வளிமண்டலக் கோள்கள் வளிமண்டலக் கோள்கள் 

இனியது இயற்கை - புதன் (மெர்குரி)

புதன் கோளில் சூரிய வெளிச்சம் பூமியில் உள்ளதைவிட 11 மடங்கு அதிகம். புதன் சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இரண்டாவது கோளான வெள்ளியே அதிக வெப்பமான கோளாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் 

பூமி உட்பட சூரியனை மொத்தம் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் புதன் குறித்து இன்று காண்போம். 

புதன் (மெர்குரி) தான் சூரிய குடும்பத்தின் முதல் கோள். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள், மிகச்சிறியது. இதற்கு துணை கோள்கள் இல்லை. ஒருமுறை சூரியனை சுற்றிவர 88 நாட்கள் ஆகும். அதாவது, பூமியின் 88 நாட்கள், புதனின் ஓர் ஆண்டுக்குச் சமம். சூரியனைச் சுற்றும் கோள்களுள் மிகவேகமாகச் சுற்றும் கோள் இது ஆகும். சந்திரனைவிட அளவில் இது சற்று பெரியது. இங்கு சூரியன் பூமியில் இருந்து தெரிவதைவிட மூன்று மடங்கு பெரிதாகத் தெரியும். சூரிய வெளிச்சம் பூமியில் உள்ளதைவிட 11 மடங்கு அதிகம். புதன் சூரியனுக்கு  அருகில் இருந்தாலும், இரண்டாவது கோளான வெள்ளியே அதிக வெப்பமான கோளாக திகழ்கிறது. சூரியனுக்கு மிக அருகிலேயே இருப்பதால், சூரியனின் பளிச்சிடும் ஒளிக்கிடையே இதை பெரும்பாலான நேரங்களில் காணமுடியாது. ஆனால், அதிகாலையிலும், மாலை வேளையிலும் புதன் கோளை தொடுவானத்தில் பார்க்க முடியும். 

இது சூரியனிலிருந்து ஏறக்குறைய 5 கோடியே 8 இலட்சம் கி.மீ (0.39 வானவியல் அலகு) தொலைவில் சுற்றி வருகிறது. புதனின் வெளியில் உயிர்வாயு, சோடியம், நீர்மவாயு, ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகியன உள்ளன. பகலில் இதன் வெப்பம் 430° செல்சியஸ் வரையும், இரவில் -180° செல்சியஸ் வரையும் இருக்கிறது. ஆகவே இங்கு உயிர்வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. புதனைச் சுற்றி வளையங்கள் ஏதும் இல்லை. புதனுக்கு என்று தனியாக நிலவு இல்லை. இதன் புறவெளி மண்டலத்தில் சூரிய வெப்பக்காற்று மற்றும் சிறு குறு விண்கற்கள் மோதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள துகள்கள் நிரம்பியுள்ளன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2022, 08:25