பிரான்ஸ் நாட்டு மலைகள் பிரான்ஸ் நாட்டு மலைகள் 

இனியது இயற்கை - மலைகளின் சிறப்பு

மனித குலத்திற்கு தோழனாக தோள்கொடுக்கும் மலைகளின் முக்கியத்துவத்தை, உன்னதத்தை, மேன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மலைகளின் சிறப்பு என்னவென்றுப் பார்த்தோமானால், அதில் வாழும் பல்லுயிர்களும், மரங்களும், அவற்றினிடையே ஆரவாரத்தோடு ஓடும் சிற்றருவிகளும் கண்முன்னே வருகின்றன. மலைகளின் காடுகள்தான் மழையை வருவிக்கின்றன. அந்த மழைதான் நதியாகி மக்களையும் பயிர்களையும் வாழவைக்கின்றது. நமது பூமியிலுள்ள அனைத்து நன்னீர் வளங்களில், அறுபது முதல் எண்பது விழுக்காடு வரை மலைகள்தான் வழங்குகின்றன என்பது மலைகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. நன்னீர் தருவது மட்டுமல்ல, பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுலா, உணவு உற்பத்தி, பூர்வக்குடிகள் நலம் என பல வகைகளில் மனித குலத்திற்கு தோழனாக தோள்கொடுக்கிறது மலை. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் மலைகளைத்தான் நம்பியிருக்கின்றனர். கோடைகாலத்தில் நீரை வழங்கும் ஒரு சேமிப்புக் கிடங்காகத்தான் மலையை அண்ணாந்துப் பார்க்கின்றனர் மக்கள்.

இவ்வுலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மலைகளில் வாழ்ந்துவரும் நிலையில், மலைகளின் முக்கியத்துவத்தை, உன்னதத்தை, மேன்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றவேண்டும். இதை உணர்ந்துள்ள தமிழன் மலைகளுக்குத்தான் எத்தனையோ பெயர்களைச் சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றான். கிரி, மிசை, விண்டு, விலங்கல், அடுக்கல், வரை, நெடுவரை, இறும்பு, குன்று, பிறங்கல், பனிமலை, சிந்துமலை, இமமலை, கூபிகை, தேரி, எரிமலை, கன்மலை, அதன் கனிம வளங்களின் அடிப்படையில் கடுமலை, நாகமலை என்று மலைக்கு எத்தனையோ பெயர்கள். தமிழகத்தில் மலைகளை, தாயாக, அரசியாகப் பார்க்கின்றோம். ஊட்டியை மலை வாழிடங்களின் ராணி என்றும், கொடைக்கானலை மலை வாழிடங்களின் இளவரசி என்றும், வால்பாறையை மலைகளின் இளவரசி என்றும், ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைத்து பெருமைப்படுத்துகின்றோம். மலைகளைக் காப்பதன் வழியாக மனித குலத்தை வாழவைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 12:45