இனியது இயற்கை - 2020ஆம் ஆண்டில் தோன்றிய வால்விண்மீன்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகின் கிழக்கு ஞானத்தின் பிறப்பிடம். எண்ணற்ற சூறாவளிகள், இயற்கைச் சீற்றங்கள் ஊடாகப் பரிணமித்த கிழக்கின் ஞானம், அஞ்ஞானத்தில் முகிழ்த்த வாழ்வியல். வானின் தோற்றத்தையும் அதன் மாற்றத்தையும் கருத்தாய்க் கணித்தறியும் பேராற்றல் கொண்டிருந்த ஞானம் அது. அதனாலேயே ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பே யூதோயாவை ஆண்ட ஏரோது அரசன் காலத்தில், அரிதாய்த் தோன்றிய விண்மீன் எழுதலை கீழ்த்திசை ஞானிகள் ஆய்வுசெய்து அதைப் பின்தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பெத்லகேம் வந்து அங்கு பிறந்திருந்த இறைஞானமாகிய இயேசுவை வணங்கினார்கள் (காண்க.மத்.2,1-2). வானில் விண்மீன்கள் அரிதாய் தோன்றும்போது உலகில் ஏதாவது அதிசயம் நடக்கும் என்பது ஞானிகளின் நம்பிக்கை.
இந்த அரியவகை விண்மீன்கள், வால்நட்சத்திரங்கள் அல்லது வால்விண்மீன்கள் என அழைக்கப்படுகின்றன. இவை, விண்வெளியில் தமக்கென ஒரு சுற்றுப்பாதையை அமைத்துக்கொண்டு சூரிய மண்டலத்தை சுற்றிவரும் மிகப்பெரிய பொருள்கள் ஆகும். சூரிய மண்டலத்தில் இருக்கும் பனிப் பந்துகள் போன்ற இவை, உறைபனி மற்றும், வாயுக்கள் கொண்டவை. இவற்றுக்குத் தன்னிலே ஒளி கிடையாது. ஆயினும் இவை விண்வெளியில் சுற்றிக்கொண்டே சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது அதன் பரப்பு விரிவடைந்து வெப்பமடைந்து வாயுக்களை வெளியிடத் தொடங்குகிறது. இதனால் இந்த விண்மீன்களில் வால் உருவாகத் தொடங்குகிறது. இந்த வால்கள், சிறிய பாறைத் துகள்கள், தூசிகள், கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனோக்சைடு, நீர்ப்பனி, மீத்தேன், அம்மோனியா போன்ற கரிமச் சேர்மங்கள் கலந்து உருவானவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் வாயுக்கள் மற்றும், தூசிகள் பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு வீசி எறியப்படும். இவை பூமிக்கு அருகில் வரும்போது மனிதரின் கண்களுக்குத் தெரிகிறது. கடந்த அரை நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால்விண்மீன்களில் NEOWISE C/2020 F3தான் அதிக வெளிச்சம் கொண்டதாக இருந்தது. 2020ஆம் ஆண்டில் இருபது நாள்களுக்குத் தோன்றிய அந்த விண்மீனை மீண்டும், 8786ஆம் ஆண்டில்தான் பார்க்க முடியும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா வானியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அவ்வாண்டு ஜூலை 3ம் தேதி சூரியனுக்கு அருகில் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்துசென்றது. இது சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையேயுள்ள சராசரி தூரத்தைவிட குறைவானதாகும். இந்த வால்விண்மீனாது அதன் சுற்றுப்பாதையை முடிக்க ஏறத்தாழ 6800 ஆண்டுகள் ஆகும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்