முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து  

வாரம் ஓர் அலசல்: மனங்களை வெல்லும் அன்பெனும் ஆயுதம்

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதைவிட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள் - முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து

மேரி தெரேசா: வத்திக்கான்

மறைந்த அமிழ்தன் அவர்கள் எழுதிய முப்பால் உரை என்ற நுால் வெளியீட்டு விழா சென்னை வாணிமகாலில் நடந்தபோது, முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்கள் அந்த நூலை வெளியிட்டு உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர், தனது நீதிமன்றத்திற்கு வந்த பல வழக்குகளில் ஒரு வழக்கு தன்னை மிகவும் கலங்க வைத்தது என்று, அந்த வழக்கு பற்றி விவரித்தார். அன்று அந்த வழக்கைத் தொடுத்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர், என் எதிரே பரிதாபமாக நின்று இவ்வாறு பேசத் தொடங்கினார் என்று விவரித்தார்.

மனதை உருக வைத்த வழக்கு

ஐயா, எங்களுக்கு ஒரே மகள், என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது, நான் நாலைந்து வீட்டில் வீட்டுவேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்துத்தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்,வருகிறேன். பலரது கால்களில் விழுந்து மகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்தேன். வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால் அதைச் சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு மகிழ்ச்சியடைவதைப் பார்த்து மகிழ்வேன், அதேபோல, யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்கத் துவங்கிவிட்டாள். எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும், இனி அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் என்று நினைத்தபோது அவள் காணாமல் போய்விட்டாள், அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன், ஆகவே எப்படியாவது என் மகளைக் கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும். இவ்வாறு அத்தாய் கேட்டிருந்ததால், நீதிமன்றத்தின் ஆணைப்படி அவரது மகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம் பெண், ‛யாரும் என்னைக் கடத்தவில்லை! நான் 18 வயதைக் கடந்த பெண், எனக்கு பிடித்தவருடன் வாழ்வதற்காக நானேதான் விரும்பிச் சென்றேன்' என்று, நல்ல ஆங்கிலத்தில் பணம் சம்பாதிக்கும் தோரணையில் கூறினார். அப்போது நான், சரிம்மா.. அதுக்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அநாதரவாய் விட்டுட்டு போய்விட்டாயே, இது என்ன நியாயம் என்று கேட்டேன். அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. அதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை, ஆனாலும் என் மனம் கேட்கவில்லை, ‛சரிம்மா.. உன்கூட உன் அம்மா சிறிது நேரம் பேசவேண்டும் என்கிறார், ஒரு மணி நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன். இருவரும் பேசும்போது அந்த தாயின் பாசம், மகளின் அடிமனதை நிச்சயம் தொடும் என நினைத்தேன். ஆனால் அவர்கள் பேசி முடித்துவந்தபோது நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அப்போது அந்த தாய் இவ்வாறு கூறினார். ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன், என் மகள், அவ விருப்பப்படி விரும்பினவங்ககூடயே இருக்கட்டும், அவ சந்தோஷமா இருந்தா சரி' என்று சொல்லிவிட்டு‛ ஒரே ஒரு வேண்டுகோள்தான்யா, இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்க்கிறதுக்காக வந்துருக்காரு, அந்த மனுஷன்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா என்றதும் ‛எங்கம்மா உன் வீட்டுக்காரர்' என்று நான் கேட்டேன். அந்தம்மா கை காட்டிய இடத்தில் சுவரோடு சுவராக ஒருவர் சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார், அவருக்கு கைகால் விளங்காது என்பதால், துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்தி வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் நடப்பதை எல்லாம் பார்த்து அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த அன்பு மகளோ, இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் பறந்து சென்றுவிட்டார். உடனே அந்த தாய், ‛சரிங்கய்யா நாங்க புறப்படுறோம்' என்றதும், ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டேன். அதற்கு அத்தாய், ‛சொந்த ஊருக்குப் போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும், பேருந்து நிலையத்தில போய் பிச்சை எடுப்பேங்கய்யா, கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா, அப்புறம் ஊருக்கு போய்ட்டா, வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும், பிழைச்சுக்குவோம் ஐயா' என்றார்.  இதைக் கேட்டதும் நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்தனர். ‛இந்தாம்மா நீ பிச்சை எடுக்க வேணாம், என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க 'என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது. அதை அந்த அம்மாவிடம் கொடுத்து, உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல, ஊருக்கு போவதற்கான சிறு தீர்வுதான் என்று சொன்னேன். பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது.  இவ்வாறு அந்த நூல் வெளியீட்டு விழாவில் தன் உரையில் கூறிய முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்கள், பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதைவிட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள் என்ற வேண்டுகோளையும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். (நன்றி தினமலர் நிருபர் எல்.முருகராஜ் 23 மே 2022). ஆம். அறிவைக் கொடுப்பதைவிட அன்பைக் கொடுங்கள்.  வள்ளுவப் பெருந்தகையும், அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு, எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே (குறள் எண்:80) என்று எழுதியுள்ளார்.

ஊரே கொண்டாடும் தலைமை ஆசிரியர்

ஊரே கொண்டாடும் தலைமை ஆசிரியர் செங்கமலம் நாச்சியார்
ஊரே கொண்டாடும் தலைமை ஆசிரியர் செங்கமலம் நாச்சியார்

திருநெல்வேலி மாவட்டம், சிவகாசி ஒன்றியம், வடமலாபுரம் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செங்கமலம் நாச்சியார் அவர்கள், மாணவர்களை மட்டுமன்றி, மதுவுக்கு அடிமையான இளையோரையும் அன்பால் திருத்தியிருக்கிறார் என்று பிபிசி ஊடகத்தில் ஒரு செய்தி பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவர், அப்பள்ளியில், 2018ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர் பள்ளி வளாகத்திலும், வாசல்களிலும் எப்போதும், குறிப்பாக, சனி ஞாயிறு நாள்களில் உடைந்த கண்ணாடி மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன. இவரும், ஆசிரியர்களும் சேர்ந்து அக்கண்ணாடிச் சிதறல்களைக் கூட்டி சுத்தம் செய்துவந்தனர். ஆயினும் இதற்குக் காரணம் யார் என்று கேட்கையில், வெளியூர் இளைஞர்கள் என்பதை அவர் அறிந்தார். யாரையும் திட்டமுடியாது, சண்டை போடவும் முடியாது என்பதை உணர்ந்த செங்கமலம் நாச்சியார் அவர்கள், குடிப்பதோடு பள்ளிச் சுவர்களையும் அசிங்கப்படுத்திவிட்டு அங்கேயே படுத்திருந்த இளைஞர்களிடம், ஒரு நாள் அவர், தம்பிகளா, இந்தக் கண்ணாடித் துண்டுகள் பிள்ளைங்க கால்லேயும் குத்தி அவர்களை மருத்துவமனைக்குக்கூட கொண்டுபோயிருக்கோம், நீங்க கண்ணாடித் துண்டுகளைத் தண்ணீர் டேங்கில் வீசறதால அந்த தண்ணீரைக் குடிக்கிறவங்க வயிற்றுக்குப் பாதகம் தரும், இந்தப் பள்ளி மாணவ மாணவிகள், உங்க அக்கா தங்கை பிள்ளைங்க, அல்லது உங்க தம்பி தங்கைகளா இருந்தா இப்படிச் செய்வீங்களா என்று கேட்டுள்ளார். உடனே அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துவிட்டதையும் அவர் கவனித்தார். இவர்களை எப்படித் திருத்துவது என்று சிந்தித்த அவர், தினமும் அன்பான வார்த்தைகளால் அவர்களிடம் பேசி வந்தார். ஒரு நாள் அந்த இளைஞர்களிடம், தம்பிங்களா, பள்ளிக்கூடத்திற்கு வெளியே போர் போட்டிருக்கிறேன், மூன்று தண்ணீர் குழாய்களும் அமைச்சு வைச்சிருக்கிறேன், 24 மணி நேரமும் தண்ணீர் வரும். அதை நீங்க பயன்படுத்தலாம், நல்லா குடிங்க, நல்லா விளையாடுங்க, யாரும் அதை அசிங்கப்படுத்தாபடி கவனிச்சுக்கங்க, இது நம்ம ஊரு, நம்ம பள்ளிக்கூடம், தூய்மைப் பள்ளி என்ற சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறேன், அது கிடைத்தால் அந்தப் பெருமை உங்களையே சாரும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குப் பிறகு, அப்பள்ளி வளாகத்தில் பீங்கான் போடறது, நெகிழித் தம்ளர்களை வீசுவது எல்லாமே படிப்படியாய்க் குறைந்துவிட்டன. இப்போது பள்ளி வளாகம் சுத்தமாக இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ள தலைமையாசிரியர் செங்கமலம் நாச்சியார் அவர்கள், நம் பிரச்சனைகளை இளைஞர்களிடம் அன்பால் எடுத்துச் சொல்லலாம், அவர்கள் பிரச்சனைகளையும் நம் பிரச்சனைகளாக நினைத்து அவற்றிற்குத் தீர்வு காண முயற்சிக்கலாம், இவ்வாறு செயல்பட்டால் சமுதாயத்தை வன்முறையற்றதாக மாற்றலாம் என்று கூறியிருக்கிறார். ஊரில் உள்ள இளைஞர்களை தன் அன்பால் திருத்தியவர் என, இவரை வடமலாபுரம் கிராம மக்கள் கொண்டாடுகின்றனர் என்று வார்டு உறுப்பினர் முனீஸ்வர் அவர்களும் இவர் பற்றிப் புகழ்ந்து கூறியிருக்கிறார்.. (பிபிசி 9 ஜூன் 2022).

அன்பெனும் ஆயுதம்

அன்பு பற்றி பேசாத மதங்களோ, நாவுகளோ இல்லை. வள்ளுவமும் 'அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்' என்று கூறுகிறது. இக்காலக் கட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளால் பலர், குறிப்பாக ஏழைகள், குறிப்பாக வயதான மற்றும் ஏழைப் பெற்றோர் தனிமையிலும், ஆதரவின்றியும் தவிக்கின்றனர். அவர்களின் உணர்வுகள், ஆசைகளைப் புரிந்துகொண்டு நாம் மனிதாரய் படைக்கப்பட்டதன் கடமையை நிறைவேற்றவேண்டும். அவர்களுக்குத் தேவையானது அன்பு ஒன்றே என்பதை உணருவோம். அந்த அன்பு எந்த வழியிலும் காட்டப்படலாம். வாழ்வில் அன்பை ஆயுதமாக ஏந்தியவருக்குத் தோல்வியே கிடையாது. சுவாமி விவேகானந்தர் சொன்னார் – முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய ஒரே வேலை தட்டிக்கொடுப்பது மட்டுமே என்று. அன்பால் உலகை வெல்வோம். அன்பால் இதயங்களை இணைப்போம். அறிவுக் கல்வியோடு அன்புக் கல்வியையும் கற்றுக்கொடுப்போம். அன்பில்லா அறிவு பயனற்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2022, 16:23