வாரம் ஓர் அலசல்: வெற்றியின் இரகசியங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
திவ்யா ரோஸ்லின், இவர் திண்டுக்கல், புனித வளனார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இவ்வாண்டு பிளஸ் 2 படித்து முடித்துள்ள மாணவி. திவ்யாவும், அதே பள்ளியில் படித்த பி.ராஜி என்ற மாணவியும், கடந்த வாரத்தில் தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில், 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். சுப்ராம்பேட்டையைச் சேர்ந்த மாணவி திவ்யா தன் தேர்ச்சி குறித்து இவ்வாறு கூறியுள்ளார். பள்ளியில் தினமும் நடைபெறும் இறைவேண்டலில் தலைமை ஆசிரியர் கொடுத்த உற்சாகமூட்டும் வார்த்தைகள், பாடக்கல்வியோடு வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை ஆசிரியர்கள், கற்றுக்கொடுத்தது, இன்னும், ஆசிரியர்கள், பெற்றோர், உற்றார், நண்பர்கள் என அனைவரும் அளித்த ஆதரவு ஆகியவையே, தான் வெற்றிபெறக் காரணமாக இருந்தன என்று, மாணவி திவ்யா அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார். அவரது அப்பா கூறுகையில், நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பம்தான், ஆனாலும் பிள்ளை படிக்கணும் என்ற ஆசையில் நாங்கள் அவளை வேலை செய்ய விடவில்லை என்று கூறியுள்ளார். அதே பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 586 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துள்ள பாத்திமா ரிஸ்கானா என்ற மாணவிக்கு அப்பா கிடையாது. ஆயினும் அம்மாவும் பாட்டியும் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்தார்கள் என்று, தன் வெற்றிக்குக் காரணமாக இருந்த பள்ளிக்கும், மற்றவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நகர்வலம் என்ற தலைப்பில் யூடியுப் ஊடகம் இம்மாணவிகளைப் பேட்டிகண்டு வெளியிட்டுள்ளது.
இந்நேரத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ள அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் நம் நல்வாழ்த்தும் பாராட்டுக்களும். அதோடு தேர்ச்சி பெறாதவர்களும், முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்து, தொடர்ந்து கல்வியில் முன்னேற வாழ்த்துகிறோம்.
பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா
குறைவான் மதிப்பெண்கள் அல்லது தேர்ச்சி பெறாத அன்பு மாணவச் செல்வங்களே, குஜராத் மாநிலம், பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா அவர்கள், தன்னைப் பொறுத்தவரை. மதிப்பெண்களுக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒருபோதும் தொடர்பில்லை என்று சொல்கிறார். துஷார் சுமேரா அவர்கள், பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மிகக்குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தற்போது அவர் மாவட்ட ஆட்சியராக உயர்ந்திருக்கிறார். நான் 10ம் வகுப்பில், ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள்தான் எடுத்திருந்தேன். கல்லூரி சேர்க்கைக்காகப் படிவம் நிரப்பும்போது, என் சொந்தப் பெயரை எழுதுவதில்கூட பிழைசெய்தேன். ஆனால், உறுதியான நம்பிக்கையும் கடின உழைப்புமே, என்னை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கின என, பிபிசி குஜராத்தி சேவையிடம் துஷார் சுமேரா அவர்கள் சொல்லியிருக்கிறார்.
ஆட்சியர் துஷார் சுமேரா
எனது சொந்த ஊர், குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள சோட்டிலா கிராமம் ஆகும். எனது தாய் கௌரிபென் பள்ளி ஆசிரியராக இருந்தவர். 12ம் வகுப்பிலும்கூட நான் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. பின், பிறரது ஆலோசனைகளுக்கு உட்பட்டு ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். என் கல்லூரிப் படிப்பில் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்க விரும்பினேன். ஆங்கிலத்தில் ஒரு பெயரை எழுதும்போது, முதல் எழுத்தை கேப்பிட்டல் எழுத்தாக எழுதவேண்டும் என்பதுகூடத் தெரியாது. என்றாலும், என் நம்பிக்கையை நான் இழக்கவில்லை. படிப்பைத் தொடர்ந்தேன். இந்நிலையில், உன் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினால் தினமும் தவறாமல் ஆங்கில நாளிதழ்களை வாசி என்று, என் பேராசிரியர் குப்தா எனக்கு அறிவுறுத்தினார். நான் என் கல்லூரியில் நாளொன்றுக்கு ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்பேன். அப்போது, ஒவ்வொரு வார்த்தையையும், வாக்கிய வடிவமைப்பையும் கூர்ந்து கவனிப்பேன். உலகப் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகள், பொருளாதாரம், நாட்டு நடப்பு உள்ளிட்ட தேசிய, பன்னாட்டு நிகழ்வுகளை குறித்து தெரிந்துகொள்ள இந்த ஆங்கில வாசிப்பு எனக்குப் பெரிதும் உதவியது. இப்படியாக என் இளங்கலை பட்டத்தைப் பெற்றேன். பின், முதுகலை கல்வியை முடித்த பிறகு, மாதம் 2500/- ரூபாய் ஊதியத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது. எல்லாரையும்போல நானும், இந்த அரசு வேலையால் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினேன்.
அப்போது சுரேந்தர்நகர் மாவட்டத்தின், வளர்ச்சித்திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராவ் அவர்களிடம், எனது ஐஏஎஸ் ஆசையை தெரிவித்தேன். அதற்கு அவர், "நீ நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆகலாம். அடுத்த முறை என்னைச் சந்திக்கும்போது உன் தந்தையுடன் வா' என்றார். என் தந்தையிடம், நான் ஒரு வழக்கமான வேலையைச் செய்வதைவிட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதன் முக்கியத்துவத்தை அவர் தெளிவாக விளக்கினார். இது என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. பின்னர், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக விரும்பும் இளைஞர்களுக்கு உதவிவரும் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசியர் அம்ராபாலி மர்ச்சண்ட் குறித்து எனக்குத் தெரியவந்தது. அவரும் என்னால் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார். இதற்கும் மேலாக, "உன் கனவுகளைப் பாதியில் நிற்க நான் விட்மாட்டேன். என்ன ஆனாலும், நீ உன் இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும்" என்று என் தந்தை என்னை ஊக்கப்படுத்தினார். இதையடுத்து நான் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பாதுகாப்பான அரசு வேலையை விட்டுவிட்டு படிக்கச் செல்ல வேண்டும். எனக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று நான் விடுப்பு எடுக்கலாம் அல்லது வேலையை விடலாம். விடுப்பு எடுத்தால் என் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே நான், வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க முடிவு செய்தேன்.
தேர்வு சமயத்தில்,எங்கள் குடும்பம் கடினமான சூழ்நிலையைச் சந்தித்தது. அப்பாவுக்கு ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. நான் தேர்வுக்காக சுரேந்தர் நகர் சென்றிருந்த வேளையில்தான் எனக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து வந்த பிறகும், என் தந்தை என்னை, என் இலட்சியத்தை அடைய ஊக்குவித்தார். நான் வீட்டின் மூத்த மகனாக இருந்தபோதும் என் தம்பிகள்தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். நான் என் படிப்பில் தீவிரமாக இருந்தேன். ஏறத்தாழ ஐந்து 5 ஆண்டுகளுக்கு நான் எந்த விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. விடுப்புகூட எடுக்கவில்லை. என் மதிப்பெண் சான்றிதழ்கள் என் அறிவை அளவிடும் கருவிகள் அல்ல என்று நான் உறுதியாக நம்பினேன். உங்கள் நம்பிக்கை, கடின உழைப்பு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் உங்களை வெற்றிபெற வைக்கும். இவ்வாறு, பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா அவர்கள் கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி வஜுபாய் பர்சானா
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வஜுபாய் பர்சானா அவர்களும் கூறியிருக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் நாங்கள் வாழ்ந்தோம். எங்களுக்கு வெளியுலகம் தெரியாது. குடிமைப்பணி அதிகாரியாக வருவதற்கு என் தன்னம்பிக்கை மற்றும் வளமான அறிவாற்றல் மட்டுமே உதவின. உங்களுக்கு ஒரு வளமான அறிவாற்றலும் நம்பிக்கையுடன்கூடிய தகவல் தொடர்புத்திறனும் இருக்குமேயானால், உங்கள் மதிப்பெண் சான்றிதழ் ஒரு பொருட்டல்ல. உறுதிப்பாடு, நம்பிக்கை, கடின உழைப்பு இவை மட்டுமே உங்களை சாதனை நோக்கி அழைத்துச் செல்லும் என்று வஜுபாய் பர்சானா அவர்கள் கூறியிருக்கிறார்.
கடற்படை அதிகாரி மீரா
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, தன்னம்பிக்கையும் கடின உழைப்புமே முக்கியமானவை. கடந்த வாரத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் பகிர்ந்துகொண்டிருப்பதும் இவ்வாறுதான். தமிழகத்தில், படுகர் இனத்தைச் சேர்ந்த மீரா என்பவர், இப்போது கொச்சியில் உள்ள விக்ரந்த் போர்க்கப்பலின் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். படுகர் இனத்தவர், அக்காலத்தில் திப்புசுல்தான் படையினரிடம் இருந்து தப்பிக்க மைசூரில் இருந்து வெளியேறி, காடுகள் வழியாகவே நடந்துவந்து நீலகிரி மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தவர்கள். படுகர், பாடகர், கெளடர் என்றழைக்கப்படும் இவர்கள், நீலகிரியில் உள்ள தோடர்கள், காடர்கள், இருளர்கள் போல பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் அல்ல. ஆனாலும் தங்களுக்கு என்று தனித்தெய்வம், தனிவழிபாடு, வரிவடிவம் இல்லாத மொழி என்று தனித்தன்மையுடன் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வினத்தவர் பனியிலும் வெயிலிலும் கல் உடைத்தல், தேயிலை தோட்டங்கள், சாலைகள் அமைக்கும் தொழில் போன்றவற்றில் கடினமாக வேலைசெய்தவர்கள். இதன் காரணமாக, இன்று இவ்வினத்தவரில் சிலர் தேயிலை தோட்ட முதலாளிகளாகியுள்ளனர். சமவெளிப் பகுதியில் உள்ளவர்கள் போலவே கலாச்சார மாற்றத்தையும் மேற்கொண்டுள்ளனர். கல்விதான் நம்மை மேம்படுத்தும், மற்றும், மற்றவர் மத்தியில் அடையாளப்படுத்தும் என்பதையும் இவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். ஆதலால் தொலைவில் இருந்த பள்ளிகளுக்கு சிரமம் பாராமல், தங்களது பிள்ளைகளை அனுப்பி படிக்க வைத்தனர். இவர்களின் முயற்சியால், இப்போது படுகர் இனத்தில் நிறைய மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். இப்போது படுகர் இன மீரா அவர்கள், கடின பயிற்சிகளுக்குப்பின், முதன் முறையாக கடற்படை பெண் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆம். பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளராள தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார் - என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டன. ஆனால் ஒருமுறைகூட முயற்சியை நான் கைவிடவில்லை என்று. உலகில் தானாக முன்னேறியவர்கள் யாரும் இல்லை. நீ உழைக்கத் தயாராக இருந்தால் சிலர் உனக்கு உதவத் தயாராக இருப்பார்கள் என்ற கூற்றை மனதில் இருத்துவோம். தன்னம்பிக்கையோடு, கடினமாக உழைத்து வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்