மாங்குரோவ் காடுகள் மாங்குரோவ் காடுகள்  

இனியது இயற்கை–மாங்குரோவ் காடுகளை இழக்கும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள மாங்குரோவ் காடுகளின் ஒட்டு மொத்த பரப்பளவு தற்போது நான்கு சதுர கிலோ மீட்டர் வரை குறைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து மத்திய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் வனப்பரப்பு 5,188 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வனப்பரப்பு 26,364 சதுர கிலோமீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 83 சதுர கிலோமீட்டர் மட்டுமே அதிகம். தமிழ்நாட்டில் உள்ள மாங்குரோவ் காடுகளின் ஒட்டு மொத்த பரப்பளவு நான்கு சதுர கிலோ மீட்டர் வரை குறைந்துள்ளது என்பதுதான் இந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சி தரும் விடயங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 49 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு மாங்குரோவ் காடுகள் இருந்தன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த கணக்கெடுப்பில் இந்த எட்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 44  சதுர கிலோ மீட்டருக்கு மட்டுமே மாங்குரோவ் காடுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் 1.07 சதுர கிலோமீட்டர், திருவாரூரில் 3.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் அழிந்துள்ளதாகவும் இரண்டே ஆண்டுகளில் 4 சதுரகிலோமீட்டர் பரப்பளவு மாங்குரோவ் காடுகள் குறைந்திருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது என்றும் இந்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2022, 13:57