கொந்தளிக்கும் கடலலைகள் கொந்தளிக்கும் கடலலைகள்  

வாரம் ஓர் அலசல் - உலக சுனாமி விழிப்புணர்வு நாள்

தமிழில் ஆழிப்பேரலை என்றழைக்கப்படும் சுனாமி, ஒரு ஜப்பான் மொழிச் சொல்லாகும். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை என்பதன் அடிப்படையில் "துறைமுக அலை" என்ற பொருளில் சுனாமி என்றழைக்கப்படுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

சுனாமி அல்லது ஆழிப்பேரலை என்றழைக்கப்படும் பேரழிவு கடலில் உள்ள நீரின் இடர்ப்பெயர்ச்சியால் ஏற்படுகின்ற அலைகளின் தொடர் தாக்குதலாகும். இது பொதுவாக எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, நீருக்கடியில் உள்ள பெரிய பாறைகளின் வெடிப்பு போன்றவற்றால் ஏற்படுகின்றது. அதிக ஆபத்தினை ஏற்படுத்தும் இப்பேரழிவினின்று மக்களைக் காக்கவேண்டும் என்பதற்காக  ஐ நா பொதுச்சபையால் 2015 ஆம் ஆண்டு முதல், உலக சுனாமி விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 ஆம் நாள் கொண்டாட வலியுறுத்தப்பட்டது. சுனாமி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரழிவினால் உண்டாகும் ஆபத்துக்களைக் குறைக்கவும், தேவையான புதிய அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும்,  நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு ஐ.நா பொதுச்சபை அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாகத்  தாழ்வான தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 70 கோடி மக்களுக்கு சுனாமி பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.  

தமிழில் ஆழிப்பேரலை என்றழைக்கப்படும் சுனாமி, ஒரு  ஜப்பான் மொழிச் சொல்லாகும். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை என்பதன் அடிப்படையில்  "துறைமுக அலை" என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது. சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதால் ஏற்படக்கூடியது. ஜெட் விமானத்தின் வேகத்துக்கு இணையாகவும், சில சமயங்களில் அதைவிடக் கூடுதலாகவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த அலைகளின் வேகம் ஒவ்வொரு  சுனாமியின் போதும் வேறுபடுகின்றது. 17 ஆண்டுகளுக்கு முன் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை அழித்தது. இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து என கணக்கிடப்பட்டாலும், இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடியப் பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கைப் பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றதால், மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை அதிகமாக கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் தேதி, இந்த உலக சுனாமி விழிப்புணர்வு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுனாமிப் பேரழிவை சமாளிக்கத் தேவையான திறன்களை ஏற்படுத்த, வளரும் நாடுகளுக்கு வளர்ந்த உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கம் என்பது பற்றி ஐநாவின்  பொதுச் செயலாளர் அந்தோனியோ கூட்டரேஸ்,அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.  சிக்கலான உலகளாவிய நெருக்கடி அதிகரித்து வருவதால் அனைவரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும், சுனாமி அபாயத்தைக் குறைக்க, அனைத்துப் பேரிடர்களையும் சமாளிக்கும் திறனை உருவாக்குவதும் முக்கியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.   2030ஆம் ஆண்டுக்குள் பேரழிவுகளிலிருந்து உலகைக் காக்க, தற்போதையக் கட்டமைப்பைச் செயல்படுத்தவும், உரிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கும் போதுமான, நிலையான ஆதரவு அளிப்பதன் வழியாக, வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகளின்  ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒருங்கிணைத்த ஐ.நா.பொதுச்சபை 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது. அதில் பேசியவர்கள் இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்எனவும், இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினர்.

சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வழியாக அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதால், உலக சுனாமி விழிப்புணர்வு நாளில், மக்களிடம் சுனாமி பற்றிய பாதிப்புகள், அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது ஏற்படும் திடீர் மாற்றத்தால், கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகின்றன. இதனால் அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவதால் அங்க்கு வாழும் கடலோர மக்கள் அதிக பாதிப்படைகின்றனர். இதனைத் தடுக்க சுனாமி முன்னெச்சரிக்கை கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கும் முறையாகக் கொடுக்கப்படும்போது அவர்கள் இவ் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடிகின்றது. கடல் அடியில் நிலத்தட்டுக்களின் நகர்தல் ,மட்டுமல்லாமல், பூகம்பம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியனவற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது. சுனாமி அபூர்வமாக நிகழக் கூடிய ஒன்று என்றாலும், இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகின்றது. 

உலகம் கண்டிராத பேரழிவு

கடந்த 100 ஆண்டுகளில் 58 சுனாமி பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இதில் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் புள்ளி விவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏறக்குறைய ஒரு பேரிடரின் போது 4,600 பேர் பலியாகி இருக்கின்றனர். இவற்றில் அதிகபட்ச உயிரிழப்புகளைப் பதிவு செய்தது இந்தியப் பெருங்கடலில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலை சம்பவம். இதில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்து, இது வரை உலகம் கண்டிராத மிக மோசமான இயற்கை பேரிடரை விளைவித்தது. அதன்பிறகு தான் உலகின் பல்வேறு நாடுகளும் விழிப்புணர்வுடன் சுனாமியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின.  முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான மையங்களும், அமைக்கப்பட்டன. கடலோர உயிரியல் மண்டலப் பாதுகாப்பு, உலகம் முழுவதும் சூறாவளி, புயல்கள், வெள்ளம், சுனாமி போன்றவற்றால் எளிதில் பாதிக்கும் வகையில் 700 மில்லியன் மக்கள் கடலோர, தாழ்வான மற்றும் அதிக ஆபத்து கொண்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்று தெரிவிக்கின்றது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலையே பெரிதும் சார்ந்து வாழ்கின்ற இம்மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செய்வதற்கு வாய்ப்பில்லையாதலால், இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும்,  உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை வசதிகளைச் செய்து தர வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது.

விழிப்புணர்வு மற்றும் கல்வி

சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதுசார்ந்த அடிப்படை அறிவு பொதுமக்களிடம் இருக்கும் பொழுது, ஆபத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற யுனெஸ்கோவின் முன்னெச்சரிக்கைக் கருவிகள், மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்நாளில் மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே சூறாவளி, புயல் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இருக்கும் நிலையில் சுனாமி எச்சரிக்கை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இதனை கடலோரப் பகுதிகள் முழுமைக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும், எச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகள் விரைவாக சம்பந்தப்பட்ட மக்களைச் சென்று சேரும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுனாமி விழிப்புணர்வு அமைப்புகள் கருதுகின்றன. மாநில அளவில் நாடுகளளவில் கொடுக்கப்படுகின்ற  ஒத்துழைப்பு  சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களைக் கையாள்வதற்கு பல்வேறு நாடுகளுக்குப் பயனளிக்கும். குறிப்பிட்ட கடற்கரை மண்டலத்தில் சுனாமி ஏற்படப் போகிறது என்று கணித்து விட்டால் உடனே அருகிலுள்ள மண்டலங்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும்,. அதேசமயம் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய, மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் இவ்வமைப்புகள் வலியுறுத்துகின்றன. 

கடற்கரையில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த டில்லி ஸ்மித், தனது பெற்றோரிடம், ‘‘நாம் தற்போது ஆபத்தில் இருக்கிறோம். சுனாமி அலை கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடற்கரையை விட்டு நாம்தூரத்தில் சென்று விடவேண்டும்.என்று அறிவுறுத்தி கடற்கரையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறக் காரணமானாள். எனவே சுனாமியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியதற்காக பிரான்ஸின் குழந்தைகள் பத்திரிகை 2004-ம் ஆண்டின் மிகச் சிறந்த குழந்தை விருதை டில்லி ஸ்மித் சிறுமிக்கு வழங்கி சிறப்பித்தது.  மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனிடம் பாராட்டையும் அச்ச்சிறுமிப் பெற்றார். சூறாவளி, சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது கட்டடங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், இயற்கை பேரிடர்களைத் தாங்கும் வகையில் கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். மேலும் ஆபத்தான சூழல்களில் தஞ்சமடையும் வகையில்  பாதுகாப்பான இடங்களைக் கட்டமைத்து மக்களைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கொண்டாடும் வேளையில் இப்பேரழிவால் உயிரிழந்த மக்களையும் அவர்கள் பிரிவால் வாடும் ஒவ்வொருவரையும் நம் செபத்தில் நினைவுகூர்வோம். தகுந்த விழிப்புணர்வைப் பெறுவோம் அதனைப் பிறருக்கும் வழங்குவோம். இயற்கையைக் காப்போம் இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்போம். அனைவருக்கும் உலக சுனாமி விழிப்புணர்வு நாள் நல்வாழ்த்துக்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2022, 12:38