உலக எய்ட்ஸ் நாள் - இந்தியா - கோப்புப்படம் 2021 உலக எய்ட்ஸ் நாள் - இந்தியா - கோப்புப்படம் 2021 

வாரம் ஓர் அலசல் – உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளானது, தொற்றுநோயினால் ஏற்பட்டக் களங்கத்தைத் துடைக்கவும், வைரஸ் பற்றிய உண்மைகள் மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் மக்களுக்குக் கற்பிக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், மருத்துவ சிகிச்சை, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பாதுகாப்பது, மேலும், உலக அளவில் எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற செயல்களை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது. எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்கள், மற்றும் எச்.ஐ.வி என்னும் மனித நோயெதிர்ப்புக் குறைபாட்டு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் இந்நாளில் நாம் நினைவுகூர்கின்றோம். 1987ஆம் ஆண்டில், எய்ட்ஸ் பற்றிய உலகளாவிய செயல்திட்டத்தின் இரு அதிகாரிகளான ஜேம்ஸ் பன் மற்றும் தாமஸ் நெட்டர், தொற்றுநோய் பற்றிய சர்வதேச விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், விழிப்புணர்வுக் கல்வி கற்பிக்கவும் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளிற்கான யோசனையை முன்வைத்தனர்.

உலக எய்ட்ஸ் நாளானது, தொற்றுநோயினால் ஏற்பட்டக் களங்கத்தைத் துடைக்கவும்,  வைரஸ் பற்றிய உண்மைகள், மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் மக்களுக்குக் கற்பிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்பதையும், இதை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை மக்களுக்கும் அரசுகளுக்கும் நினைவூட்டும் நாளாக இந்நாள் அமைகின்றது. எச்.ஐ.வி, மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் சிவப்பு நாடா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, பலரும் உலக எய்ட்ஸ் தினத்தன்று சிவப்பு ரிப்பனை அணிகின்றனர். ஒவ்வோர் ஆண்டும், UNAIDS, WHO, மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்துரையாடிய பிறகு, உலக எய்ட்ஸ் பிரச்சாரம் உலக எய்ட்ஸ் தினத்தின்போது கடைபிடிக்க ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது. உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு “equalize”  சமப்படுத்துதல் என்ற தலைப்பில் உலகநாடுகளை எய்ட்ஸ் நாளைக் கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

Acquired ImmunoDeficiency Syndrome என்னும் எய்ட்ஸ் உலகில் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு புதிதாக உருவாகியுள்ள உயிர்கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்பு முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் உள்ள பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடிய பெண் ஒருவருக்கு 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக இது கண்டறியப்பட்டது. உலகெங்கிலும் சுமார் 3 கோடியே 80 இலட்சம் மக்கள் எச்ஐவி வைரஸுடன் வாழ்கின்றனர் எனவும், 1984ஆம் ஆண்டு முதல் 3 கோடியே 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் எய்ட்ஸால் தங்கள் உயிரை இழந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது. மருத்துவ சிகிச்சை வளர்ச்சியின் உதவியோடு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது பலவிதமான சமூக பொருளாதார காரணங்களால் எய்ட்ஸ் தொற்று நோய்க்கான சிகிச்சை கிடைப்பதில் சமத்துவம் இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டு இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற தலைப்பில் எய்ட்ஸ் நாளைக் கடைப்பிடிக்கிறது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆடை
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆடை

இந்தியாவில்  எயிட்ஸ் செயல்பாடுகள்.

இந்தியாவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் 2000ஆம் ஆண்டு மக்கள்தொகையில் 0.55 விழுக்காடு இருந்த எய்ட்ஸ் பரவல், 2010 ஆம் ஆண்டில் 0.32 விழுக்காடாகவும், 2021 ஆம் ஆண்டில் 0.21 விழுக்காடாகவும் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த பரவல் கட்டுப்படுத்துதலில் ஹிமாலயபிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன என்றும்,  தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 20 இலட்சத்திற்கும் அதிகமான எய்ட்ஸ் நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக எய்ட்ஸ் தினம் 2022

இந்த ஆண்டு எய்ட்ஸ் நாளின் தலைப்பாக “equalize” என்பதை தேர்வு செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். அதன்படி கடந்த காலங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் விகிதம், அவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகள், தேவைகள் மறுக்கப்படுதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல் போன்ற பலவிதமான பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. எனவே, உலக நாடுகள் பாகுபாடின்றி எய்ட்ஸ்  நோயால் பாதிக்கப்பட்டவர்களை வழிநடத்தவும், அவர்களுக்கான உரிமைகள், மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பல சுகாதார மையங்கள் இந்நாளில் இலவச எச்.ஐ.வி பரிசோதனையை வழங்குகின்றன. கொடிய நோய்களில் ஒன்றான எய்ட்ஸ் தொற்றை ஒழிக்க உலக நாடுகள், பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால், இதுவரை இந்த நோயை ஒழிக்க முடியவில்லை. ஒருவரைத் தொடுவதன் மூலமாகவோ அல்லது சளி மூலமாகவோ எய்ட்ஸ் பிறருக்கு பரவாது. மாறாக எய்ட்ஸ் நோய் கொண்ட ஒருவரின் இரத்தமானது நேரடியாக நம் உடம்பில் கலக்கும்போது மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும். எச்.ஐ.வி என்பது ஒருவரின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பொதுவாக பாதிக்கும். மேலும், இதனால் ஒருவருக்கு பாக்டீரியா அல்லது பூஞ்சையால் தொற்றுகள் ஏற்படக்கூடும்.

நோயின் அறிகுறிகள்

உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறையும்போது, பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து இறுதியில் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எச்.ஐ.வி. உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது. காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாய் அல்லது பிறப்புறுப்பில் புண், மூட்டு வலி, தொடர் களைப்பு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு, இருமல், மூச்சடைப்பு, நாக்கு அல்லது வாயில் நீடித்த வெண்புள்ளி அல்லது அசாதாரண புண், இரவில் அதிக வியர்வை, தோல் அரிப்பு, மங்கலான பார்வை போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

எச்.ஐ.வி. பரவும் வழிகள்

எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் உறவு கொள்ளுதல்,. தொற்றுள்ள இரத்தத்தால் அசுத்தமடைந்த ஊசியை மறுபடியும் பயன்படுத்துதல், தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவர் உடலுக்கு இரத்தம் செலுத்துதல், HIV தொற்றுள்ள தாயின் இரத்தத்தின் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கும், தாய்ப்பால் வழியாக,  பிறந்த குழந்தைக்கும் பரவுகிறது. பச்சை குத்தல், காது குத்தல், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவத்தின்போதும் எச்.ஐ.வி. பரவும் ஆபத்து உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Antiretroviral Therapy (ARV)என்கிற, எச்.ஐ.வி. தொற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் மூலம் அந்த கிருமியைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும்.

நோய்த்தடுப்பு முறை

எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க, தவிர்த்தல், உண்மையாய் இருத்தல், காப்புறைப் பயன்படுத்துதல் போன்றவைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. எச்.ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகள் வழியாக மட்டுமே இரத்த மாற்றம் செய்தல், மற்றும் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுதல் அவசியம். பாலியல் தொழிலாளிகள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால், இதுபோன்ற நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனை செய்வது நல்லது. எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது, அவர்களைத் தொடுதல், கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்புகளால் எச்.ஐ.வி. பரவுவதில்லை.

தமிழகத்தில் எய்ட்ஸ் பாதுகாப்புச் செயல்பாடுகள்

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் செயல்படும் தமிழக அரசு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதல் வைப்பு நிதியாக 5 கோடி ரூபாய் வழங்கிப் பாதுகாத்து வருகின்றது. அந்த நிதியில் இருந்து வரும் வட்டியின் மூலம் 1,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு, கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களையும் அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டு, 29 மாவட்டங்களில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகுகள் வழியாக எய்ட்ஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எச்ஐவி தொற்றைக் கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள், 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்கள் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வட்டார அளவில் 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, கருவுற்ற பெண்கள் அனைவருக்கும் மாவட்டம்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம், கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ், பால்வினை தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் தொற்று உள்ளோரை பரிவுடன் அரவணைத்து சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவுவோம். இந்நாளில் நடைபெறும் கூட்டங்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதன் வழியாக, நம்மாலான உதவிகளை நாம் அவர்களுக்குச் செய்வோம். உலகமெங்கும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு துன்புறும் அனைத்து உள்ளங்களோடும், குறிப்பாக, துன்புறும் சிறாரை சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம். நமது நல்லெண்ண செபஅலைகளால் அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருவோம். எய்ட்ஸ் இல்லா புது உலகம் படைக்க உழைக்கும் கரங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம். அனைவருக்கும் இனிய உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2022, 13:01