கொல்கத்தா சந்தையில் மக்கள்  கொல்கத்தா சந்தையில் மக்கள்  

வாரம் ஓர் அலசல் - அச்சுறுத்தும் மக்கள் தொகை பெருக்கம்

உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் மக்கள் தொகை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, நாடுகளில் உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

2022 ஆம் ஆண்டின் உலக மக்கள்தொகை தினத்தின் கருப்பொருள் "800 கோடியின் உலகம்: அனைவருக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி - வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் - அனைவருக்கும் உரிமைகள் மற்றும் அவர்களின் தேர்வுகளை உறுதிசெய்தல்" என்பதாகும்.

1800ஆம் ஆண்டில் நூறு கோடியைத் தொட்ட உலக மக்கள் தொகை, முதன் முதலில் 1987ஆம் ஆண்டில் 500 கோடியை நெருங்கியதும் இந்த உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத்திட்ட துறை வலியுறுத்தியது.  2057ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை தொடர்ந்து ஆயிரம் கோடியை  எட்டக்கூடும்.

உலக மக்கள் தொகையில் 31.1% கிறிஸ்தவர், 24.9% முஸ்லிம்கள். மதம் என்று பார்க்கும்போது, மூன்றாவது இடத்தில் இந்து மதம் 15.16 விழுக்காட்டுடன் நிற்கிறது. உலகில் மதம் சாராதவர், மற்றும் மத நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை 15.58 விழுக்காடு. இந்தியாவை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகை 780 கோடியாக உள்ளது. இந்தியா, உலக மொத்த மக்கள் தொகையில் 17.74 விழுக்காடு.

1979 ஆம் ஆண்டு சீனாவில் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்ட ஒரு குழந்தை திட்டம் விளைவாக, பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து நிமிடத்திற்கு 11 குழந்தைகள்தான் பிறக்கின்றன. இது இந்தியாவைவிட மிக்குறைவு. நிலப்பரப்பில் இந்தியாவைவிட  மும்மடங்கு பெரிதாகவுள்ள சீனாவில் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இந்தியாவோ பரப்பளவில் சிறியது. 2050ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சி 160 கோடியாக உயர்ந்து, உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு நிலையை எட்டினாலும்கூட, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் அதற்கான இலக்கு அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில் உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். 2060ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியாக அதிகரித்தால் ஆப்ரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பெரும் அவலத்தைச் சந்திக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

மக்கள் தொகை பெருக்கம், நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும். உணவு உற்பத்தி மட்டுமல்லாது மின் உற்பத்தியின் தேவையும் அதிகமாகி தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது. வளர்ச்சியற்ற உலகம், இயற்கைப் பாதிப்புகள் போன்றவற்றால் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு எப்படிப்பட்ட உலகத்தை நாம் கொடுக்க இருக்கின்றோம் என்பது குறித்து சிந்தித்து முன்னோக்கி பார்க்க அழைக்கின்றது. திட்டமிடப்படாத கருவுறுதல், கல்வியறிவின்மை போன்றவற்றாலேயே மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை பெருகுகின்றது. இதனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்களைவிட 20 ஆண்டுகள் ஆயுள்காலம் குறைபடும் நிலையும் உருவாகும்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த இந்திய நாட்டின் மக்கள்தொகை நூறாண்டுகளில் 100 கோடியாகவும், 165 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 600 கோடியாகவும் அதிகரித்தது. 2011ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 700 கோடியாக அதிகரித்து, தற்போது 800 கோடியை நெருங்கி வருகிறது. இதேபோல, தமிழக மக்கள்தொகை 1901ம் ஆண்டில் 1.92 கோடியாக இருந்தது, தொடர்ந்து, 1951ம் ஆண்டில் 3.01 கோடி, 1961ஆம் ஆண்டில் 3.3 கோடி, 1960 முதல் 1970 வரையிலான காலக்கட்டத்தில் 22.3 விழுக்காடு அதிகரித்து, 1971ஆம் ஆண்டில் 4.11 கோடியாக இருந்தது. அதன்பின், தீவிர குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களால் மக்கள்தொகை பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால், 1981ஆம் ஆண்டில் 4.8 கோடியானது. தொடர்ந்து, 1991-ல் 5.5 கோடி, 2001ம் ஆண்டில் 6.24 கோடி, 2011ஆம் ஆண்டில் 7.24 கோடியாக இருந்த தமிழக மக்கள்தொகை தற்போது 8 கோடியை கடந்திருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழக மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்துள்ளது.

குடும்பத்தை திட்டமிடல், பாலின சமத்துவம், அன்னையர் ஆரோக்கியம் சுற்றுச்சூழல் நலன் கருதி ஒவ்வொருவரும் மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  ஐ.நா. நிறுவனத்தின் அறிக்கையின் படி, உலகில் ஒரு நாளைக்கு 800க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை பிறப்பின்போது இறக்கின்றனர். உணவு, நீர், சுற்றுச்சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், நலவாழ்வுப் பிரச்சனைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மக்கள் தொகை அதிகரிக்கும்போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது. மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த  முயற்சிக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வரிகள் நாம் வாழும் இந்த பூமிக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து விழிப்புணர்வு பெறுவோம், விழிப்புணர்வு அளிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2022, 15:53