டாங்கனிக்கா ஏரி டாங்கனிக்கா ஏரி 

இனியது இயற்கை: உலகின் 2வது பெரிய நன்னீர் ஏரி, டாங்கனிக்கா

டாங்கனிக்கா ஏரியின் தண்ணீர் காரத்தன்மை வாய்ந்தது. இந்த ஏரியோடு தொடர்புடைய ஈர நிலப் பகுதிகள், நைல் முதலைகள் வாழும் பகுதிகளாக உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

டாங்கனிக்கா ஏரி, ஆப்ரிக்கக் கண்டத்தின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரி, சைபீரியாவின் பைகால் ஏரிக்கு அடுத்த நிலையில், உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் மற்றும், ஆழமான ஏரியும் ஆகும். இது, டான்சானியா (41%), சாம்பியா, காங்கோ மக்களாட்சி குடியரசு (45%), புருண்டி ஆகிய நான்கு நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஏரியின் நீர், காங்கோ ஆற்றில் கலந்து, இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்கிறது. "டாங்கனிக்கா" என்ற சொல்லுக்கு, சமவெளி போன்று பரவியிருக்கும் மிகப் பெரிய ஏரி என்பது பொருள்.     இந்த ஏரி, உலகிலுள்ள மொத்த நன்னீரில் 16 விழுக்காட்டைக்  கொண்டிருக்கிறது. டாங்கனிக்கா ஏரி, 676 கி.மீ நீளம், மற்றும், சராசரியாக 50 கி.மீ அகலத்தைக் கொண்டு, 32,900 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது. இதன் சராசரி ஆழம் 570 மீட்டராகவும், அதிகபட்ச ஆழம் 1,470 மீட்டராகவும் உள்ள இந்த ஏரி, 18,900 கன கிலோ மீட்டர் கொள்ளளவைக் கொண்டு, அதில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏரியாக உள்ளது. ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ரூசிசி ஆறு, இந்த ஏரியில், பாய்கின்ற ஆறுகளில் முக்கியமானதாகும். டாங்கனிக்கா ஏரியின் உயரமான அமைவிடம், அதிக ஆழம், காலநிலை மாற்றங்கள் நிறைந்த கொந்தளிப்பான எரிமலை நிலப்பகுதி, மெதுவாக நிரம்பும் ஏரி அமைப்பு, மற்றும் மலைப்பாங்கான இடம் ஆகியவற்றால், இது ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது. டாங்கனிக்கா ஏரியில் பல தீவுகள் அமைந்துள்ளன. அவற்றில், காங்கோ மக்களாட்சிக் குடியரசிலுள்ள காவாலா தீவு, மாம்பா-கெயெண்டா தீவு, மிலிமா தீவு, கிபிஷி தீவு,    சாம்பியாவிலுள்ள மடடொண்ட்வெ தீவு, கம்புலா தீவு ஆகியவை மிக முக்கியமானவை. டாங்கனிக்கா ஏரியின் நீர் காரத்தன்மை வாய்ந்தது. இந்த ஏரியோடு தொடர்புடைய ஈர நிலப் பகுதிகள், நைல் முதலைகள் வாழும் இடங்களாக உள்ளன. இந்த ஏரியில், பல்வேறு வகையான நன்னீர் ஆமை இனங்களும், இதில் மட்டுமே வாழக்கூடிய தண்ணீர் நாகப்பாம்புகளும் காணப்படுகின்றன. இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள், இந்த ஏரியைச் சுற்றிலும் வாழ்கின்ற பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் 25-40% சத்துணவுத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. தற்போது கிட்டத்தட்ட 800 மீன்பிடித் தளங்களில் இருந்து, ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியானது ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் வாழ்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. (உதவி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2022, 15:41