலங்கையில், 2019க்கும், 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்களின் வேலைவாய்ப்பு 47 விழுக்காடு குறைந்துள்ளது என்று கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2022, 14:26