இனியது இயற்கை - அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
மெரினா ராஜ் - வத்திக்கான்
கேரளா-பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் 237.52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைந்துள்ளது அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா. சத்தமிடும் சில்வண்டுகள், பறவைகளின் ஓசைகள் போன்ற எந்த விதமான சத்தமும் இல்லாத இடமாக உள்ளதால் இப்பள்ளத்தாக்கு அமைதியான பள்ளத்தாக்கு என்று பெயர் பெற்றது. அறிவியலாளர்கள், தொழில்முறை அறிவியல் ஆய்வு மேற்கொள்பவர்கள், அறிஞர்கள் மற்றும் களப்பணி உயிரியலாளர்கள் ஆகியோருக்கு அமைதியான இவ்விடம் உண்மையிலேயே ஒரு நந்தவனமாக உள்ளது. பூங்காவின் பல்லுயிரியலை அச்சுறுத்தும் ஒரு நீர்மின் திட்டத்திற்கான திட்டங்கள் 1970 களில் ஒரு சுற்றுச்சூழல் சமூக இயக்கத்தை "அமைதி பள்ளத்தாக்கை காக்கும் இயக்கம்" என்று ஆரம்பித்துப் போராடத் தூண்டின. இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டு 1980 இல் இப்பூங்கா உருவானது.
கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் நீலகிரியிலிருந்து உற்பத்தியாகி பள்ளத்தாக்கு முழுவதையும் கடந்து ஆழமான பள்ளங்களின் வழியாக சமவெளிப்பகுதிகளை நோக்கி ஓடும் குந்தியாறு ஒரு போதும் பழுப்பாக மாறாமல் மிகத்தெளிவாக, வற்றாமல் காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு தனிச்சிறப்பான வெப்பமண்டல மழைக்காடுகளாக, உலகில் வேறெங்கிலும் காணமுடியாத சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகையை கொண்டுள்ளதாக இருக்கும் இப்பள்ளத்தாக்கு நீலகிரி உயிரியல் பூங்காவான தேசிய பூங்காவின் மையப்பகுதியில் உள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களில் மல்லிகை வகைகள் மட்டும் 110. மேலும் 34 வகை பாலூட்டிகள், 200 வகை பட்டாம் பூச்சிகள், 128 வகை வண்டுகளில்,அறிவியலில் கண்டுபிடிக்கப்படாத 10 புதிய வகை வண்டுகள், 150 வகை பறவைகள் அதிலும் தென் இந்தியாவில் மட்டுமே காணப்படும் சிறப்பான 16 வகைப் பறவைகள் இங்கு காணப்படுவதால் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்லும் இடமாக இவ்விடம் சிறப்புற்றுத் திகழ்கின்றது. (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்