இனியது இயற்கை : தொண்டை நாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தொண்டை நாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அதன் பிற பகுதிகள் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, கொங்கு நாடு என்பன.
சேக்கிழார் பிறந்த தொண்டை நாடு, வடக்கே வேங்கடம் முதல், தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப்பரப்பு ஆகும். இதில் தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களும், தற்போது, ஆந்திராவிலுள்ள நெல்லூர், சித்தூர் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும். இந்த நாட்டில் மலைகள் உண்டு. அவை காளத்தி, திருப்பதி, திருத்தணிகை, வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன. இந்த நாட்டில் ஒரு காலத்தில் காடுகள் பல இருந்தன. இந்த உண்மையை ஆற்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு முதலிய இக்கால ஊர்ப் பெயர்களைக் கொண்டும் உணரலாம்.
ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட சோழ அரசருள் மிகச் சிறந்தவரான கரிகாலன், குறும்பரை வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றிய முதல் சோழன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. பின்னர் வந்த சோழ அரசனுக்கும் நாகர் இன பெண் ஒருவருக்கும் பிறந்த தொண்டைமான் என்பவர், சோழர் பிரதிநிதியாக இருந்து இந்த நாட்டை ஆண்டதால் இந்த நாடு தொண்டை நாடு எனப்பட்டது என்று கூறுவதும் உண்டு. அவ்வேளையில் காஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிறகு இந்த நாடு பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பல்லவர் ஆட்சி ஏறக்குறைய அறுநூறு ஆண்டு காலம் இருந்தது. மாமல்லபுரம் சிறந்த பெரியபட்டிணமாக இருந்தது.
காஞ்சி பழைய காலத்தில் நான்கு சமயங்களுக்குப் பெயர் பெற்ற நகரமாக இருந்தது. அவை சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பன. காஞ்சியில் சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. சைவப் பெரியார்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியவர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார் வாழ்ந்த காலமும் பல்லவர் காலமே ஆகும். பல்லவர்க்குப் பிறகு சோழர் மீண்டும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்