உக்ரேனியர்களுக்கு 2022ஆம் ஆண்டின் சக்கரோவ் விருது
மேரி தெரேசா: வத்திக்கான்
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் 2022ஆம் ஆண்டின் சக்கரோவ் விருது, துணிச்சல்மிக்க உக்ரேனிய மக்களுக்கு டிசம்பர் 14, இப்புதனன்று வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இரஷ்யா, உக்ரைனை மீது பகையுணர்வுகொண்டு அந்நாட்டை ஆக்ரமித்து நடத்திவரும் போர் உக்ரைன் மக்கள் மீது சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்று அப்பாராளுமன்றம் கூறியுள்ளது.
அதேநேரம் உக்ரேனியர்கள், தங்களின் வீடுகள், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் புவியியல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவும், தங்களின் சுதந்திரம், சனநாயகம், சட்டம்ஒழுங்கு, மற்றும் ஐரோப்பிய விழுமியங்களுக்காகவும் தினமும் போராடி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரேனியர்களுக்கு சக்கரோவ் விருதை வழங்கிய ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர்
Roberta Metsola அவர்கள் அம்மக்களின் துணிச்சல் மற்றும் தியாகம் குறித்து உரையாற்றி, அவர்களுக்கு ஆறுதலான செய்தியையும் வழங்கினார்.
ஐரோப்பா, உக்ரைனோடு உடனிருக்கிறது, நாங்கள் உக்ரைனைப் புறக்கணிக்கமாட்டோம்,
உக்ரேனியர்கள் வெறும் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, மாறாக, விழுமியங்களுக்காகவும் போரிட்டு வருகின்றனர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வாழ்விலுள்ள விழுமியங்கள், ஒவ்வொரு நாளும் வாழ்ந்து காட்டப்படுகின்றன என்று Metsola அவர்கள் கூறியுள்ளார்.
அந்நிகழ்வில் உக்ரைனில் போரில் கொல்லப்பட்ட அனைவரின் பெயரால் ஒரு நிமிடம் மொளனமும் கடைப்பிடிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் காணொளி வழியாகப் பேசிய உக்ரைன் அரசுத்தலைவர் செலன்ஸ்கி அவர்கள், போர் முடியும்வரைக் காத்திராமல், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்