ரூப்குந்த் ஏரி ரூப்குந்த் ஏரி 

இனியது இயற்கை : ரூப்குந்த் ஏரி

600 முதல் 800 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ரூப் குண்ட் ஏரியை 'மர்ம ஏரி' என்றழைக்கிறது உத்தராகண்ட் அரசு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்   

இமயமலையின் மூன்று குன்றுகள் மீதுள்ள செங்குத்தான பகுதியின் அடிவாரத்தில் இருக்கும் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது ரூப்குந்த் ஏரி. ரூப்குந்த் எனும் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 5,029 மீட்டர் உயரத்தில், திரிசூல் என்கிற மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் உயரமான மலைத் தொடர்களில் ஒன்றான இது, உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பனிக்கட்டிகளுக்கு அடியிலும் எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த ஏரியை கடந்த 1942ம் ஆண்டு ரோந்துப் பணியில் இருந்த பிரிட்டானிய வன அதிகாரி ஒருவர் கண்டு பிடித்தார். அந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் சிதறிக்கிடக்கின்றன. ஏரியில் பனிக்கட்டி உருகும்போதுதான் எலும்புக் கூடுகள் தெரிகின்றன. சில நேரங்களில் தசையோடு அவ்வெலும்புகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இன்று வரை அந்த ஏரியில் ஏறக்குறைய 600 முதல் 800 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் அரசு இந்த ஏரியை 'மர்ம ஏரி' என்றழைக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேல் மானுடவியலாளர்கள், மற்றும் அறிவியலாளர்கள் இந்த எலும்புகளை ஆராய்ந்தனர். யார் இந்த மக்கள்? அவர்கள் எப்போது இறந்தார்கள்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என பல்வேறு கேள்விகளால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ரூப்குந்த் ஏரியில் இருக்கும் எலும்புகளை ஆராய்ந்தவர்கள், இப்பகுதியில் இறந்தவர்கள் பெரும்பாலும் உயரமானவர்கள், சராசரி உயரத்தைவிட அதிக உயரமானவர்கள் எனக் கூறினர். அதோடு 35 முதல் 40 வயது கொண்ட, பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள் எனக் கூறப்பட்டது. இந்த எலும்புகளில் குழந்தைகள், அல்லது சிறுவர்கள் இல்லை. சில எலும்புகள் வயதான பெண்களுடையது. அனைவருமே நல்ல உடல் நலத்தோடு இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அறிவியலாளர்கள், 15 பெண்கள் உட்பட 38 உடல்களில் மரபணு பரிசோதனையும், இவற்றின் காலத்தைக் கண்டுபிடிக்க 'கார்பன் டேட்டிங்' பரிசோதனையும் செய்தார்கள். அதில் சில எலும்புகள் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கின்றன என்று தெரியவந்தது. இந்த ஏரியில் இறந்து கிடப்பவர்கள் மரபணு ரீதியாக பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும், பல்வேறு காலக்கட்டங்களில் இறந்ததாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 11:03