கடல்சார்ந்த பணியாளர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலர் நன்றி
மேரி தெரேசா: வத்திக்கான்
உலக அளவில் தொடர்ந்து வர்த்தகம் நடைபெற அளவிடமுடியாத உதவிகளை ஆற்றும் கடல் தொழிலாளர்களுக்கு, ஐ.நா. நிறுவனம் தன் ஆதரவை வழங்குகின்றது என்று, ஜூன் 25, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, கடல்சார்ந்த பணியாளர்கள் உலக நாளுக்கென்று வெளியிட்டுள்ள செய்தியில் உறுதி கூறியுள்ளார், ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.
கடல்சார்ந்த தொழில்களை ஆற்றுவோரின் பங்கு, மற்றும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கூட்டேரஸ் அவர்கள், தானியங்கள், எரிபொருள், நுகர்வுப்பொருள்கள், மற்றும், ஏனைய பொருள்களின் வர்த்தகத்தில் 90 விழுக்காடு கப்பல் போக்குவரத்தால் இடம்பெறுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக கப்பல்கள் மற்றும், அவற்றில் பணியாற்றுவோரின்றி, பொருளாதாரம் தடுமாற்றம் காணும் மற்றும், மக்களும் பசியால் வாடுவர் என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், உலகம், இத்தொழிலாளர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது மற்றும், மதிப்புவைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று சவால்கள்
பெருந்தொற்று பரவல், மற்றும் அது உருவாக்கியுள்ள நெருக்கடியால், பணி ஒப்பந்த நாள்களைக் கடந்தும் நீண்டகால வேலை, தடுப்பூசிகள், மருத்துவப் பராமரிப்பு இல்லாமை, குறுகிய கால விடுமுறை போன்ற பல சவால்களை, இத்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இத்தொழிலாளர்களின் அறிவு, பணித்திறமை, அனுபவம் ஆகியவற்றை மதித்து, இவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கேட்டுக்கொண்டு தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார், ஐ.நா.வின் அந்தோனியோ கூட்டேரஸ்.
உலகில் முதல் கடல் பயணம், கி.மு.3200ம் ஆண்டில் இடம்பெற்றது என்று கூறப்படுகிறது. (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்