புகையிலை விழிப்புணர்வு உலக நாள் 2022 புகையிலை விழிப்புணர்வு உலக நாள் 2022 

வாரம் ஓர் அலசல்: “அடிமையாகாதே, அடிமையாக்காதே”

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் புகையிலை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், வாய் புற்றுநோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் புகையிலையைப் பயன்படுத்துவோரில் 12 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

வாழ்க்கையில் எதிலும் நிம்மதி அடையமுடியாத ஒருவர், அது பற்றிய பல கேள்விகளோடு ஆழ்ந்த தேடல் பயணத்தைத் தொடங்கினார். பல ஆசிரமங்கள் சென்றார். பற்றுக்களைத் துறப்பதே ஞான வாயிலின் திறவுகோல் என்றனர் பலர். எனவே அவர் தனது உடைமைகள் அனைத்தையும் உதறித்தள்ளினார். பின்னர் தான் இருக்கின்ற இடத்தில்கூட பற்றுதல் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர் ஊர் ஊராக அலைந்து திரிந்தார். அப்படியும் அவர் மனதில் அமைதி கிடைக்கவில்லை. ஒருநாள் வழியில் ஒருவரைச் சந்தித்தார். அவர் முகத்தில் நிலவிய சாந்தமும் கண்களில் தென்பட்ட எல்லையில்லாப் பேரானந்தமுமே அவர் ஒரு ஜென் குரு என்பதை அந்த தேடல் மனிதருக்கு உணர்த்தின. இவர் அந்தக் குருவை வணங்கி, குருவே, நான் ஞானத்தைத் தேடி அலைகிறேன் என்றார். அதற்கு ஜென் குரு அப்படியா? என்றார். ஆம். நான் என் இரத்த உறவுகளையும், உடைமைகளையும் உதறிவிட்டேன். பற்றுக்களைத் துறந்துவிட்டேன். இப்போது மனது சலனமின்றி இருக்கிறது என்றார். அதற்கு ஜென் குரு, அப்படியா! சரி, அதையும் விட்டுவிடு என்றார். அதைக் கேட்டதும் அவர் திகைத்தார். குருவே, நான்தான் எல்லாவற்றையுமே விட்டுவிட்டதாகச் சொன்னேனே, இப்போது எனது மனதில் வெறுமைதானே குடிகொண்டு இருக்கிறது? என்று கேட்டார். சரி, அதையும் விட்டுவிடு என்றார் ஜென் குரு. அதை எப்படி விட்டுவிடமுடியும்? சுவாமி என்றார் அவர். அதை விட முடியாதா, அப்படியானால் அதனைச் சுமந்துகொண்டு திரி என்றார் ஜென் குரு.

இப்படி இதை, அதைத் துறந்துவிட்டேன், அந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டேன் என்று, வெறுமனே வாய்ச்சொல் வீரர்களாய் இருப்பவர்களால் எதையும் விட்டுவிட முடியாது என்கிறது இந்த ஜென் கதை. அப்படித்தான் நண்பர் ஒருவர் எப்பொழுதும் சிகரெட்டும் கையுமாக இருப்பார். திடீரென ஒரு நாள் வந்து நான் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டேன் என்றார். அடுத்த நாள் பீடியோடு வந்து. சிகரெட்டை விட்டுவிட்டேன் என்றார். அதற்கும் அடுத்த நாள், இன்றோடு பீடியையும் விட்டுவிடுவேன் என்றார். அதற்கும் மறுநாள் சுருட்டோடு வந்தார். பின்னர் புகைக் குழாயோடு வந்தார். பின்னர் புகையிலையை வாயில் அடக்கிக்கொண்டு வந்தார். அப்போது ஒன்று மட்டும் புரிந்தது, இந்த நண்பருக்குப் புகைப்பதை விடுவது கடினம் என்று. உண்மைதான். எந்தப் பழக்கத்தையும் திடீர் என்று விடுவது எளிதல்ல. ஆனால் விட்டுவிடலாம். ஏனெனில் அப்படி விட்டுவிட்ட பலரைப் பார்த்திருக்கிறோம். பலர் பற்றிச் சொல்லவும் கேள்விப்பட்டிருக்கிறோம். டாக்டர் அம்பேத்கார் அவர்கள் கூறியிருப்பதுபோல, ஒருவர் தான் ஒன்றுக்கு அடிமை என்பதையும், அதனால் வருகின்ற தீமையையும் முதலில் அவரை உள்ளார்ந்து உணரச்செய்தால், பின்னர் அந்த மனிதர் தானாகவே அதிலிருந்து மீண்டு வருவதற்கு வாய்ப்புண்டு.

புகையிலை எதிர்ப்பு உலக நாள்

மே 31, இச்செவ்வாய் புகையிலை விழிப்புணர்வு உலக நாள். புகையிலை எதிர்ப்பு உலக நாள் என்றும் இதனைக் கூறலாம். புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இந்நாளின் நோக்கம். புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக யுக்திகளும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட்சியப் போக்கும் புகையிலை பொருட்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு காரணமாகின்றன. நிகோடின் என்ற தாவரத்தின் இலைகளிலிருந்து புகையிலை தயாரிக்கப்படுகிறது. இது ஆன்மீக நிகழ்வுகள் மற்றும்,  பொழுதுபோக்கு போதைப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. புகையிலைப் பயன்பாடு, முதலில் அமெரிக்க நாடுகளில் ஆரம்பமானது. பின்னர் 1559ம் ஆண்டில், போர்த்துக்கல் நாட்டிற்கு பிரெஞ்சு தூதராகப் பணியாற்றிய Jean Nicot என்பவரால் ஐரோப்பாவில் பழக்கப்படுத்தப்பட்டது. பின்னர் வெகு விரைவில் புகையிலை, முக்கிய வர்த்தகப் பொருளாகவும் மாறியது. 1900களில் புகையிலை பற்றி வெளிவந்த மருத்துவ ஆய்வுகள் இவ்வாறு கூறுகின்றன. புகையிலையை எந்த முறையில் பயன்படுத்தினாலும், அது, மாரடைப்பு, பக்கவாதங்கள், நீண்டகால நுரையீரல் பிரச்சனைகள், ஆண் மலட்டுத்தன்மை, பெண்களில் கருச்சிதைவு, கர்ப்பப்பை புற்றுநோய் என பல்வேறு புற்றுநோய்கள் உள்ளிட்ட பல நோய்களால் மனிதரின் உயிர்வாழ்க்கை அச்சுறுத்தப்படுகின்றது. கோவிட்-19 பெருந்தொற்று நுரையீரலைத் தாக்கும் என்பதால், புகை பிடித்தல் அந்நோய் பரவுதலுக்குக்கூட காரணமாக உள்ளது. புகையிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர். உலகில் இறக்கும் பத்துப் பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கின்றார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் புகையிலை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், வாய் புற்றுநோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் புகையிலையைப் பயன்படுத்துவோரில் 12 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர். புகையிலைப் பயன்பாட்டால் இந்தியாவில் மட்டும் 90 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்

புகையிலை பயன்பாட்டால் ஆபத்து

ஒரு சிகரெட்டில் நான்காயிரம் வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்குமேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம். எனவே 1987ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, உலக நலவாழ்வு நிறுவனம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி புகைபிடித்தல் எதிர்ப்பு உலக நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த நாள், உலக நலவாழ்வு நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவு ஆகும். பின்னர் 1989ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி உலக நலவாழ்வு நிறுவனம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, மே மாதம் 31ம் தேதி, புகையிலை எதிர்ப்பு உலக நாள் உருவாக்கப்பட்டது. ஆதலால் 1989ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் புகையிலை எதிர்ப்பு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமையில், இந்தியா உள்பட 170 உறுப்பு நாடுகள், புகையிலையை முழுமையாக கட்டுப்படுத்துவதை இலட்சியமாக வைத்து ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஒவ்வோர் உறுப்பு நாடும் அவ்வுடன்படிக்கையை நிறைவேற்ற எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை பொறுத்துத்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகத் தேவையானதும்கூட.

புகையிலைப் பயன்பாட்டைக் கைவிட

இவ்வாண்டு இவ்வுலக நாள், புகையிலை, மனிதரை, பூமிக்கோளத்தை கொலைசெய்கிறது என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. புகையிலைப் பயன்பாடு நம் பூமிக்கோளத்தை நஞ்சாக்குகிறது. புகையிலையை வாயில்போட்டு மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்ற உடலுக்குத் தீமை விளைவிக்கும் பழக்கங்கள், தனிநபரை மட்டுமன்றி, சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன என்பதே இவ்வாண்டில் அதிகம் வலியுறுத்தப்படுகின்றன. எனவே புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம், முதலில் ஒருவரது ஆழ்மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் அதற்கு கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். புகைப்பிடிக்கும் உணர்வு அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடலாம், தண்ணீர் குடிக்கலாம். மேலும், இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையைச் சாப்பிடலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைச் சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இப்படிச் செய்வதால் ஒருவரின் புகைப்பிடிக்கும் வேட்கை குறைப்படும்.

மாறுவது அவரவர் மனதைப் பொறுத்தது

எதற்கும் அடிமையாகாமலும், யாரையும் அடிமையாக்காமலும் இருக்கும் வழிகள் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அடிமையாக ஆசைப்படும் மக்களின் நிலைமை ஆபத்தானது. அடிமையாக்க ஆசைப்படும் சுயநலத்தன்மை அதிலும் ஆபத்தானது. நமக்கு எந்த ஒரு தீய பழக்கத்தையும் விட்டுவிட முதலில் மனதில் உறுதி வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர். ஒரு நாள் குரு ஒருவர் தன் சீடர்களிடம், வைரம் பாய்ந்த தேக்கு மரம் ஒன்றைக் காட்டி, இதில் என்னென்ன செய்யலாம் என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். ஒரு சீடன் மட்டும் மௌனமாக இருந்தார். உனக்கு ஒன்றுமே தோன்றவில்லையா? என குரு கேட்டார். அப்போது அந்தச் சீடர், இது, இந்த மரத்தைப் பயன்படுத்துபவரைப் பொறுத்தது, அதை இழைக்க நினைத்தால் வாசலில் கதவாக, சுவரில் சன்னலாக, உட்கார நாற்காலிகளாக, படுக்க கட்டில்களாகச் செய்யலாம். இதைப் பிளக்க நினைத்தால் அடுப்புக்கு விறகாக எரிக்கலாம், இப்படி இழைக்கவும் பிளக்கவும் நினைப்பது அவரவர் மனதைப் பொறுத்தது என்று பதில் கூறினார். ஆம். நம்மிடமுள்ள சக்தியை ஆற்றல்மிக்கதாகவோ, அழிவுமிக்கதாகவோ ஆக்குவது அவரவர் கையில்தான் உள்ளது. சிந்தனையாளர் டிஸ்ரேலி அவர்கள் கூறியிருப்பதுபோல, ஒருவரது நோக்கம் வலுவானதாக இருந்தால், வெற்றி பெறுவதிலிருந்து யாராலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது. இளைஞர்களின் வீரத்துறவி விவேகானந்தர் அவர்களும், ஓர் இளைஞரால் எட்டிப்பிடிக்க முடியாத உயரங்கள் என்று எதுவுமே இல்லை, அந்த உயரத்தை எட்டுவதற்கு வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை, அது அவனுக்குள்தான் இருக்கின்றது, அதுதான் வெற்றிக்கு வழி என்று கூறியுள்ளார்.

இக்காலத்தில் புகைப்பிடிப்பதை இளமையின் ஒரு நாகரீகம் என இளம் தலைமுறையினர் நினைக்கின்றனவோ என்று அஞ்ச வைக்கின்றது. எனவே, புகையிலை தொடர்புடைய பொருள்களைப் பயன்படுத்துவோர், அவை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து விழிப்பாயிருந்து அவற்றிலிருந்து விடுபட முயற்சிகள் மேற்கொள்ள, புகையிலை விழிப்புணர்வு உலக நாள் அழைப்பு விடுக்கிறது. புகையிலைப் பயன்பாட்டிற்கு அடிமையாகாமல், அதில் எவரும் அடிமையாக விடாமல் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் இந்த உலக நாள் தூண்டுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2022, 15:09