இலங்கையில் 10 இலட்சம் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவிற்காக பெரும்போராட்டங்களை சந்தித்து வருவதாகவும், பண நெருக்கடியால் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. நிறுவனம் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பல பெற்றொர்கள் நிறுத்தியுள்ளதாகவும், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதிலிருந்து நிறுத்தப்படக்கூடும் எனவும் தெரிவிக்கிறது ஐ.நா. நிறுவனம்.
மிகவும் ஏழ்மை காரணமாக ஆண் குழந்தைகள், குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை நிறுத்தி சிறு சிறு வேலைகளில் வருமானம் ஈட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இலங்கையில் பெற்றோர் தங்கள் வருமானத்தை இழந்துள்ளது மட்டுமல்ல, குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது, வருங்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற கவலை வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக்கல்வி வழங்குவதில் நல்லதொரு இடத்தைக் கொண்டிருந்த இலங்கை நாடு, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கல்வியை தொடரமுடியாமல் வெளியேறும் சிறார்களின், அதிலும் குறிப்பாக தோட்டத்தொழிலாளர் குழந்தைகளின் எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது எனக்கூறும் பொருளாதார ஆய்வாளர் Dhanushka Sirimanne, 35 விழுக்காட்டு குடும்பங்கள் ஒருவேளை உணவுக்கே சிரமங்களை எதிர்நோக்கும் நிலையில், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்தியுள்ளனர் என்றார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையின் 41 இலட்சம் மாணவர்களுள் 14 இலட்சம் பேரின் கல்வியுரிமை மறுக்கப்படும் ஆபத்து இருப்பதாக Sirimanne மேலும் தெரிவித்தார்.(AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்