வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி மலை வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி மலை 

இனியது இயற்கை: வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி மலை

கோடை காலமாகிய ஜூலையில்கூட டெனாலி மலையின் வெப்பநிலை -30 முதல் -50 டிகிரி இருக்கும் என்று கூறப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி மலை, கடல்மட்டத்திற்கு மேலே 6,194 மீட்டர் (2015ஆம் ஆண்டின் புவியியல் ஆய்வுப்படி 20,320 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. டெனாலி மலை, எவரெஸ்ட், அக்கோன்காகுவா ஆகிய இரு மலைச் சிகரங்களுக்கு அடுத்தபடியாக, உலகில் மூன்றாவது மிகவும் புகழ்பெற்ற மற்றும், இப்பூமியில் தனித்துநிற்கும் மூன்றாவது உயரமான சிகரத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா மாநிலத்தில் அமைந்துள்ள இம்மலையைச் சுற்றி டெனாலி தேசிய பூங்காவும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1896ஆம் ஆண்டில், தங்கக் கனிமத் தேடுதலில் ஈடுபட்டிருந்த ஒருவர், அப்போதைய அரசுத்தலைவர் வேட்பாளராக இருந்த வில்லியம் மிக்கின்லி என்பவரின் பெயரை, இம்மலைக்குச் சூட்டினார். இந்த வேட்பாளர் அதற்கு ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராகவும் பதவியேற்றார். எனவே இம்மலைக்கு, மிக்கின்லி என்ற பெயரே 1917ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆயினும் இம்மலையைச் சுற்றி வாழ்ந்துவந்த Koyukon Athabaskan இன மக்கள், இந்த மலைச்சிகரத்தை டெனாலி என்றே நூற்றாண்டுகளாக அழைத்துவந்தனர். Koyukon மொழியில் டெனாலி என்பது, உயரம் என்று அர்த்தம். தற்போது மிக்கின்லி மலையின் அதிகாரப்பூர்வ பெயர் டெனாலி ஆகும். 1903ஆம் ஆண்டில் James Wickersham என்பவர் முதன் முதலில் இம்மலைச் சிகரத்தைத்தொடும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதில் அவர் வெற்றியடையவில்லை. பின்னர் 1913ஆம் ஆண்டு ஜூன் 7ம் தேதி  Hudson Stuck, Harry Karstens, Walter Harper, Robert Tatum ஆகிய நால்வரும், டெனாலி மலையின் தெற்குச் சிகரத்தில் ஏறினர். இம்மலைச்சரிவுகளில் ஐந்து பெரிய பனி ஆறுகள் ஓடுகின்றன. கோடை காலமாகிய ஜூலையில்கூட டெனாலி மலையின் வெப்பநிலை -30 முதல் -50.7 செல்சியுஸ் டிகிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெனாலி மலையின் 5,700 மீட்டர் உயரத்தில் அதன் காலநிலை - 83.4 செல்சியுஸ் டிகிரியாகும் (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2022, 14:57