அமேசானில் காடழிப்பு அமேசானில் காடழிப்பு  

இனியது இயற்கை – மனிதர் மாறாவிட்டால் இயற்கை மாற்றிவிடும்

உலகளவில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 30 இலட்சம் ஹெக்டேர் அளவிற்குக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தமிழகத்தில் மாநில காடு வளர்ப்புத் திட்டம், தேசிய காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பெயரில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்கென செயல்பட்டு வரும் கிராம வனக்குழுக்கள், காடுகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, மரங்கள் அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டு காடுகள் அதிகம் அழிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, மரங்கள் வளர்ப்பு மற்றும் காடுகளின் பரப்பை அதிகரித்தல் ஆகிய விடயங்களில் வனத்துறை தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

உலகெங்கினும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் உலக வெப்பமயமாதல் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மனிதர் வாழ்வதற்கு ஏற்ற கோள் பூமி மட்டுமே என்பதால் 2011-ஆம் ஆண்டு அனைத்துலக வன ஆண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 70 இலட்சம் பரப்பளவிற்குக் காடுகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் மட்டும் 40 விழுக்காடு பரப்பளவிலும், நீலகிரியில் 60 விழுக்காடு பரப்பளவிலும் காடுகள் உள்ளன. உலகளவில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 30 இலட்சம் ஹெக்டேர் அளவிற்குக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மனிதரின் வாழ்விடத் தேவைகள் அதிகமாவதே சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது. இந்நிலையை மனிதர் மாற்றாவிட்டால், இயற்கை மனிதர் வாழ்வை மாற்றிவிடும் என்பது உறுதி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2022, 13:45