சிறாரின் உரிமைகள் பாதுகாப்பு சிறாரின் உரிமைகள் பாதுகாப்பு  

உரிமைகள் மீறப்படும் சிறாரைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை

சிறார், கடத்தலிலிருந்து தப்பித்து வந்தாலும், அல்லது அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும், அதற்குப்பின்னும், அவர்கள் தங்களின் குழுமங்களோடு இணைவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர் - ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆயுதம் தாங்கிய மோதல்களில் கடத்தப்படுகின்ற மற்றும், ஏனைய கடுமையான உரிமை மீறல்களை எதிர்கொள்கின்ற சிறாரைப் பாதுகாப்பதற்கு, வல்லுநர்களுக்கு உதவும் வகையில், ஐ.நா. அதிகாரி ஒருவர் வழிகாட்டி கையேடு ஒன்றை ஜூலை 18, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார்.

ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிக்கியுள்ள சிறாரைப் பாதுகாப்பது குறித்த ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியாகப் பணியாற்றும் Virginia Gamba அவர்கள், செய்தியாளர் கூட்டத்தில் இக்கையேட்டை வெளியிட்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறாரைக் கொலைசெய்வது, மற்றும், முடமாக்குவது, படைப்பிரிவுக்குத் தெரிவுசெய்வது, பாலியல் வன்முறை, கடத்தல், பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் தாக்குதல், மனிதாபிமான உதவிகளைத் தடைசெய்தல் ஆகிய சிறாருக்கு எதிரான ஆறு கடுமையான உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று Gamba அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரிமை மீறல்கள், சிறார் கடத்தப்படும் காலக்கட்டத்தில் இடம்பெறுகின்றன என்றும், அச்சமயத்தில் அவர்களைப் போரிட அனுப்புதல், பாலியலுக்குப் பயன்படுத்தல், கொலைசெய்தல், உறுப்புக்களை முடமாக்குதல் போன்ற உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் Gamba அவர்கள் கூறியுள்ளார்

சிறார், கடத்தலிலிருந்து தப்பித்து வந்தாலும் அல்லது அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும், அதற்குப்பின்னும், அவர்கள் தங்களின் குழுமங்களோடு இணைவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும், அந்த ஐ.நா. அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறார் கடத்தப்படல் 2020ஆம் ஆண்டில் 90 விழுக்காடும், அந்நிலை 2021ஆம் ஆண்டில் மேலும் 20 விழுக்காடும் அதிகரித்திருந்தன எனவும், இவ்விரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சொமாலியா, காங்கோ மக்களாட்சி குடியரசு, சிரியா, புர்கினா ஃபாசோ, சாட் ஏரிப் பகுதி போன்ற பகுதிகளில் இக்கடத்தல் அதிகமாக இடம்பெற்றது எனவும் Gamba அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2022, 15:27