கேரளாவில் உள்ள வயநாடு மலைகள் கேரளாவில் உள்ள வயநாடு மலைகள்  

இனியது இயற்கை : கேரள வயநாடு மலைகள்

ஏறக்குறை 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான மீன்முட்டி நீர்வீழ்ச்சி, வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்துக்கு வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது வயநாடு எனும் மலை சூழ் பசுமை மாவட்டம். இந்த மாவட்டம் அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் சூழல்களையும் கொண்டது. இங்குக் கண்டு இரசிப்பதற்கு, முக்கியமாக மீன் முட்டி நீர்வீழ்ச்சி, சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சி, செம்பரா சிகரம், பானசுரா அணைக்கட்டு, காட் காட்சி முனை, முத்தங்கா காட்டுயிர் பூங்கா, எனப் பல உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கும் செம்பரா சிகரம் வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மேப்பாடி அருகில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் ஆகும்.

வடநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை. நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும். நீலிமலையில் அமைந்துள்ள, கண்கவர் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் வயநாட்டையும் இணைக்கும் முக்கியச் சாலையிலிருந்து 2 கி.மீ. நடந்து செல்லும் துரத்தில் உள்ளது. ஏறக்குறைய 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான இது வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

வயநாட்டில் வருகையாளர்களை ஈர்க்கும் மற்றுமொரு நீர்வீழ்ச்சி செதலயம் நீர்வீழ்ச்சியாகும், இது வயநாட்டின் சுல்தான் பத்தேரிக்கு அருகில் அமைந்துள்ளது. மீன்முட்டியை ஒப்பிடும்போது இது சிறிய நீர்வீழ்ச்சியாகும்.

பட்சபாதாளம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள், பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன.

வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் கரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ள வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம், காந்தன்பாரா நீர்வீழ்ச்சி, வயநாடு வனவிலங்கு சரணாலயம், நீலிமலா காட்சி முனை, குருவத்வீப், எடக்கல் குகைகள் எனப் பலவற்றைத் தன்னுள்ளே அடக்கி அழகுடன் நிற்கிறது வயநாடு மலை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2022, 15:10