இனியது இயற்கை – நெய்தல் நிலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நெய்தல் என்பது, கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களின் தொழில் "மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்" ஆகியன. மீன், உப்பு விற்று அதன் மூலம் கிடைத்த பொருள் இவர்களின் உணவு. இவர்கள் பாய்மரக் கப்பலுக்கு, பாய்களை நெய்ததின் காரணமாக, இந்நிலம் நெய்தல் என்ற பெயரைப் பெற்றது என்ற கருத்தும் உண்டு. புன்னை, ஞாழல் ஆகியவை நெய்தல் நிலத்தில் வளரும் மரங்கள். தாழை, நெய்தல் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கடற்காகம், முதலை, சுறா ஆகியவை இங்கு வாழ்கின்ற பறவைகள், மற்றும் விலங்குகள் ஆகும்.
கடலைச் சார்ந்த நெய்தல் நிலம், மணல் நிலமாக இருப்பதால், இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளைவதில்லை. ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்துவந்து விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.
சில இடங்களில் கடற்கரையோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த உப்பளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு தயாரிக்கப்பட்டது. நெய்தல் நில மக்கள் உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். அம்மக்களின் வாழ்க்கை கடினமானதே.
கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறைமுகங்கள் இருந்தன. துறை முகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுக நகரங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின. ஆகவே துறைமுக நகரங்கள் நாகரீகமும் செல்வமும் பெற்று விளங்கின. அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரீகம், மருத நிலத்திலும் துறைமுகப்பட்டினங்களிலும் வளர்ந்தது.
தமிழ்நாடு 1,076 கி.மீ. அழகான கடற்கரையைக் கொண்டுள்ளது. கடற்கரையோரத்தில் அழகான கோவில்கள் மற்றும் கைவிடப்பட்ட கோட்டைகள் உள்ளன. கடற்கரைகள் மற்றும் முகத்துவாரங்களுக்கு கூடுதலாக குளங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளன. புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர் நீர் ஏரியாகும். இந்த ஏரி தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்