இனியது இயற்கை - முல்லை நிலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். முல்லை நிலமானது, செம்மண் பரந்திருத்தலால் செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து நாகரீகத்தை வளர்ப்பதற்கு ஏற்ற நிலப் பகுதி இதுவேயாகும். முல்லை நிலத்தில் இயற்கையை எதிர்பார்த்து நம்பி வாழவேண்டும். அங்கு வாழ்க்கை துன்பமாகத் தோன்றாமல், பொழுதுபோக்காகத் தோன்றக்கூடிய வகையில் இயற்கை மனிதருக்குத் துணைசெய்கிறது. கவலை குறைந்த இனிய எளிய வாழ்க்கை முல்லை நிலத்தில் அமைந்திருக்கிறது. ஆழமாகச் சென்று பார்த்தோமானால், மனிதர் நாகரீகம் பெற்று வளரத் தொடங்கியது முல்லை நிலத்திலேயே ஆகும். மக்கள் ஓர் இனமாய்க் கூடிச் சமுதாயமாய் அமைந்ததும் முதன் முதலில் முல்லை நிலத்திலாகும். அதனால்தான், முல்லை நிலத்தில் பசுக்கைள மேய்ப்பதற்கு உதவும் கருவியாகிய கோல், மக்களினத்தின் தலைவருடைய ஆட்சிக்கு அறிகுறியாக அமைந்தது. அவர் ஏந்திய கோல், அவருடைய குடிமக்கள் வணங்கும் கோலாக நின்றது. அவர் நல்ல முறையில் நேர்மையாக ஆளும் காலத்தில் அந்தக் கோல் செங்கோல் என புகழப்பட்டது. அவர் நெறிமுறை தவறி ஆளும் காலத்தில் அதுவே கொடுங்கோல் எனப் பழிக்கப்பட்டது. அதுபோல், நாகரீகத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில் அந்தத் தலைவருக்குச் செல்வமாக விளங்கியவை மாடுகளே. அது பற்றியே மாடு என்றால், செல்வம் என்னும் பொருளும் அமைந்தது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை, என 400ம் குரலில் உரைக்கிறார் திருவள்ளுவர். ஆகவே, மனித சமுதாயத்தின் துவக்க காலம் முல்லை நிலத்திலேயே இருந்தது என்பதற்கான எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்