இனியது இயற்கை: நிலத்தின் தோற்றம்
மேரி தெரேசா: வத்திக்கான்
நாம் வாழ்கின்ற உலகம், வானம், காற்று, நெருப்பு, நீர் நிலம் ஆகிய ஐம்பூதங்களினால் ஆனது. அவற்றின் தோற்றம் குறித்து நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் அடிப்படைகள் உள்ளது உலகம் என்று புத்தம் கூறுகிறது. இந்த ஐம்பூதங்களில் நீர் பற்றி கடந்த பல மாதங்களாக வழங்கினோம். இதைத் தொடர்ந்து நிலம் என்ற பூதவகை குறித்து வழங்குகிறோம். நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் (ரூபம்), சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண் (பிருதிவி) எனும் பூதம்.
நிலம்
"நிலம்" என்பது ஒரேயிடத்தில் நிலையாக நிற்பது என்னும் பொருளில் "நில்" என்னும் சொல்லிலிருந்து "நிலம்" என்னும் சொல் உருவானது. இது ஒரு திராவிட மொழிச் சொல். இது, மலயாளம், கன்னடம், துளு, குடகு, படகர், தெலுங்கு துட போன்ற பிற திராவிட மொழிகளில், நிலம் {மலையாளம்), நெல (கன்னடம், துளு, குடகு, படகர்), நேல (தெலுங்கு), நெல்ன் (துட) எனச் சொல்லப்படுகின்றது. நிலத்தில், பொருள்களின் உற்பத்திக்குப் பயன்படும் மண், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கிடைக்கின்றன. நிலம், இயற்கையின் கொடையாகும். அதை மனிதரால் உருவாக்க முடியாது. இது இடம்பெயரும் தன்மை அற்றது. இது உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இது, நிலவளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, நிலமகள், நிலப்பனை, மாநிலம், விளைநிலம், குறுநிலம், நன்னிலம், நானிலம், தரிசு நிலம், உவர்நிலம், களர்நிலம், சதுப்புநிலம், மேய்ச்சல் நிலம் என்று பலவகைப் பண்புகளைக் கொண்டுள்ளது. நில உலகிற்கு ‘ஞாலம்’ என்பது ஒரு பெயர். விண்வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிற நில உருண்டை என்பது அதன் பொருள். ஒன்பது கோள்களுள் ஒன்று ஞாலம். சூரியனில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தின் விளைவால், 500 கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச சிதறி வானவெளியில் ஒரு தனிக்கோளமாக மிதந்து அதிவேகத்துடன் சுழன்றது. எனவே சூரியனின் ஒரு பகுதியாக விளங்கிய உலகம், தொடக்க காலத்தில் ஒரு தீப்பிழப்பாகவே சுழன்று தொங்கிக் கொண்டிருந்தது. காலம் செல்லச் செல்ல பல்வேறு இயற்கை மாறுபாடுகள் கொண்ட இவ்வுலகம் தோன்றியது. தொடக்கத்தில் வாயுப்பிழம்பாக இருந்த உலகம், குளிர்ந்து திண்ணிய பாறைப் பொருள்களால் ஆன மேலோட்டினைக் கொண்ட கோளமாக மாறிவிட்டது. இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (நன்றி விக்கிப்பீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்