பாலை நிலம் பாலை நிலம் 

இனியது இயற்கை: பாலைத் திணை

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்

மேரி தெரேசா: வத்திக்கான்

பண்டைத் தமிழர்கள், நிலத்தின் பண்பை அடிப்படையாக வைத்து, அதனை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்து நிலத்திணைகளாகப் பிரித்துக் கூறினர். இவை வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன. திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை எனவும், காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை எனவும், இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம், பாலைத் திணை எனவும் பகுத்து அறியப்பட்டது. "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அக்காலத்தில் ஒழுக்க நிலையிலும் திரிவு நிகழும். மழை பொழிந்த பின்னர், பாலை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். குடும்பத்தில் நிகழும் பிரிவும் அத்தகையதே. பாலை என்றவுடன் ஆப்ரிக்காவின் சகாரா, இந்தியாவின் தார் போன்ற தற்போதைய பெரிய பாலைவனங்களைக் கற்பனை செய்யக் கூடாது. மேலும், தமிழகத்தில் அவை போன்ற பகுதிகள் இருந்ததாக எந்தக் குறிப்பிலும் இல்லை. அந்தக் காலத்தில் வறண்ட பகுதியைக் குறிப்பிடவே ‘பாலை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இப்போது போலவே மழை குறைவான, நீர் குறைவான வறண்ட பகுதிகள் பண்டையத் தமிழகத்திலும் இருந்திருக்கத்தான் வேண்டும். மழை மறைவுப் பகுதிகளும், ஆறுகள் பாயாத பகுதிகளும் கடுமையான வறட்சியுடன்தான் இருந்திருக்க முடியும். அப்பகுதிகள்தான் பாலை என அழைக்கப்பட்டுள்ளன. சங்கப் பாடல்களை எடுத்துக்கொண்டால் பாலைத் திணைப் பாடல்கள் நிறைய உள்ளன. அப்படியொரு தனி நிலம் இருந்திருக்கவில்லையெனில், அந்நிலத்திற்கான தனியான இனம், வாழ்க்கை இயல்பு, தெய்வம், பொழுதுகள், ஒழுக்கம், தாவரங்கள், விலங்குகள் போன்றவை அந்தப் பாடல்களில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. நீரின்மையால் விவசாயமின்றி அந்நில மக்கள், வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்துண்ணும் கள்வர்களாக இருந்துள்ளனர். பாலை நிலத்தலைவர், காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள், மறவர் மற்றும் வேட்டுவர் (எயினர்) எனப்பட்டனர். பாலை நிலைத் தெய்வம், கொற்றவை. இந்நிலப் பறவைகள் பருந்து, கழுகு, மற்றும், புறா. உழிஞ, பாலை, இருப்பை ஆகியவை பாலை நில மரங்கள் ஆகும். மராம்பு, பாலை நில மலராகும். மான், செந்நாய் இந்நிலத்தின் விலங்குகள். பருந்து, காக்கை, புறா, ஆகியவை இந்நிலத்தின் பறவைகள். இந்நிலத்தின் நீர்நிலை, சுனை, கான்யாறு ஆகும். முழவு, கறங்கு, யாழ், சில்லரி, கிணை, துடி ஆகியவை பாலை நிலத்தின் இசைக்கருவிகள் ஆகும். (நன்றி விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2022, 14:53