வாரம் ஓர் அலசல்: அமைதியான மனமே, முக்கிய மூலதனம்
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவை, பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு பல ஆண்டுகளாக நடந்த சுதந்திரப் போராட்டம் 1947ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இந்தியாவும் கத்தியின்றி, இரத்தமின்றி சுதந்திரம் பெற்றது என்ற புகழையும் அடைந்தது. ஆனால், அந்த விடுதலை, எதிர்ப்பார்த்த அளவு, இனியதாக அமையவில்லை. ஏனெனில், அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பாகிஸ்தான் என்ற பிரிவினை பிரச்சனைகள், 1946ம் ஆண்டு ஆகஸ்ட் 16க்கும் 18ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்திற்குள் வன்முறைப் படுகொலைகளாக மாறின. 75 ஆண்டுகளுக்குமுன் நடந்த அந்தச் சோகச் சம்பவத்தின்போது, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற இக்பால்-அலா ராக்கி என்ற முஸ்லிம் தம்பதிகளின் கண்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை தென்பட்டது. அந்தக் குழந்தை கலவரத்தில் கொல்லப்பட்ட தன் தாயின் பக்கத்தில் உட்கார்ந்து, அம்மா இறந்ததுகூடத் தெரியாமல் பசிக்காக முட்டி மோதி அழுதுகொண்டிருந்தது. அந்த காட்சியைக் கண்டு கண்கலங்கிய இக்பால் தம்பதியினர், குழந்தையை வாரி எடுத்து அதன் பசியைப் போக்கிவிட்டு தங்களுடனேயே எடுத்துச்சென்றனர்.
இக்பால் தம்பதியினர்
பாகிஸ்தான் சென்ற இக்பால் தம்பதியினர், அக்குழந்தைக்கு மும்தாஜ் என்று பெயரிட்டு, தங்களின் சொந்த மகளாக வளர்த்து வந்தனர். தற்போது மும்தாஜ், பேரன் பேத்தி எடுக்கும் பாட்டியாக உள்ளார். இந்த நிலையில் மும்தாஜின் வளர்ப்புத் தந்தையான இக்பால் அவர்கள், முதுமை காரணமாக இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது, தனது 75 வயதான வளர்ப்பு மகள் மும்தாஜை அருகில் அழைத்து, நீ எங்கள் வளர்ப்பு மகள்தான் என்ற உண்மையையும், நடந்த நிகழ்வையும் சொல்லிவிட்டு உயிர்விட்டுள்ளார். அதைக் கேட்ட மும்தாஜ் பாட்டி, தன் தாய் மற்றும், குடும்பத்தை நினைத்து கண்ணீர் சிந்தினார். தன் தாயின் கண்ணீரைப் பார்த்த மும்தாஜின் மகன் சபாஷ், அச்சம்பவம் நடந்த ஆண்டு, இடம் போன்ற விடயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன் தாயின் குடும்பத்தார் யாராவது இருக்கிறீர்களா? எனக் கேட்டிருந்தார். இவரது வேண்டுகோள் வைரலாகப் பரவியதன் எதிரொலி, மும்தாஜின் நான்கு சகோதரர்களுமே உயிருடன் இருப்பது தெரியவந்தது. சர்தார் சிங்,குர்பீந்தர் சிங்,நரேந்திர சிங்,அம்ரீந்தர் சிங் ஆகிய அந்த நான்கு சகோதரர்களும் 75 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த தங்கள் சகோதரியைப் பார்க்க விரும்பினர். இவர்களது சந்திப்பிற்கு ஒரு குருத்வராவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விரு குடும்பத்தினரும் சந்தித்தபோது, பேச எண்ணியிருந்ததை கண்ணீர் நிறைந்த கண்களால் வெளிப்படுத்தினர். இவ்வாறு 75 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த வன்முறைக் கலவரத்தால் பிரிந்த உறவுகள் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டதை, மே 19, கடந்த வியாழனன்று எல்.முருகராஜ் அவர்கள் தினமலரில் பதிவுசெய்திருந்தார்.
போர்கள், கலவரங்கள், பயங்கரவாதங்கள் போன்ற வன்முறைகளால், மும்தாஜ் குடும்பம் போன்று, பல்வேறு குடும்பங்கள் சிதறுண்டுபோய் பல ஆண்டுகள் சென்று சந்தித்து ஆரத்தழுவும் காட்சிகளை அவ்வப்போது ஊடகங்களில் பார்த்தும், வாசித்தும் வருகிறோம். இக்காலக் கட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் இடம்பெற்று வருகின்றன. உக்ரைன்-இரஷ்யா போர் குறித்து மே 21, இச்சனிக்கிழமையன்று ஊடகத்திடம் பேசியுள்ள உக்ரைன் அரசுத்தலைவர் Volodymyr Zelenskyy அவர்கள், “இராணுவத்தின் வெற்றியால் அல்ல, மாறாக, தூதரகப் பேச்சுவார்த்தைகள் வழியாக மட்டுமே, போரை முடிவுக்குக் கொணர முடியும்” என்றும், "ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். சினிமா போல கடைசி கைதட்டலுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே உக்ரைனின் மாரியுப்போல் நகரின் Azovstal இரும்பு ஆலையின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படைவீரர்களின் கடைசிக் குழுவும் சரணடைந்துள்ளது என்று இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தப் போரிலும் பல உக்ரைன் குடும்பங்கள் பிரிந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். போரின் கொடூரங்களை நாடுகளின் தலைவர்கள் அறிந்திருந்தும், மண் ஆசை, அதிகார ஆசைக்காக சிலர் போர்களை நடத்தி வருகின்றனர்.
ஐ.நா. அமைதிகாக்கும் படைகள்
உலகில் போர்கள் இடம்பெறும் பகுதிகளில் அமைதியைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாக்கும் படைகளும் பெரும் பங்கு வகித்து வருகின்றன. 1948ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் நீல நிறக் கொடி மற்றும் நீலநிறத் தலைக்கவசத்தோடு பாதுகாப்புப் பணியை ஆற்றியபோது, கடந்த ஆண்டில் உயிரிழந்த 135 பேர் உட்பட 4,200 அமைதிகாக்கும் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில்கூட மாலி நாட்டில், இந்த அமைதிப்படையின் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் நாடுகள், குடும்பங்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. அமைதிகாப்பாளர்கள், அந்நாடுகளில் அமைதி மற்றும், நிலையான தன்மை உருவாகவும், எண்ணற்ற அப்பாவி குடிமக்களின் வாழ்வு காப்பாற்றப்படவும் உதவியுள்ளனர். இந்த அமைதிப் பணியில் இவர்கள் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும், போரை முடிவுக்குக்கொணரவும், நிலைத்திருக்கவல்ல அரசியல் தீர்வு காணப்படவும் உதவியிருக்கின்றனர்.
இவ்வாறு இப்படையினர் பணிகளை ஆற்றும்போது, ஐ.நா. உறுப்பு நாடுகள், குடிமக்கள் சமுதாயம், அரசு-சாரா நிறுவனங்கள், ஐ.நா. அமைப்புகள், மற்றும், ஏனைய அமைப்புகளோடு தங்களின் ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர். இதில், பொருளாதார வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு காக்கப்படல், பெண்களின் உரிமைகள், நலவாழ்வு, கல்வி போன்றவற்றில் சாதாரண மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். ஐ.நா. அமைதிகாப்போர் பணி அமைப்பு, 1948ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி முதலில் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலுக்கும், அதன் அருகிலுள்ள அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதற்கென்று, சிறிய எண்ணிக்கையில் ஐ.நா. இராணுவ கண்காணிப்பாளர்களை மத்திய கிழக்குக்கு அனுப்புவதற்கென்று, ஐ.நா. போர்நிறுத்த கண்காணிப்பு நிறுவனம் (UNTSO) அமைக்கப்பட்டது. அதற்குப்பின்னர் ஐ.நா. அமைதிகாப்போர் அமைப்பில் பணியாற்றியுள்ள பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள், உலகின் 72 இடங்களில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இப்போது, 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ, காவல்துறை மற்றும் சாதாரண மக்கள், உலகில் 12 இடங்களில் ஐ.நா.வின் நீலநிறக் கொடியுடன் பணியாற்றி வருகின்றனர்.
ஐ.நா. அமைதிகாப்போர் உலக நாள், மே 29
இந்த அமைதிகாக்கும் பணியில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் மே 29ம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்போர் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு வருகிற ஞாயிறன்று இந்த உலக நாள், "மக்கள், அமைதி, முன்னேற்றம், கூட்டாண்மையின் வல்லமை” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்வுலக நாள் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், மே 26, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டில் அமைதிகாக்கும் பணியில் உயிரிழந்தவர்களுக்கு Dag Hammarskjold பதக்கமும் வழங்கப்படுகிறது.
உலகில் இடம்பெற்ற இரண்டு பெரும் போர்களுக்குப்பின் 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம், “வருகின்ற தலைமுறைகளை போரின் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுதல்" என்ற முக்கிய குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் அமைதிகாப்போர் அமைப்பின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 1993ம் ஆண்டில் ஏறத்தாழ ஐம்பதாயிரமாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2017ம் ஆண்டில் ஒரு இலட்சமாக அதிகரித்துள்ளது. உலகில் இடம்பெறும் போர்களை முடிவுக்குக்கொணர ஐ.நா. நிறுவனம் அதிக ஆர்வமாக உள்ளது என்பதையே இவ்வெண்ணிக்கை வெளிப்படுத்துகிறது. இவர்கள் ஆற்றுகின்ற பணித்தளங்களில் ஆறு, 26 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஐ.நா. அமைதிகாக்கும் படையினரில் 94 விழுக்காட்டினர், ஆப்ரிக்கா மற்றும், மத்திய கிழக்கில் பணியில் உள்ளனர்.
ஐ.நா. அமைதிப்படைக்கு உதவும் நாடுகள்
அமெரிக்க ஐக்கிய நாடு (27.89%), சீனா (15.21%), ஜப்பான் (8.56%), ஜெர்மனி (6.09%), பிரித்தானியா (5.79%), பிரான்ஸ் (5.61%), இத்தாலி (3.30%), இரஷ்யா (3.04%), கனடா (2.73%), தென் கொரியா (2.26%) ஆகிய நாடுகள் இப்படையினருக்கு அதிக அளவில் நிதியுதவி செய்கின்றன என்று 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐ.நா. அமைதிப்படைக்கு ஆள்களைக் கொடுத்து உதவும் நாடுகளுக்கு, ஒரு படைவீரருக்கு, ஒரு மாதத்திற்கு 1,410 டாலர் பணத்தை ஐ.நா. நிறுவனம் அனுப்புகிறது என்று, 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
ஐ.நா. அமைதிகாப்போர் பணித்தளங்களில் 49ல், இந்தியாவின் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் மற்றும், காவல்துறையினர் பணியில் உள்ளனர். பெருமளவில் பெண் படைவீரர்களையும் இந்தியா கொடுத்து உதவியுள்ளது. இந்த அமைதிகாக்கும் படை அமைப்பில் 2014ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 7,860 பேர் மூன்றாவது பெரிய படைப்பிரிவாக பணியில் இருந்தனர். இலங்கையிலிருந்து இந்தப் படை அமைப்பில் உள்ள வீரர்கள், மத்திய ஆப்ரிக்கா, தென் சூடான் மற்றும், மாலி நாடுகளில் பணியாற்றுகின்றனர். ஐ.நா. அமைதிப் பணியை வீரத்துடன் ஆற்றியதற்காக, 2021ம் ஆண்டில் 135 இந்தியப் படைவீரர்கள் மற்றும், 103 இலங்கை படைவீரர்களுக்கு ஐ.நா. விருதுகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அமைதிக்காகப் பணியாற்றியபோது உயிரிழந்த பலரை நன்றியோடு நினைவுகூர்கிறோம். ஆயுதங்களின் சப்தங்கள் அடங்கட்டும் என்றே நன்மனம் கொண்ட அனைவரும் குரல்கொடுத்து வருகின்றனர். இதற்காக எல்லா மதத்தினரும் கடவுளிடம் கண்ணீரோடு வேண்டி வருகின்றனர். உலகம் அமைதிப் பூங்காவாக மாறும் நாளை நாம் எல்லாருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தன்னகத்தே அமைதியை அனுபவிக்காத ஒருவரால் அடுத்தவரை அமைதியாக வாழவிட முடியாது. எந்நிலையிலும் நிலைகுலையாது அகஅமைதியில் இருப்பவரே மற்றவரை அமைதியில் வாழவைக்க முடியும். இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறன்று கூறியிருக்கிறார். “அமைதி எப்போதும் அழகானது” (Walt Whitman). அமைதியான மனமே, வாழ்வின் முக்கிய மூலதனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்